விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Sce...
OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி
தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்ததும் கூட்டணியை அறிவிப்பேன், நாங்கள் அரசியல் கட்சி அல்ல என்று ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பதில்களை கூறி அரசியல் களத்தை குழப்பி வந்தார்.
இந்த நிலையில், இன்று தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாக்கி, சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை
எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதனை நிரூபித்து காண்பிப்பதற்காக, ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முக்கிய காரணம். என்னுடன் கட்சியும், தொண்டர்களும், மக்களும் இல்லை என்ற சூழலை கட்டமைக்க செய்த சூழ்ச்சிகள் அவை. இன்றுவரை எங்களுடைய நோக்கம் சட்ட போராட்டம் நடத்தி தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு தருவதுதான். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்ற எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதல்வராக அரியணை ஏற்றியது தேனி மாவட்டம். எனவே, இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்ற முறையில், கழகத்தினுடைய சட்டவிதிக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது என்பதால், 88 கழக ரீதியான மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அ.தி.மு.க பிரிந்திருக்கிறதா சேர்ந்திருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.

நான் என்.டி.ஏ கூட்டணியில் இணைவேன் என்பது டிடிவி தினகரனின் ஆசை அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் பேச ஒன்றுமில்லை. இன்று டிடிவி தினகரனும், எடப்பாடியும் பங்காளிகளாக இணைந்திருக்கிறார்களே, நாங்கள் ஏற்கெனவே இணைய வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியானு கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.














