'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?
திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை. மாணிக்கம் தாகூர் வேளைக்கு ஒரு ட்வீட் போட்டு திமுகவை அட்டாக் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸின் தேசிய தலைமையும் நடப்பவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் விடாமல் கம்பு சுற்றியும் அதிக சீட்டுகளைகொடுப்பதற்கோ அமைச்சரவையில் சேர்ப்பதற்கோ திமுக ஏன் இறங்கி வரவில்லை?
1967 இல் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு அவர்களுக்கு முழுக்க முழுக்க தேய்மானம் மட்டுமே. கடந்த 55 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் அதிகபட்ச வாக்கு வங்கியே 20.9% மட்டுமே. 1980 தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொண்டு நின்றது. எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கில் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் அப்போது எம்.ஜி.ஆரின் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்திருந்தார்.

இந்திரா மத்தியில் வலுவாக இருந்தார். அதனால்தான் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொள்ள கருணாநிதியும் சம்மதம் தெரிவித்திருந்தார். அந்தத் தேர்தலில் 31 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் 20.9% வாக்குகளைப் பெற்றது.
1984 தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நிற்கிறது. எம்.ஜி.ஆர் 73 தொகுதிகளை காங்கிரஸூக்கு கொடுக்கிறார். 16.3% வாக்குகளுடன் 61 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று எதிர்க்கட்சியானது.
1989 தேர்தல் மிக முக்கியமானது. தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கடைசியாக தனித்துப் போட்டியிட்ட தேர்தல் இதுதான். மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி ராஜிவ் காந்தி செய்த சூறாவளி பிரசாரத்தில் காங்கிரஸூக்கு 26 தொகுதிகளும் 19.8% வாக்குகளும் கிடைத்தது.
1991 இல் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வருகிறது காங்கிரஸ். ராஜிவ் குண்டு வெடிப்பில் பலியாகிறார். ஜெயலலிதா 65 தொகுதிகளை காங்கிரஸூக்கு ஒதுக்க 60 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் 15.2% வாக்குகளைப் பெற்றது. எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது.
1996 லிருந்து காங்கிரஸின் நிலையே வேறு. அப்போதிருந்து இப்போது வரைக்கும் காங்கிரஸின் வாக்குவங்கி ஒற்றை இலக்கத்தை தாண்டவே இல்லை. காங்கிரஸ் உடைபட்டு தமிழ்மாநில காங்கிரஸ் உருவானது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
1980 க்குப் பிறகு 2006 இல் திமுகவும் காங்கிரஸூம் மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைந்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸூக்கு 48 சீட்டுகளை கருணாநிதி ஒதுக்கினார். 8.4% வாக்கு வங்கியோடு 34 இடங்களை காங்கிரஸ் வென்றது. திமுக அந்தத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது.

'மைனாரிட்டி திமுக' என ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் வசைபாடினார். காங்கிரஸ், பாமகவின் தயவோடுதான் திமுகவின் ஆட்சியே ஓடியது. மாணிக்கம் தாகூர் போன்றோர் குறிப்பிடும் காங்கிரஸ் தவறவிட்ட நல்வாய்ப்பும் இதுதான்.
திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை. அப்போது கூட்டணி கட்சிகள் அறிவாலயத்தை நெருக்கியிருந்தால் அமைச்சரவையில் பங்கு கொடுப்பதை தவிர வேறு வழியே இருந்திருக்காது. அப்போது காங்கிரஸ் அமைதி காத்தது. காரணம், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்க திமுகவின் ஆதரவு அப்போது தேவைப்பட்டது. ஒரு மாநிலத்துக்கு ஆசைப்பட்டு டெல்லியை கோட்டைவிட காங்கிரஸ் விரும்பவில்லை.
2006 க்குப் பிறகுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு குறித்த கேள்வி திமுகவுக்கே எழுகிறது. ஏனெனில் 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸின் ஸ்ட்ரைக் ரேட் பயங்கரமாக அடி வாங்குகிறது. 2011 இல் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 9.3 சதவிகித வாக்குகளுடன் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது.
2016 இல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது. வாக்கு வங்கியும் 6.5% ஆக சரிகிறது. காங்கிரஸூக்கு கொடுக்கும் அதிக தொகுதிகள்தான் திமுகவுக்கு பின்னடைவை கொடுக்கிறது என்கிற எண்ணம் உடன்பிறப்புகளுக்கு வர தொடங்குகிறது.
எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் போட்டி போடும் தொகுதிகளை தங்களுக்கு சாதகமான தொகுதிகளாக பட்டியலிட்டு டார்கெட் வைத்து அடித்தன. இதனால்தான் 2021 தேர்தலில் திமுகவிடமிருந்து 25 தொகுதிகளைப் பெறவே காங்கிரஸ் முட்டி மோதியது.

`தேசியக் கட்சினு கூட பார்க்காம நம்பர் பேசுறாங்க' என அழகிரி கண் கலங்கினார். 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 4.3% வாக்குகளை மட்டுமே பெற்று 18 தொகுதிகளில் வென்றது.
இடையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸூம் திமுகவும் முறுக்கிக் கொண்டு தனித்தனியாக நின்றன. பிரதமருக்கான அந்தத் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி 4.4% வாக்கு வங்கியை மட்டுமே பெற்றிருந்தது.
ஆக, தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலம் 4-5% என்றே அனுமானிக்கப்படுகிறது. இந்த வாக்குவங்கியை உயர்த்த காங்கிரஸூம் பரவலாக எந்த பிரயத்தனத்தையும் எடுத்ததாக தெரியவில்லை. 'அந்த கட்சியில பூத் கமிட்டிக்கே ஆள் இல்லை' என மதுரை மாவட்ட திமுக மா.செ தளபதி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸை விட தேமுதிகவும் பாஜகவும் அதிக பூத் ஏஜெண்டுகளை நியமித்து வைத்திருக்கிறது.
' பூத் அளவில் ஒரு கட்சியின் வலுவை வைத்துதான் அந்தக் கட்சி எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை அனுமானிக்க முடியும். அந்த வகையில் காங்கிரஸ் பின்னடைவையே சந்திக்கிறது. மேலும் காங்கிரஸின் தேசியத் தலைமையும் மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்கான அக்கறையை காட்டுவதில்லை. காங்கிரஸின் எதிரியான பாஜகவின் முக்கிய தலைகள் தமிழகத்தில் முகாமிடுவதில் பாதியளவுக்கு கூட காங்கிரஸ் தலைகள் இங்கே எட்டிப் பார்ப்பதில்லை.
வாக்குவங்கியில் பெரும்பலமில்லாத, அதை உயர்த்திக் கொள்ள எந்த பிரயத்தனமும் எடுக்காத ஒரு கட்சிக்கு எதற்கு அதிக சீட்டுகளை கொடுக்க வேண்டும்? எதற்கு அவர்களை மந்திரியாக்க வேண்டும் என்பதுதான் உ.பிக்களின் குமுறல்.

மேலும், காங்கிரஸின் உருட்டல்களுக்கு பயந்து ஒரு எல்லைக்கு மேல் அதிக சீட்டுகளை அவர்களுக்கு கொடுத்தால், விசிகவும் கம்யூனிஸ்ட்டுகளும் முகம் சிவப்பார்கள். அவர்களுக்கும் அதிக தொகுதிகளை கொடுத்தால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்ட போதே 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. இப்போது ஆட்சியின் மீதான குறைபாடுகளோடு தேர்தலை எதிர்கொள்கிறது.
ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து, அதன்வழி தனித்த மெஜாரிட்டியை பெற முடியாமல் போனால் அமைச்சரவையை பகிர்ந்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படும். அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள யார்தான் விரும்புவார்?
2006 போன்ற மைனாரிட்டி நிலை இப்போது வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக காங்கிரஸிடம் இவ்வளவு கறார் காட்டுவதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.!












