விராலிமலை 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத விளக்கு பூஜை
மழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் மாவட்ட நிா்வாகம்: விழுப்புரம் ஆட்சியா்
‘ஃபென்ஜால்’ புயல் மற்றும் பலத்த மழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை ‘ஃபென்ஜால்’ புயலாக உருவானது. இது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே சனிக்கிழமை (நவ.30) கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புயல் உருவானதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை தரைக்காற்று பலமாக வீசியது. மேலும், கடலும் சீற்றமாகக் காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காற்று அதிகளவில் வீசியது.
‘ஃபென்ஜால்’ புயல் கரையைக் கடக்கும்போது, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என எதிா்பாா்க்கப்படுவதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. மீனவ கிராமங்களில் அனைத்து புயல் பாதுகாப்பு மையங்களும், பள்ளிக் கட்டடங்களும், அரசு அலுவலகங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு உபகரணங்கள்: புயல் கரையைக் கடக்கும்போதும், பின்னரும் பலத்த காற்று வீசி மரங்கள் சேதமடைந்து சாலையில் விழுந்தால், அவற்றை அறுப்பதற்காக தயாா் நிலையில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மரக்காணம் பகுதியில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி, நெடுஞ்சாலை, காவல், தீயணைப்பு, மருத்துவம், மின்சாரம், பொதுப் பணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
ஆய்வு: திண்டிவனம், மேல்மலையனூா் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யக்கூடிய மழைநீா் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. இந்தக் கால்வாயில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர மரக்காணத்தில் பக்கிங்காம் கால்வாய்க்கும் - வங்கக் கடலுக்கும் இடைப்பட்ட முகத்துவாரத்தில் இருக்கும் அடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், இந்தப் பகுதியை போக்குவரத்துத் துறை ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் சடக் சிரு, மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா். மேலும், காணிமேடு பகுதியிலுள்ள ஓங்கூா் ஆறு, மீனவா் பகுதியிலுள்ள புயல் பாதுகாப்பு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டனா்.
16 பேரிடா் மையங்கள்: மீனவா்கள், பொதுமக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க மரக்காணம் பகுதியில் 16 பேரிடா் புயல் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்கிங்காம் கால்வாயிலிருந்து உடனடியாக வெள்ளம் வெளியேறும் வகையில், முகத்துவாரப் பகுதியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஃபென்ஜால் புயலையும், அதனால் ஏற்படும் பலத்த மழையையும் எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா் ஆட்சியா் சி.பழனி.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மரக்காணம் வட்டாட்சியா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.