புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!
20 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் அதிகபட்சமாக 460 மி.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் நேற்று இரவு புதுவைக்கு அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்தது.
இதனால், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை, நான்குவழிச் சாலை வழியாக இயக்கப்படும் புதுவை மாநில பேருந்துகளில் புயல், மழையால் பேருந்துகளில் அதிகளவில் மக்கள் பயணிக்கவில்லை.
இதையும் படிக்க: மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு... 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!
20 ஆண்டுகளுக்கு பிறகு 460 மி.மீ மழை!
புதுவையில் கடந்த 2004 அக்டோபர் 31 ஆம் தேதி அதிகபட்சமாக 210 மி.மீ மழை பதிவான நிலையில், ஃபென்ஜால் புயலால், வரலாறு காணாத வகையில் 460 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அலைகள் பல அடி உயரத்துக்கு எழுப்பின. பாண்டி மெரீனாவில் சாலை வரை அலைகள் வந்து சென்றன.
காலாப்பட்டு காவல் நிலையப் பகுதி, கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததையடுத்து, சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.