Celebrities share their memories with AVM Saravanan at his funeral | Cinema Vika...
நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பிரமுகரும் கொள்கைப் பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனின் பெயர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்கிறார்கள் உட்கட்சி விவரமறிந்த சிலர்.
நாம் தமிழர் கட்சிக்குள் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் 8.2% வாக்குகள் பெற்று மாநில அந்தஸ்த்தை எட்டிய நிலையில், சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பிலிருந்து வேட்பாளர்களை அறிவித்துவருகிறார் சீமான்.
அதன்படி நா.த.க-வின் அறிந்த முகங்களான இடும்பாவனம் கார்த்திக், பாத்திமா பர்கானா, வெண்ணிலா தாயுமானவன், இயக்குநர் களஞ்சியம், ஹூமாயூன், மரியா ஜெனிபர், ஹிம்லர், கோவை கார்த்திகா, அனிஷ் பாத்திமா, அபு பக்கர், சீதா லட்சுமி, மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்களை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார் சீமான். மேலும் பிரபலத்தன்மைக்காக கட்சிக்கு வெளியிலிருந்து வேட்பாளரை கொண்டுவரவும் தயாராக இருக்கிறதாம் நா.த.க.
எனினும் கட்சியில் நட்சத்திர தன்மைகொண்ட சாட்டை துரைமுருகனின் பெயர் பட்டியலில் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல் பேசுபொருளாகியிருக்கிறது. ஏற்கனவே 'சாட்டை வலையொளிக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை' என சீமான் அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் கட்சிக்குள் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் பேசுகையில், "'நான் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பிரசாரம் மேற்கொள்கிறேன், அண்ணன் போட்டியிடும் தொகுதியில் களப்பணி மேற்கொள்கிறேன்' என தாமாகவே விருப்பம் தெரிவித்ததால் சாட்டை துரைமுருகனுக்கு சீட் இல்லை எனக் கட்சிக்குள் பேசப்படுகிறது.
அதேசமயம், தேர்தல் செலவீனங்களை எதிர்கொள்ளவோ, களப்பணிகளை சமாளிக்கவோ எங்களால் முடியாது, தயவுசெய்து வேட்பாளர்களை மாற்றிவிடுங்கள்.. நாங்கள் பிரசாரம் செய்கிறோம்' என பெண் நிர்வாகிகளும் இளைய புள்ளிகளும் சிலர் அண்ணன் சீமானிடம் கோரிக்கை வைத்தனர். மற்றவர்களின் கோரிக்கைகளையெல்லாம் மறுதலித்த சீமான், சாட்டையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது புதிராகவே இருக்கிறது" என்றனர்.
இதன் பின்னணி அறிந்த விவரப்புள்ளிகள் சிலரோ, "சாட்டை வலையொளியில் சீமானுக்கு விரும்பத்தகாதவற்றை தொடர்ச்சியாக பேசிவருகிறார் துரைமுருகன். ஆகையால்தான் சாட்டைக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என தடாலடியாக அறிவித்தார். அதன்பிறகும் சாட்டையின் சில பேச்சுகள் அண்ணனுக்கு பெரும் சஞ்சலத்தை தருவதால் அவர்மீது கொஞ்சம் கோபம் இருக்கத்தான் செய்கிறது. மறுமுனையில், சாட்டை துரைமுருகனும் சீட் பெற வேண்டும் என எந்த தீவிரமும் காட்டாததால் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவரது ஆதரவு பெற்ற சிலர் இந்த தேர்தலில் களமிறங்குகிறார்கள்" என்றனர்.
அரசியல் நோக்கர்களோ சிலரோ, "நா.த.க போன்ற வளர்ந்து வரும் கட்சிகளில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் 'பிரசாரம் செய்கிறேன்' என ஒதுங்கிக் கொள்வதும், கட்சிக்குள் நீடிக்கும் பனிப்போரால் சீட் தர மறுப்பதும் கட்சிக்கு நல்லதல்ல. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருப்பதால் எதுவும் மாறலாம்" என்றனர்.














