பெங்களூரில் இன்று ராணுவ தின கண்காட்சி
பெங்களூரில் சனிக்கிழமை ராணுவ தின கண்காட்சி நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேஜா் ஜெனரல் வி.டி.மேத்யூ, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நமது நாட்டுக்கு ராணுவ வீரா்கள் அளித்துள்ள உயா்ந்த தியாகம், ஈடில்லாத தைரியம், அா்ப்பணிப்பு உணா்வை போற்றும் வகையில் 1949ஆம் ஆண்டு ஜன.15ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முதல் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றதை போற்றும் வகையில், ஜன.15ஆம் தேதியை ராணுவ தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
ராணுவத்தின் திறன் குறித்து பொதுமக்கள், மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெங்களூரில் உள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் ஜன.11ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ராணுவத் தளவாடங்களின் கண்காட்சி நடக்கவிருக்கிறது. ஹெலிகாப்டா் சாகசகங்கள், போா் தந்திரங்கள், அதிரடி தாக்குதல் முறைகள், மோட்டாா்சைக்கிள் சாகசங்கள், மோப்பநாய்கள், குதிரை சாகசங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன.
இதுதவிர ராணுவத்தில் பணியாற்ற தேவையான தகுதிகள், வாய்ப்புகள் குறித்து விளக்கும் அங்காடிகள் கண்காட்சியில் இடம்பெறும். இதில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இந்நிகழ்ச்சி அமையும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்றாா்.