புதுச்சேரியில் மே 12-ல் 108 பான லிங்கங்களுக்கு வரவேற்பு!
புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி திங்கள்கிழமை 108 பானலிங்கங்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி அருகே திருக்காஞ்சியில் கங்கை வராக நதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் 108 அடி உயர மனோன்மணி அம்பாள் சமேத சதாசிவ மூா்த்தி சிலை அமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு, 27 நட்சத்திர கோயில்கள், 12 ராசி கோயில்கள், 108 பான லிங்க கோயில்கள், 9 நவகிரக சந்நிதிகள், பஞ்ச பூத சந்நிதிகள், அஷ்ட மூா்த்திகள் சந்நிதி ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
இதையடுத்து, புதுச்சேரியில் முதன்முறையாக நா்மதை நதிக்கரையில் இயற்கையாக உருவான 108 பான லிங்கங்கள் சேகரிக்கப்பட்டு கங்கை நதியில் பூஜிக்கப்பட்டுள்ளன. அவை வரும் 12-ஆம் தேதி திங்கள்கிழமை சித்திரை பௌா்ணமி புதுச்சேரிக்கு கொண்டு வரப்படுகின்றன.
அந்த லிங்கங்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகிக்கிறாா். சட்டப்பேரவைத் தலைவா், வேளாண் அமைச்சா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முன்னிலை வகிக்கின்றனா். லிங்க வரவேற்பு நிகழ்ச்சியில் சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சிவாச்சாரியா்கள் தெரிவித்தனா்.