காங்கிரஸின் அரசியல் ஸ்டன்ட்? - திமுக கூட்டணியின் 'லட்சுமண ரேகை'யும் அதிரும் 2026...
பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கிய கோவை திருடன்!
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை.

இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 பவுன் நகை, கொத்து சாவிகள், ரம்பம், குரடு, ராடு போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “வீட்டின் பூட்டு உடைக்கப்படாததால் முதலில் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர்கள் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது. இதே பாணியில் குனியமுத்தூரில் கடந்த 2024-ம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதிவாகி கண்டறிய முடியவில்லை.

பழைய வழக்குகள், மற்றும் இந்த வழக்கின் சிசிடிவி அடிப்படையில் தான் கிருஷ்ணமுர்த்தியை கைது செய்தோம். அவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் கடந்த 1993-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர். கடந்த 2023-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் நகை கொள்ளையடித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கையில் கொத்தாக பல்வேறு சாவிகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு சாவியாக திறந்து பார்த்து, ஆயுதங்களை வைத்து உடைக்காமல் திறந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

















