`பழைய மெட்ராஸின் கடைசி எச்சங்களாக எஞ்சி நிற்கும் குதிரை லாயம்’ - சென்னை `ஜட்கா வண்டி’ தொழிலின் நிலை
சென்னை மாநகரம், இது 350 ஆண்டுகள் பழமையான ஒரு நகரம். வங்க கடலோரம் சாதாரண சிறு சிறு புள்ளிகளாக இருந்த கிராமங்கள், இன்று காட்டு மரம் போல் பூகோள பரப்பில் மிகப்பெரிய மாநகரமாக வளர்ந்து நிற்கிறது.
ஆங்கிலேயர்களின் அதிகார பீடமாக இந்த கடற்கரை நகரம் மாறிய பின்பு, கிராமங்கள் எல்லாம் மருவி இன்று விண்ணை முட்டும் கட்டடங்களும் பரபரப்பான சாலைகளும், மேம்பாலங்களும், அழுக்கு நிறைந்த நதிகளுமாய் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை உருபெற்றுள்ளது.
அந்த வரிசையில் சென்னையின் போக்குவரத்து வசதிகளும் பல பரிணாமங்களைத் தொட்டுள்ளது. கல்கத்தாவில் ட்ராம் வண்டிகள் தற்போது தான் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்னையில் அதன் போக்குவரத்து நின்று விட்டது.

இந்நிலையில் பழமையான சென்னை மாநகரத்தில் ஓடிக்கொண்டிருந்த குதிரை வண்டிகள் போக்குவரத்தும் தற்போது மெல்ல மெல்ல மறைய தொடங்கியுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகும் சென்னையில் குதிரை வண்டிகளும் குதிரை போக்குவரத்தும் குதிரைகளைக் கொண்டு பாரம் ஏற்றி செல்வதும் ஒரு மிகப்பெரிய போக்குவரத்தாக இருந்தது.
அதற்குப் பிறகு குதிரைகளின் பயணமும் போக்குவரத்தும் மெல்ல மறைய தொடங்கி விட்டது. இந்நிலையில் 21ம் நூற்றாண்டில் குதிரைகளை நம்பி தொழில் நடத்தி வருவது எஞ்சிய சில குடும்பங்கள் மட்டுமே. இன்று சென்னை சென்ட்ரல் ரிப்பன் மாளிகை அருகே உள்ள சாலையில் வெறும் 5, 6 குதிரைகளோடு இதை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
ஜட்கா வண்டி
இதுகுறித்து நம்மிடம் பேசிய குதிரை உரிமையாளர் சதீஷ், ``சென்ட்ரல் அருகே ஆங்கிலேயர் காலத்தில் எங்களுக்காக ஒதுக்கப்பட்டது இந்த குதிரை லாயம். ஒரு காலத்தில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நீங்கள் எங்கு பார்த்தாலும் குதிரை போக்குவரத்து மட்டும்தான் காண முடியும். "ஜட்கா வண்டி" என்பார்கள்.
எனது முப்பாட்டன், தாத்தா அப்பா இப்போது நான் என நான்கு தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சிலர் மட்டுமே தற்போது இந்த தொழிலை நம்பி இருக்கிறோம். பலர் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். 70-80களில் சுற்றுலாப் பயணிகளை இந்த ஜட்கா வண்டிகள் மிகவும் ஈர்த்தது. அது மட்டும் இன்றி அப்போது அவசரகால ஊர்தியாகவும் பிணங்களை ஏற்றி செல்லும் வாகனமாகவும் கூட இது பயன்பட்டது.

பழமையான மெட்ராஸின் கடைசி எச்சங்களாக எஞ்சி நிற்பது இந்த குதிரை லாயம் மட்டும்தான் என்று நினைக்கிறேன். புது புது வாகனங்களின் வரத்து மற்றும் பயன்பாடு காரணமாக குதிரை வண்டிகள் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது என்றே கூற முடியும். தற்போது திருமண வரவேற்பு, பிறந்தநாள் விழா, காவல்துறை அதிகாரிகளின் உபசார பிரிவு விழா, சில அரசியல் கூட்டங்களை மட்டுமே நம்பி தற்போது எங்கள் தொழில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதை வைத்து குதிரைகளுக்கு தீவனம், எங்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை நாங்கள் கடத்துகிறோம். இந்தத் தொழிலில் நாங்கள் நீடித்து வாழ வேண்டும் என்றால் எங்களுக்கு மாநகராட்சியில் முறையான இடம், குதிரைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி, மின்சாரம், மேற்கூரை ஆகியவற்றை அரசு முறைப்படுத்தி எங்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கிறோம்.
இது எங்களுக்கு மட்டுமல்ல சென்னை மெரினா, கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் இந்த தொழிலையே நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் பெரு உதவியாக அமையும். சென்னையின் மிக முக்கியமான அடையாளம் இந்த குதிரையும், குதிரை தொழிலும். இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம் அண்ணா மேம்பாலத்தின் அடியில் நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டிருக்கும் குதிரையும் வீரரும் உள்ளது போன்ற ஒரு சிலையை.
இது கிட்டத்தட்ட 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு குதிரைப் பந்தயம் நிறுத்தப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டது. எங்கள் தொழிலும் இதுபோன்று மறைந்து விடுமோ என்ற கவலை உள்ளது.” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குதிரை உரிமையாளர் லட்சுமணன் அவரின் மனைவி நூர்ஜஹான், ``சென்னை சென்ட்ரல் மற்றும் ரிப்பன் மாளிகை எதிரே இருக்கும் இந்த லாயத்திற்கு அதிகாரிகள் பலமுறை வந்து இதனை அகற்ற வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் நாங்கள் இந்த சாலையோரம் தற்காலிக மேற்கூரை அமைத்து எங்கள் வாழ்வாதாரத்தை கடத்தி வருகிறோம்.
ஒரு குதிரைக்கு ஒருவேளை ஒரு குடம் தண்ணீர் தேவைப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மழைக்காலத்தில் இந்த இடத்தில் குதிரை பராமரிப்பு என்பது பெரும் சிரமமான ஒரு பணி. ஆண்டு முழுவதும் பணி இருந்த காலம் போய் இன்று சீசன் காலம் தவிர வேலையில்லாமல் இருக்கிறது. எங்களது அடுத்த தலைமுறையும் இதில் ஈடுபட ஆர்வமாகவே இருக்கிறது. மறைந்த வரும் இத்தொழிலை காக்க மக்களிடம் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.” என்கிறார்கள்.





















