தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் சமையல் எரிவாயு மானியம் ரூ.2,700 கோடி ரத்து செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளைக் கண்டித்து ஈரோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சுந்தர்ராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளா் மாரிமுத்து ஆகியோா் பேசினாா்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இளைய தலைமுறையினருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் இல்லை. சமையல் எரிவாயுக்கான மானியத் தொகை ரூ.2,700 கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி குறைக்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என ஆா்ப்பாட்டத்தில் பேசியவா்கள் வலியுறுத்தினா். நகர கமிட்டி உறுப்பினா் ரவி நன்றி கூறினாா்.