SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; க...
`பீகார் கொடுத்த அடி; உதயநிதியும், விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும்’ - தமிழிசை
வேலூரில் இன்று, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையம் `ஒருமுறை வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும்’ என்று நினைத்தால், அதற்கு முழு உரிமையும், அதிகாரமும் இருக்கிறது. இதில், எந்த அவசரமும் இல்லை. பீகாரில் சிறப்பாக நடைபெற்றிருக்கிறதா? இல்லையா? `64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள்’ என்று ராகுல்காந்தி சொன்னாரே... ஒரு வாக்காளராவது வெளியே வந்து, `என் வாக்கு இல்லை. 64 லட்சத்தில் நானும் ஒருத்தர்’ என்று சொன்னாரா? சொல்லவில்லை. களத்தில் இருந்த யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியெனில், அங்குச் சரியாக நடந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

இதுதான் பட்டவர்த்தனமான உண்மை!
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அன்றைக்கு அம்மியில் அரைத்துக்கொண்டு இருந்தோம். இன்றைக்கு மிக்சியில் ஒரு நிமிடத்தில் சட்னியை அரைக்கவில்லையா? அது மாதிரி தான், தேர்தலுக்கு முன்பு 15 நாள்களே இருந்தாலும் பொய் வாக்காளர்களும், போலி வாக்காளர்களும் நீக்கப்பட வேண்டும். இங்கு, தி.மு.க-வின் தொடர் வெற்றிக்குக் காரணமே போலி வாக்காளர்கள் தான். கொளத்தூரே அதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அதனால்தான், போலி வாக்காளர்களை நீக்கும்போது, நேர்மையான வாக்காளர்களை நம்பி போட்டியிட்ட கட்சி அதை வரவேற்கிறது. போலி வாக்காளர்களை நம்பி வெற்றிப்பெற்ற கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸும் எதிர்க்கிறது. இதுதான் பட்டவர்த்தனமான உண்மை.
`சார்’
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் போகிறார்கள். பெயர் இருக்கிறதா, இல்லையா? என்பது தெரிந்துவிடும். இறந்தவர்களெல்லாம் இனிமேல், சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்பார்கள். ஏனெனில், அவர்களைப் பிடித்துகொண்டுவந்து தி.மு.க-வினர் ஓட்டுப்போட வைத்துக்கொண்டிருந்தார்கள்.
தி.மு.க-வினருக்கு `சார்’ என்ற வார்த்தையே கேட்ட உடனே `கிலி’ வந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். இதற்கு பீகாரே முன்னுதாரணம். வாரிசு அரசியலுக்கு பீகார் ஒரு `அடி’ கொடுத்திருக்கிறது. அதனால், தம்பி உதயநிதி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும். புதியவர்களுக்கும் பீகார் ஒரு `அடி’ கொடுத்திருக்கிறது. அதனால், பிரசாந்த் கிஷோர் மாதிரியே தம்பி விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும்.

`தேசிய ஜனநாயகக் கூட்டணியின் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் இருந்தால்தான் நமக்கு நல்லது நடக்கும்’ என்று மக்கள் வாக்களிக்கிறார்கள். இங்கேயும் அ.தி.மு.க - பா.ஜ.க வெற்றிபெற்றால் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் வரும். இந்த நேரத்தில், அண்ணன் வைகோவுக்கும் ஒரு கோரிக்கை வைக்கின்றேன். போதையை தடுப்பதற்காக அவர் நடைப்பயணம் போகிறாராம். போதையை தடுக்க அறிவாலயத்துக்குத் தான் அவர் போகவேண்டும்.
அங்கிருந்து தானே போதையை தடுப்பதற்கான சட்டம் வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமாக இருப்பதாக சீமான் எதை வைத்து கணிக்கிறார்? சீமான் என்ன பலமாகவா இருக்கிறார்? அவரே தனியாக நின்று சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார். சீமானுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கருணாநிதியை தாண்டி கரிகாலனை நோக்கிச் சென்றுவிட்டார். சீமானின் பேச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. நல்ல பேச்சாளர். அதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்கிறார் சிரித்தபடி.














