Dindigul மாவட்ட தொகுதிகள்: பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் யார் யார் போட்டி? |...
நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!
தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 750 தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை நேரத்தில் உப்புமா, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய சில நாள்கள் மட்டும் உணவு தரம் நன்றாக இருந்தாதகவும், அதன் பிறகு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, அதனை பணியாளர்கள் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் வீசினார்கள். இதே போல் சில நாள்களாகச் சாப்பிட முடியாமல் உணவை குப்பைத் தொட்டியில் போடுவதாகக் கூறினார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், "இந்தக் காலை உணவு திட்டம் தொடங்கிய 10 நாள்கள் மட்டுமே உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல தரம் இல்லை. இட்லி கல் போலவும், சாம்பார் தண்ணீர் போலவும் இருக்கிறது, உப்புமா மற்றும் பொங்கலில் தண்ணீர் அதிகமாக உள்ளது. உப்புமாவா பொங்கலா எனத் தெரியவில்லை. இதைச் சாப்பிட்டு எங்களில் பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. எங்களை கொல்லப் பார்க்கிறார்கள். இதுகுறித்து மாநகராட்சியில் புகார் செய்தால், `உணவு தருவது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை.

அதைச் சாப்ப்பிடுவதும் வீணடிப்பதும் உங்களது விருப்பம்' என அலட்சியமாகப் பேசுகிறார்கள் அதிகாரிகள். சம்பளம் கூடுதலாகக் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு காலை உணவு தருகிறோம் என்கிறது அரசு. ஒரு நாளுக்கு வழங்கப்படும் ரூ.540 ஊதியத்தை ரூ.800 வரை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை சம்பளத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும்" என்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம், “தூய்மைப் பணியாளர்கள் கூறும் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.












