DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா... தேர்தல் நேர எதார்த்த...
`என் பையனை வளைச்சிப் போட்டுக்கிட்டா.!’ - மருமகளை தீர்த்துக் கட்டி புதைத்த கொடூர மாமியார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் இருவரும் வளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 2018-ல் ராஜா தற்கொலை செய்து கொண்டார்.
அதையடுத்து வளையம்பட்டு கிராமத்திலேயே இருந்தார் நந்தினி. அப்போது விரியூரில் இருந்த பிசியோதெரப்பி கிளினிக்குக்கு ஒருமுறை சென்றிருக்கிறார் நந்தினி.
அப்போது அவருக்கும், பிசியோதெரப்பி கிளினிக் நடத்தி வந்த மரிய ரொசாரியோ என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு காதலாக மாறிய நிலையில், 2020-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதேசமயம் இவர்களின் திருமணம், மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோஃப் மேரிக்குப் பிடிக்கவில்லை. அதனால் மருமகளுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான சண்டை அன்றாட நிகழ்வாக மாறியதால், வடசேமபாளையம் கிராமத்தில் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றார் மரிய ரொசாரியோ. ஆனாலும் அங்கும் சென்று அவ்வப்போது மருமகளிடம் தகராறு செய்து வந்திருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி.
இந்த நிலையில்தான், `டிசம்பர் 29-ம் தேதி என் மனைவி நந்தினியை என் அம்மா கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அன்று என் அம்மா மட்டும்தான் திரும்பி வந்தார்.
என் மனைவி எங்கே என்று அம்மாவிடம் கேட்டபோது, இனிமே அவ வரமாட்டான்னு சொன்னாங்க. என் மனைவியை கண்டுபிடித்துக் கொடுங்கள். எங்கள் 5 வயது மகன் அம்மாவை கேட்டு அழுது கொண்டேயிருக்கிறான்.
என் அம்மா மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது' என்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார் மரிய ரொசாரியோ. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோஃப் மேரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தன்னுடைய மருமகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து உடலை தனியாகவும், தலையை தனியாகவும் புதைத்து விட்டதாக தெரிவித்திருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி.

இந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு பெண்ணை தன்னுடைய மகன் திருமணம் செய்து கொண்டது மரிய ரொசாரியோவின் அம்மா கிறிஸ்தோஃப் மேரிக்குப் பிடிக்கவில்லை.
அதனால்தான் அவர் மருமகளுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மகன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதால் மருமகளை திட்டமுடியவில்லையே என்று மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி. அப்போதுதான் அவர் மருமகளை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.
உடனே அதுகுறித்து தன்னுடைய தோழியான எமிலி என்பவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர் சம்மதித்ததுடன், கோயிலுக்குப் போகலாம் என்று சொல்லி உன் மருமகளை அழைத்து வா என்று ஐடியா கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில்தான், `எனக்கும் இவளுக்கும் அடிக்கடி சண்டை வருது.
அதனால கோயிலுக்குப் போய் ரெண்டு பேரும் பூஜை பண்ணிட்டு வர்றோம்' என்று மகனிடம் சொல்லிவிட்டு, டிசம்பர் 29-ம் தேதி நந்தினியை அழைத்துச் சென்றார் கிறிஸ்தோப் மேரி.
சோழம்பட்டு பகுதியில் இருக்கும் மணிமுத்தாற்றின் கரையோரம் நந்தினியை அமர வைத்த எமிலி, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அவரையும் சொல்ல வைத்திருக்கிறார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் கிறிஸ்தோஃப் மேரி.
ஆனால் அப்படியும் ஆத்திரம் தீராமல் நந்தினியின் கழுத்தை அறுத்து தனியாக எடுத்து, அதை வேறு இடத்தில் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் சந்தேகமடைந்த மரிய ரொசாரியோ எங்களிடம் புகாரளித்தார்" என்றனர்.

கிறிஸ்டோப் மேரி மற்றும் எமிலி கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், ``எங்க கிராமத்துல பண வசதியோட மரியாதையா இருந்த குடும்பம் எங்களோடது. ரெண்டு புள்ளைங்களோட எங்க ஊர்ல இருந்த நந்தினி என் மகனை வளைச்சிப் போட்டுக்கிட்டு கல்யாணமும் பண்ணிக்கிட்டா.
கல்யாணமான ஒருத்தியை என் மகன் ரெண்டாதாரமா கல்யாணம் பண்ணிகிட்டது எனக்குப் புடிக்கல. ஊர்க்காரங்க முன்னாடி எங்க குடும்பத்தை கேவலப்படுத்திய நந்தினியை கொலை பண்ணிட்டு, என் மகனுக்கு புதுசா வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்னு முடிவு பண்ணேன்.
என் ஃபிரெண்ட் எமிலியும் அவளை கொலை பண்றதுதான் சரின்னு சொல்லிட்டதால, அன்னைக்கு என் மருமகளை கூட்டிக்கிட்டுப் போனேன். அவ மந்திரம் சொல்லிக்கிட்டு இருக்கும்போது, பின்பக்கமா வந்து அவளை அப்படியே கீழே தள்ளி கழுத்தை அறுத்து தனியா எடுத்துட்டேன்" என்று போலீஸ் விசாரணையில் கிறிஸ்டோப் மேரி தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.




















