Toyota eBella First Drive | Design, Features & Road Performance Explained | Moto...
நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். குறிப்பாக கூடலூர் பகுதிகளில் அவர்களால் உருவாக்கப்பட்ட தனியார் பெருந்தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் இன்றளவும் அடிமை முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தோட்டப்பயிர்கள் மட்டுமின்றி மற்ற வளங்களையும் தேடி அலைந்த பிரிட்டிஷார், கூடலூர் பகுதியில் சில இடங்களில் மண்ணுக்குள் தங்க படிமங்கள் இருப்பதை 1831- ம் ஆண்டு கண்டறிந்தனர். மண்ணில் இருந்து தங்கத்தைப் பிரித்து இங்கிலாந்திற்கு கொண்டுச் செல்லும் விதமாக 'ஆல்ஃபா மைனிங் கோல்டு கம்பெனி' என்ற நிறுவனம் மூலம் தேவாலா மலைப்பகுதியில் தங்க சுரங்கங்களைத் தோண்டி தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 1890 களில் எதிர்பார்த்த அளவு தங்கம் கிடைக்கவில்லை.
அதேவேளையில், கிடைக்கும் தங்கத்தை விட சுரங்கங்களில் இருந்து எடுத்து பிரிப்பதற்கு அதிகளவில் பொருட் செலவானது. இதனால் தங்க சுரங்கங்களை மூட உத்தரவிட்டனர். ஆனால், அப்போதிருந்தே சட்டவிரோதமாக தங்கம் எடுக்கும் வேலையில் பலரும் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அந்த பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அத்துமீறி பல தங்க சுரங்கங்கள் இயங்கி வந்தன. நடவடிக்கை என்ற பெயரில் அவ்வப்போது கண்துடைப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

இதனை சாதகமாக்கிக் கொண்ட கேரள மாஃபியா கும்பலைச் சேர்ந்த சிலர், தேவாலா மலைப்பகுதியில் ரகசியமாக ஊடுருவி உள்ளுர் மக்களை கூலிக்கு பயன்படுத்தி தங்கத்தை கடத்திச் செல்வது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக நூற்றுக்கணக்கான தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதனை உறுதி செய்துள்ளனர்.
இதன் பின்னணி குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட வருவாய்த்துறையினர், "தேவாலா மலைப்பகுதியில் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வருவதை சமீபத்திய கள ஆய்வுகள் மூலம் கண்டறிய முடிந்தது. பெரிய அளவிலான சுரங்கங்களைத் தோண்டி தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த தங்க கடத்தல் கும்பல் மூலம் மலப்புறம் பகுதிக்கு இந்த தங்கங்களை ரகசியமாக கடத்திச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பல ஆண்டுகளாக சட்டவிரோத தங்க சுரங்கங்கள் சிறிய அளவில் இயங்கி வந்துள்ளன. ஆனால், தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் காரணத்தால் தங்க மாஃபியா கும்பல்கள் பலவும் கூடலூர் தங்க சுரங்கங்கள் மீது தீவிரம் காட்டி வருகின்றன.

போதைப்பொருள்களுக்கு உள்ளுர் மக்களை அடிமையாக்கி ஆபத்தான தங்கம் எடுக்கும் வேலையில் இரவு நேரங்களில் ஈடுபடுத்தி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தங்க சுரங்கங்களை மூடுவது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.



















