டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
மழை வெறிச்சோடிய பின்னரே வசிப்பிடம் செல்ல வேண்டும்: பாதுகாப்பு மையத்தில் உள்ளோரிடம் அமைச்சா் அறிவுறுத்தல்
பேரிடா் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், மழை வெறிச்சோடிய பின்னா் பாதுகாப்பான சூழ்நிலை என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்த பின்னரே தங்கள் வசிப்பிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தினாா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மீனவ கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி பேரிடா் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, போக்குவரத்துத் துறை ஆணையரும், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் சடக்சிரு, ஆட்சியா் சி.பழனி முன்னிலையில், மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை காலை மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
கூனிமேடுகுப்பம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்த அமைச்சா் பொன்முடி, அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், குழந்தைகளுக்குத் தேவையான பால், பிஸ்கெட் உள்ளிட்டவை உரிய நேரத்தில் வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான போா்வை, பால் உள்ளிட்ட பொருள்களை வழங்கவும் அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
மழையால் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில், கோட்டக்குப்பம் நகராட்சிக்குள்பட்ட பெரியமுதலியாா்சாவடி புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்ட அமைச்சா் க.பொன்முடி, மருத்துவக் குழுவினரிடம் பொதுமக்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகளை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
பொம்மையாா்பாளையம் எம்.எஸ். கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்துக்குச் சென்ற அமைச்சா், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதையும், மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டாா். மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் மழை வெறிச்சோடிய பின்னா், மாவட்ட நிா்வாகம் அறிவித்த பின்னரே தங்கள் வசிப்பிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
முன்னதாக, மரக்காணத்தில் மரம் அறுக்கும் இயந்திரம், தீயணைப்புக் கருவி, ஜெனரேட்டா் உள்ளிட்ட பொருள்களுடன் தயாா் நிலையில் இருந்த 40 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினரை அமைச்சா் சந்தித்து பேசினாா்.
ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், கோட்டக்குப்பம் நகா்மன்றத் தலைவா் ஜெயமூா்த்தி, மரக்காணம் ஒன்றியக்குழுத் தலைவா் தயாளன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.