விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Sce...
பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா' - விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள்
பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்தையுடன் விபத்துக்கு முன் பேசிய கடைசி தொலைபேசி உரையாடல் தற்போது வெளிவந்துள்ளது.
“நாளை பேசலாம்” என்ற கடைசி வார்த்தை
மும்பை வொர்லியைச் சேர்ந்த பிங்கி மாலி, தனது தந்தை சிவ்குமார் மாலியிடம் “அப்பா, நான் அஜித் பவாருடன் பாராமதிக்கு பறக்கிறேன். அவரை இறக்கிவிட்ட பிறகு நான் நாந்தேட் செல்கிறேன். நாளை பேசலாம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த “நாளை” இனி ஒருபோதும் வராது என அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
“நான் என் மகளை இழந்துவிட்டேன். என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லை. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். என் மகளின் உடலை மட்டும் தர வேண்டும். மரியாதையுடன் அவளது இறுதி சடங்கை செய்ய வேண்டும். அதுதான் எனது ஒரே விருப்பம்,”என்று சிவ்குமார் மாலி தெரிவித்துள்ளார்.

பிங்கி மாலி சமீப காலமாக அஜித் பவாருடன், அதே சிறிய ரக விமானத்தில் பல பயணங்களில் இணைந்து சென்றதாகவும், அந்த நாளும் வழக்கம்போல தனது பணிக்காகவே விமானத்தில் இருந்ததாகவும் சிவ்குமார் கூறியுள்ளார்.
இந்த விமான விபத்து புதன்கிழமை காலை, புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையம் அருகே நடந்தது. டெல்லியைச் சேர்ந்த VSR வெஞ்சர்ஸ் நிறுவனம் இயக்கிய Learjet 45 ரக விமானம் (பதிவு எண்: VT-SSK) விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர். மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, பிரதான விமானி சுமித் கபூர் மற்றும் இணை விமானி ஷம்பாவி பாதக். இந்த விபத்தில் ஐவரும் உயிரிழந்தனர்.
விமானப் போக்குவரத்து விவரங்களின்படி, இந்த Learjet 45 விமானம் காலை 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டது. காலை 8.45 மணியளவில் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், காலை 8.50 மணியளவில் பாராமதி அருகே விமானம் விபத்துக்குள்ளானது.

அஜித் பவார், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சி (Zilla Parishad) தேர்தல்களை முன்னிட்டு நடைபெற இருந்த நான்கு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பயணம் செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து தகவல் கிடைத்த உடனேயே அவசர மீட்பு குழுக்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.
விசாரணைக்கு AAIB குழு
இந்த விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, விமான விபத்து விசாரணை பணியகம் (Aircraft Accident Investigation Bureau – AAIB) சார்ந்த ஒரு குழு, டெல்லியிலிருந்து புனேவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.














