சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்...
`மனைவி அந்த கேள்வியை கேட்டதும் சங்கடமா போச்சு'- நெல்லை புத்தக திருவிழா புறக்கணிப்பு குறித்து திவான்
திருநெல்வேலியில் தமிழக அரசு சார்பில் பொருநைப் புத்தகத் திருவிழா கண்காட்சி இரு தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
125க்கும் பேற்பட்ட பதிப்பகங்கள் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன. பிப்ரவரி 22ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில், எழுத்து, வாசிப்புடன் தொடர்புடைய இந்த மாபெரும் விழாவில், திருநெல்வேலியில் வசித்து வரும் 70 வயதைக் கடந்த எழுத்தாளர், வாழும் காலத்திலேயே புத்தகங்கள் அரசுடமையாக்கப்பட்ட புகழுக்குரியவர், வரலாற்று ஆய்வாளர், 190 புத்தகங்கள் வரை எழுதியிருப்பவர், மிசா காலத்தில் சிறைவாசம் சென்றவர் எனப் பல பெருமைகளைப் பெற்ற செ.திவானின் பெயர் இந்தப் புத்தக் கண்காட்சிக்கான அழைப்பிதழலில் இடம் பெறவில்லை என்பதுடன்... அவருக்கு அழைப்பிதழே வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பாகப் பலர் ஆதங்கத்தைத் தெரிவித்து வர, திவானிடமே பேசினோம்.

''தொடங்கின முதல் நாள் போய் மூவாயிரம் ரூபாய் வரைக்கும் புத்தகங்கள் வாங்கி வந்தேன். அதுக்கடுத்த நாள் ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். என்பாட்டுக்குப் பதிப்பகங்களின் அரங்கங்களுக்குப் போய் புத்தகங்களை வாங்கிட்டு வந்துட்டேன். அங்க கையில ஒருத்தர் அழைப்பிதழ் வச்சிருந்தார். வாங்கிப் பார்த்தேன். நூறு நூத்தம்பது பேருக்கு மேல விருந்தினர்கள், அழைப்பாளர்கள்னு பெயர் போட்டிருந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்தவங்கிற அந்த ஒரு காரணத்துலயாச்சும் எங்காவது ஒரு மூலையில என் பெயரையும் போட்டிருக்கலாம். ரொம்ப வருத்தமா இருந்தது.
நான் செல்போன் வச்சிக்கிடுறதில்ல. சமூக ஊடகங்களிலும் இல்ல. ஆனா என்னுடைய நண்பர்கள் சிலர்தான் இதுபத்தி எங்கிட்ட தங்களது வருத்தங்களைப் பதிவுசெய்தாங்க.
இன்னைக்கும் என் வீட்டுல இப்ப சுமார் ரெண்டு லட்சம் புத்தகங்கள் இருக்கு. என் வேலை எழுதறது, புத்தகம் வாசிக்கறது. இன்னைக்கு நேத்தா செய்றேன்.
வருத்தத்தை வெளியில காட்டிக்காம பேசாம வீட்டுக்கு வந்தேன். ஆனா வீட்டுல என் மனைவியே அதைக் கேட்டுட்டாங்க. அப்ப ரொம்ப கஷ்டமாயிடுச்சு.
எழுத்தாளன், மனைவி பிள்ளைகளுக்குப் பெரிசா சொத்து சுகம் சேர்த்து வைக்கிறதுல்ல. அவனுக்கு ஓர் அங்கீகாரம் கிடைச்சாலே அது அந்த குடும்பத்துக்குப் பெரிய சந்தோஷம். 'அழைப்பிதழில் பெயர் இல்லையேனு எதுக்கு நினைச்சுகிட்டு, அழைப்பிதழ்கூட இல்லையே'னு நினைச்சப்பதான் உடனே முதல்வருக்கும் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் என் ஆதங்கத்தை தெரியப் படுத்தணும்னு நினைச்சேன்.
உடனே ஒரு கடிதம் அனுப்பிட்டேன்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மூணு மாவட்டங்களிலும் சேர்ந்து இதுவரை 25 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டிருக்கு. அதுல 24 பேர் நூல்கள் அவர்களுடைய இறப்புக்குப் பிறகு ஆக்கினாங்க. எனக்கு மட்டும்தான் நான் உயிரோடு இருக்கிறப்பவே நடந்தது. 2022 ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின்தான் அந்தப் பெருமையைத் தந்தது. அப்படியிருக்கும்போது அந்த ஒரே ஆளான என்னை, நான் இதே திருநெல்வேலியில இன்னைக்கும் 72 வயசுலயும் எழுதிட்டிருக்கிற சூழல்ல எப்படி மறந்தாங்கன்னு தெரியலை, இது எனக்கு ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. `எழுத்தாளர்கள் மீது தனிப்பிரியம் கொண்ட கலைஞர் வழி நடக்கும் அரசு இந்த மாதிரி கவனமின்மையை எப்படி அனுமதிக்கலாம்'ன்னு கடிதத்தில் தெரிவிச்சிருக்கேன்.
என்னுடைய ஆதங்கத்தைக் கொட்டிட்டேன், அவ்வளவுதான்" என்கிறார் திவான்.



















