ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? - காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட...
நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் கோயில் : மனச்சுமைகள் குறையும்... உற்சாகம் பிறக்கும்!
இன்றைக்குப் பல்வேறு மலைத் தலங்களுக்கும் பயணிக்க பஸ், கார், ரோப் கார் வசதிகள் வந்துவிட்டன. ஆனால் இயற்கைக் காற்று மேனியில் படர சுவாமியைத் துதித்தபடியே மலையேறி வழிபடுவது ஓர் அலாதியான அனுபவம்.
அப்படி ஒரு மலைத்தலம்தான் சொக்கம்பட்டி மலை. இங்குதான் சுயம்பூற்றுநாதர் அருள்கிறார். நெல்லை மாவட்டம் புளியங்குடி-தென்காசி சாலையில் உள்ளது இந்த ஊர்.
திருநெல்வேலியிலிருந்து தென்காசி மற்றும் புளியங்குடிக்குப் பேருந்து வசதிகள் உண்டு. அதில் பயணித்து சொக்கம்பட்டியை அடையலாம். அங்கிருந்து மலையடிவாரத்துக்குச் செல்ல வாகனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 6 கி.மீ பயணித்தால் சுயம்பூற்று விநாயகர் ஆலயத்தை அடையலாம்.
ஒருமுறை இப்பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பகுதியில் வசித்த மேய்ப்பர் ஒருவர், தான் வளர்க்கும் ஆடு-மாடுகளின் உணவுக்கும் தண்ணீர் தேவைக்கும் வழியின்றி வருந்தினார்.
பஞ்சம் பெரிதாகி அனைவரும் தவிக்கையில் இறைவனைப் பிரார்தித்து, ‘`ஐயா.. காத்தருள வேண்டும். மண்ணையும் மக்களையும் காக்க பெருமழைப் பொழியவேண்டும்’’ என மண்டியிட்டு அமர்ந்து, ஈசனை நோக்கி வேண்டினார்.

அடுத்த கணம் சூறைக்காற்றுடன் பெருமழை பொழிந்தது. அது மட்டுமா? அருகில் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஊற்றுக்கண் திறந்து தண்ணீர் பெருகியது. மேய்ப்பன் தண்ணீரை கைகளில் அள்ளி கண்களில் ஒற்றிக்கொண்டார்; ஆசைதீரப் பருகினார்; குதூகலத்தில் துள்ளிக் குதித்தார்.
இறைவனுக்கு நன்றி செலுத்த நினைத்தவர், சிவனாரைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டார். மேலும், தானே தோன்றிய ஊற்றுக்கு `சுயம்பு ஊற்று’ என்றும், தான் வழிபட்ட சிவனாருக்கு, 'சுயம்பூற்றுநாதர்' என்றும் திருப்பெயர் சூட்டினார்.
மேலும் ''இந்த ஊற்றில், எப்போதும் தண்ணீர் சுரக்கவேண்டும்’’ என்றும் பிரார்த்தித்தார். அன்று முதல் இன்றுவரை அந்த ஊற்று வற்றாத ஒன்றாகத் திகழ்கிறது.
Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்
இதில் அதிசயம் என்னவென்றால் சொக்கம்பட்டிக்கு வந்து தங்கி வழிபடுவோர் எத்தனை பேரோ, அவர்களுடைய தேவைக்கு மட்டும் இந்த ஊற்றில் தண்ணீர் ஊறும். அதைத் தாண்டி ஊறாது.
அதுமட்டுமல்ல, கெட்ட எண்ணத்துடனோ மாற்று நோக்கத்துடனோ ஊற்றின் அருகில் எவர் சென்றாலும், அடுத்த சில நிமிடங்களில் ஊற்று நீர் வற்றிவிடும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், இப்பகுதி மக்கள். அவர்கள், இதை உயிருள்ள ஊற்றாகவே கருதி வணங்கி வருகிறார்கள்.
சொக்கம்பட்டி மலைப்பயணம் கொஞ்சம் கடுமையானது. 5 அல்லது 6 மணி நேரத்தில் மலையேறி, சுவாமியின் கோயிலை அடைந்துவிடலாம்.

அந்தப் பயணம் முழுக்க நாம் எதிர்பார்க்காத பல அனுபவங்கள் வாய்க்கும். பாவு ஊற்று ஓடை, வண்ணாத்திப் பாறை, ஆலமரம், மலை முகடு எனப் பரவச அனுபவங்களோடு கரடுமுரடான பாதையின் வழியே மலையேற்றம் தொடரும்.
மேகக்கூட்டங்கள் நம்மைத் தழுவிச் செல்லும். மூலிகைக் காற்று புத்துணர்ச்சி தரும். குறிப்பிட்ட ஓர் இடத்தை அடைந்ததும், மலைக்குப் மறுபகுதியில் இறங்கும் பாதையில் பயணம் தொடரும்.
ஒருபுறம் மலைச்சுவர் மறுபுறம் அதலபாதாளம் எனத் திகழும் அந்தப் பாதையில், ஓரிடத்தில் பாதைக்குச் சற்று கீழே பெரிய பாறை ஒன்று தென்படும். அதன் இடுக்கில் பள்ளம் போன்ற பகுதியில் இறங்கிச் சென்றால், விசேஷமான ஒரு குகையைத் தரிசிக்கலாம். அமைப்பில் இரண்டு குகைகள் போல் தோன்றுகிறது. பாதையிலிருந்து மிகக் கவனமாக இறங்கி குகைக்குள் செல்லவேண்டும்.
சித்தர் பெருமக்களும் சாதுக்களும் தங்கி பூஜை செய்யும் இடம் இந்தக் குகை என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். குகைக்குள் நுழைந்ததுமே இனம் புரியாத அதிர்வை நாம் உணரமுடியும். அங்கே சிறிது நேரம் தியானம் செய்வது சிறப்பு.
குகையிலிருந்து வெளியேறி பயணத்தைத் தொடர்ந்தால், அடுத்து வரும் பள்ளத்தாக்குப் பகுதியில் அருள்மிகு சுயம்பூற்று நாதரைத் தரிசிக்கலாம்.
பழைய லிங்கம் ஒன்று தனியே இருக்க. புதியதாகவும் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டு வருகிறார்கள். அருகிலேயே பிள்ளையார் மற்றும் அம்மன் தரிசனம். அங்கிருந்து சற்று மேலே சென்றால் அதிசய ஊற்றைக் காணலாம்.

ஒருமுறை இந்தப் பகுதிக்குச் சென்று வந்தாலே பிணிகள் அனைத்தும் விலகும்; மன அழுத்தம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்றைக்கும் சாதுக்கள் பலரும் இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, சுயம்பூற்று நாதரை வழிபட்டு தவம் செய்து வருகிறார்கள். அதிசய ஊற்றான சுயம்பூற்றுத் தண்ணீரை எடுத்துச்சென்று வீட்டுக் கிணற்றில், போர்வெல் இடங்களில் ஊற்றினால், அங்கு தண்ணீர் வற்றாமல் இருக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
குறிப்பு : அன்பர்கள் இம்மலைப்பயணத்தில் தனியே பயணிக்கக்கூடாது. தகுந்த வழிகாட்டலுடன் இந்த யாத்திரையை மேற்கொள்ளவேண்டும். இல்லை வழி தவறி ஆபத்தில் சிக்க நேரிடும். மேலும் தற்போது வனத்துறையின் அனுமதியைப் பெறுவதும் மிக அவசியம் ஆகும்.




















