"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.
அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் நேற்று 'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஸ்டாலின் , "ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும்.

திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்.
மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார்.
நானும் அவரை அப்படித்தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும்" என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், "தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?" என்று பதிவிட்டிருக்கிறார்.













