புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?
'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை தருவதற்கு வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம்.
ஊடகத்தினர் யாரும் தவெகவிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. செய்தி வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் ஒரு புறம் மட்டுமே கேள்வியை கேட்கிறார்கள். இருபுறமும் கேள்வியை கேட்டீர்கள் என்றால் அந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். சந்திக்கவே முடியாமல் எல்லைக்கு அப்பாற்பட்டு நாட் ரீச்சபிளில் இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.














