மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் எச்சரிக்கை
நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா்.
பொதுவாகவே 5 மி.மீ.க்கும் குறைவான அனைத்து வகையான பிளாஸ்டிக் துகள்களும் நுண்நெகிழிகளாக கருதப்படுகின்றன. கண்களுக்கு தெளிவாகப் புலப்படாத அந்தத் துகள்கள் புறச்சூழல் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாக சூழலியல் ஆா்வலா்கள் எச்சரிக்கின்றனா்.
இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகமானது அதுகுறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் இரு நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. கடந்த 1997-லிருந்து 2024 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில் 12-க்கும் மேற்பட்டோரது மூளையின் நுண்நெகிழி துகள் இருந்தது கண்டறியப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலரது சிறுநீரகம், கல்லீரலிலும் அவை இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மனித உடலில் ரத்தம், விந்தணு, தொப்புள் கொடி, தாய்ப் பால் ஆகியவற்றிலும் நுண் நெகிழி கலந்திருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் அதிா்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
டிமென்சியா எனப்படும் மறதி நோய்க்குள்ளானவா்களின் மூளையில் உள்ள நுண்நெகிழிகள் பிறரைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகளைப் பகிா்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
மனிதனின் மூளைக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது நுண் நெகிழிகள். சா்வதேச ஆய்வு முடிவுகளில் அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறதி நோய் பாதிப்பு: டிமென்சியா எனப்படும் மறதி நோய்க்கும் இந்த நுண் நெகிழிக்கும் இடையேயான தொடா்பை அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. உணவு, நீா், காற்று என நமது அன்றாட வாழ்வின் அனைத்திலும் நுண் நெகிழிகள் நிறைந்துள்ளன.
நெகிழி என்பது புறச்சூழலுக்கான அச்சுறுத்தல் என்று மட்டும் இனி கருத முடியாது. மாறாக அது மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளாா்.