`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது
தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக தென்காசிக்கு கொண்டு வரப்பட்ட பாலமுருகனை காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மீது நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. கடையம் காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திருச்சூர் சிறையில் இருந்த பாலமுருகனை கடந்த நவம்பர் மாதம் அருப்புக்கோட்டை காவல்துறையினர் அழைத்துச் சென்று, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் திருச்சூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறை வளாகத்தில் இருந்து பாலமுருகன் தப்பிச் சென்றார். இதையடுத்து பாலமுருகனை பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடையம் ராமநதி அணை அருகே மலைப்பொத்தை பகுதியில் பாலமுருகன் பதுங்கியிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மலையில் ஏறி தேட முயன்றனர்.

அப்போது அவர்கள் மலையின் செங்குத்தான பகுதியில் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் பாலமுருகன் அங்கிருந்து தப்பிச் சென்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த வாரம் பதுங்கியிருந்தார். அங்கும் அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஜோஸ்ஃபினா மகள்கள் இருவருடன் விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜோஸ்ஃபினா உயிரிழந்தார். மகள்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இறந்த ஜோஸ்ஃபினாவின் உடலையும் இதுவரை அவரது உறவினர்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் ஆகியோர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த நான்கு தனிப்படை காவலர்கள், பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து இரவோடு இரவாக இருவரையும் தென்காசிக்கு அழைத்து வந்த காவல்துறையினர், தென்காசி நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் நீதி விசாரணை வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். பல மாதங்களாக தேடப்பட்டு வந்த இந்த பிரபல ரவுடியின் கைது, தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.



















