செய்திகள் :

சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்' – 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும் பாடம் என்ன?

post image

டிசம்பர் என்றாலே இந்த டிசம்பர் அந்த டிசம்பராக இருக்கக் கூடாது என சென்னைவாசிகளின் மனங்களில் வடுவாக மாறிய ஆண்டு 2015. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெருமழை, அப்படியான ஒரு சோக வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது.

அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் 'அடுத்த சில நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும்' என்று தெரிவித்தது. அரசுக்கும் எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. எனினும் அரசு வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

வழக்கம்போல குடும்பங்கள் வீடுகளில் முடங்கின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், நவம்பர் 30-ஆம் தேதி சில மணி நேரத்தில் 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியதாகக் கூறினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்த போதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜ் இல்லாமல் சடலமாகக் கிடந்தன. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது அந்த மழைதான்.

அதேநேரம், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். சென்னை மக்களிடம் இருந்த மனிதநேயம் வெளிப்பட, ஒரு பெருமழை காரணமாக இருந்தது.

2015-ம் ஆண்டின் சென்னை பெருவெள்ளம் ஏற்படக் காரணங்கள் பல இருந்தாலும், முக்கியக் காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.ஏ. ராஜ். இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல் படுகையில்தான் அதிக மழை பெய்தது.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி 1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.

ஆனால், சென்னையின் தென் பகுதிகளில் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்தான் வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டதே அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

2015 டிசம்பர் 1-ஆம் தேதி, 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருப்பதால் உடனே பெருமளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமிருந்து தலைமைச் செயலாளர் அனுமதி பெறுவதற்குத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

அதைத் தொடர்ந்து முறையான முன்னறிவிப்பு இல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியைப் பொதுப்பணித் துறையினர் திறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஏரி வேகமாக நிரம்பியதால் ஏரியின் பாதுகாப்புக் கருதி 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் வழியாக விநாடிக்கு ஒரே நேரத்தில் 33 ஆயிரத்து 400 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதற்கு முன்னர் செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்டது.

ஆனால், மற்ற நேரங்களைப்போல, திறந்துவிடும் தண்ணீரின் அளவைப் படிப்படியாக உயர்த்த முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஏரி உடைந்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில் பெய்த மழைநீரும், சென்னையில் உள்ள கால்வாய்களில் வந்த மழைநீரும் அடையாறில் கலந்ததால், அடையாறில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கும் மேல் வெள்ளநீர் சென்றது.

அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதனால், கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. சென்னை வெள்ளக்காடானதற்குத் தாமதமாகச் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதே முக்கியக் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

மேலும், நுங்கம்பாக்கம், மாம்பலம், முகப்பேர், உள்ளகரம், கொளத்தூர் ஏரிகள் முழுமையாகக் கட்டடங்களாக ஆகிவிட்டன. மேலும் ஆதம்பாக்கம் ஏரியில் 25 சதவீதம், வேளச்சேரி ஏரியில் 35 சதவீதம் தவிர மற்றவை அனைத்தும் கட்டுமானங்களாக ஆகிவிட்டதாலும் தண்ணீரின் போக்கு மாறிவிட்டது. இந்த ஏரிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் பெருகிவிட்டன. பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததற்கு இதுவும் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.

2015 நவம்பர் டிசம்பர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யத் தொடங்கிய மழை இப்படிக் கோரத் தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சென்னை வெள்ளத்தால் சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். பல லட்சம் மக்கள் தங்களது வீடு உட்பட எல்லா உடமைகளையும் இழந்தார்கள்.

6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 10,000 டன் குப்பைகள் உருவானது. இவற்றை அகற்ற மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 2000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

வெள்ளத்துக்கு மட்டும் சென்னையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 260-ஐ தாண்டியது. சாலை, ரயில், விமானம் என அனைத்துப் போக்குவரத்தும் முடங்கியது. சென்னை சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 6-ஆம் தேதி வரை மூடப்பட்டது. சென்னையிலிருந்து மேற்கே 70 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான நிலையம் ஒரு தற்காலிக விமான நிலையமாகச் செயல்பட்டது.

:

சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கும்போது, மாநகராட்சி மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் உச்சபட்ச அழுத்தத்திற்கு உள்ளாகின. இந்த நேரத்தில், அரசால் மட்டும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பது புறங்கைப் புண்ணாகத் தெளிவானது. மக்கள் செயலில் இறங்கினர். இளைஞர்கள் இதில் முன்னணியில் நின்றனர்.

மீட்பு முயற்சிகளில், மதம், இனம், பணக்காரன், ஏழை, நடிகன், ரசிகன் என எந்தப் பாகுபாடுமின்றி கரம் கோர்த்தனர். விலங்குகள் மீது அன்பு கொண்டவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். கிடைக்கக்கூடிய எந்த இடமும் நிவாரண மையமாகவும், சமையலறையாகவும் ஆனது. செல்போன்களும் ஊடகங்களின் தொடர்பும் தேவைப்படும் இடங்களுக்கு உதவிகள் சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு பாலமாகின.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

வழங்கப்பட்ட நிவாரணத்தில் பெரும்பாலானவை தனியார் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை. வலியால் துடித்த கர்ப்பிணி, பாலுக்கு அழுத குழந்தை, மருந்துக்குத் தவித்த முதியவர் என யாருக்கெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் கழுத்தளவைக் கடந்த தண்ணீரில் நீந்தி நீண்டன உதவிக் கரங்கள். கர்ப்பிணி சித்ரா பெற்ற பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற பெயரும், யூனுஸுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அண்ணா பதக்கமும் அதற்குச் சாட்சிகள்.

இளைஞர்களால் உற்சாகமடைந்து, மூத்தவர்களும் சேவைக்குத் தங்களை அர்ப்பணித்தனர். இசைக் கலைஞர்கள், கலைஞர்கள், நடிகர்கள், எல்லாரும் – அந்தஸ்து வேறுபாடின்றி தோளோடு தோள் நின்று அவர்கள் பணியாற்றியது பெரும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள். அப்போது உருவான பல நட்புகள் சேவை அமைப்புகளாக உருவாகின. மீனவர்களின் படகும், தன்னார்வலர்களின் உழைப்பும், அரசின் சில செயல்பாடுகளும்தான் 2015 வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைக் கரை சேர்த்தன.

கனமழை, வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளைப் பிரதமர் மோடியும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் தனித்தனியே ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

மேலும், டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரிடரை 'தேசியப் பேரிடராக' அறிவிக்க வேண்டும் என்றும், மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரூ.1,000 கோடி நிவாரணத்தை அறிவித்து, "தமிழ்நாடு மக்களின் தேவை நேரத்தில் இந்திய அரசு துணை நிற்கும்" என ஆறுதல் கூறியது.

இன்னொருபுறம், டிசம்பர் 4 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து வார்டுகளுக்குப் பிஸ்கட், மெழுகுவர்த்திகள், இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சானிட்டரி நாப்கின்கள் போன்ற நிவாரணப் பொருட்கள் அடங்கியப் பை வழங்கப்பட்டது. அந்தப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் முகப் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

ஒரு கட்டத்தில் ஸ்டிக்கர் தீர்ந்துபோகவே, அது வரும்வரை நிவாரணப் பொருள்கள் வழங்காமல் தாமதிக்கப்பட்டது. அப்போதுதான் அதிகாரிகள் இனி நேரத்தை வீணாக்காமல், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்திவிட்டு, மூன்றாம் நாளிலிருந்து சாதாரணப் பைகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர் அதிகாரிகள்.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

அதே நேரம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க பிரமுகர்கள் பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலும் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், அதற்கு அப்போது இருந்த காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்துப் பாதுகாத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதுமுதலே 'ஸ்டிக்கர் அரசு' என்ற விமர்சனமும் அதிமுக மீது விழுந்தது.

எதிர்க்கட்சியான தி.மு.க, இந்த வெள்ளத்திற்குக் காரணம் அரசின் தவறான நீர்முகாமைத்துவம் எனக் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அப்போதைய ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ``செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதே அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நகருக்குள் புகுந்ததற்குக் காரணம்" எனப் புகார் தெரிவித்தார். பின்னர், CAG (Comptroller and Auditor General) அறிக்கையும் இதையே உறுதிப்படுத்தியதால், திமுகவின் குற்றச்சாட்டு வலுப்பெற்றது.

பரபரப்பான, குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட நகரமாக இருந்த சென்னை, தன்னை மறுவடிவமைத்துக்கொண்டது. அதற்கு உதாரணமாக 2016 வர்தா புயலையும், கொரோனா 19 பெருந்தொற்றையும், 2023 பெருமழை வெள்ளத்தையும் சமாளித்ததைக் கூறலாம்.

மேலும், இளைஞர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகமானது. முன்புபோல இப்போது ஏரிகளை ஆக்கிரமிப்பதும், அவற்றில் குப்பைகளைக் கொட்டுவதும், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதும் அவ்வளவு எளிதல்ல. உதாரணமாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பெருஞ்சிரத்தையே சாட்சி. மக்கள் சிலர் மழைநீர் சேகரிப்பை ஒரு வாழ்க்கை முறையாகப் பின்பற்றுகிறார்கள்.

சென்னை வெள்ளம் - 2015
சென்னை வெள்ளம் - 2015

2015-ன் சென்னை பெருவெள்ளம், ஒரு இயற்கைப் பேரிடராகத் தொடங்கினாலும், அது நமக்குப் பேராசிரியராக மாறியது. அந்த வெள்ளம், நகரத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு, மக்களின் மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டியது.

செம்பரம்பாக்கம் ஏரி, அடையாறு, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் – இவை அனைத்தும் எச்சரிக்கை மணி அடித்தன. ஆனால் அதே நேரத்தில், தன்னார்வலர்களின் கரங்கள், மீனவர்களின் படகுகள், இளைஞர்களின் உற்சாகம் – இவை தான் மக்களை கரை சேர்த்தன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் பாதுகாப்பு – இவை அனைத்தும் அந்த வெள்ளத்தின் பின் உருவான நல்ல மாற்றங்கள். இயற்கையை மதிக்காமல் நகர வளர்ச்சி சாத்தியமில்லை, மனிதநேயம் தான் எந்தப் பேரிடரையும் வெல்லும் மிகப் பெரிய ஆயுதம், ஒற்றுமை, தன்னார்வம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு – இவை தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் தர வேண்டிய மரபு.

அதனால், 2015 வெள்ளம் ஒரு துயர நினைவாக மட்டும் அல்ல; அது நம்மை மறுவடிவமைத்த வரலாற்றுப் பாடமாகும். இன்றோடு சென்னை வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 2015-இன் சென்னை பெருவெள்ளம் துயரத்தில் தொடங்கினாலும் நம்மைப் பெரியளவில் வடிவமைத்திருக்கிறது. சென்னைப் பெருவெள்ளம் கொடுத்தப் பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

திருப்பரங்குன்றம்: "6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால்" - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசராம்பட்டு : கவலைக்கிடமான நிலையில் `நூறு நாள் வேலை திட்டம்’ - தீர்வு கிடைக்குமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கிராமவாசிகளுக்கு குறைந்தபட்ச அளவிலான... மேலும் பார்க்க

Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா

இந்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி, இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் திறந்து வைத்தார்.இதையடுத்து நே... மேலும் பார்க்க

மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?

திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8... மேலும் பார்க்க

திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!

நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை ... மேலும் பார்க்க

``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூக... மேலும் பார்க்க