சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; ...
`முத்தமழை இங்கு கொட்டி தீராதோ'..! சென்சேஷனல் ஹிட் பாடல் உருவானது எப்படி? | வரித்துணையே 03
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

இன்றைய பகுதிக்கு, சமீபத்தில் நம் செவிகளில் ஓயாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த 'முத்தமழை' பாடல் பற்றி உரையாடப் பாடலாசிரியர் சிவா அனந்தை சந்தித்தோம். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர் இப்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். நம்மை இன்முகத்துடன் வரவேற்றவர் 'முத்தமழை' பாடல் பற்றிய சுவாரஸ்யங்களை விவரிக்கத் தொடங்கினார்.
"'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன். ஆனால், இத்தனை பெரிய ஹிட் ஆகுமென நான் நினைக்கவில்லை என்பதே உண்மை. எண்ணற்ற பாடல்கள் செய்திருக்கும் ரஹ்மான் சாரும், மணி ரத்னம் சாரும் இந்தப் பாடல் ஹிட் ஆகும் என கணித்திருக்கலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகவேண்டும் என நினைத்தாலே, அது சென்சேஷனல் பிளாப்தான் ஆகும்!
இந்தப் பாடலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி ஃபேவரிட்டாக இருக்கும். எனக்கு இதில் 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ' வரிதான் மிகவும் நெருக்கமானது. இந்த வரி பெண்களை மட்டுமே குறிப்பதாக புரிந்துகொள்ளப்படும்.

ஆனால், இது அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்னை. காதல் வந்தாலும் போனாலும் நம் கட்டுப்பாட்டில் எதுவுமிருக்காது. இப்பாடல் கவ்வாலி இசை வடிவத்தில் இருக்கும் பாடல் என்பதால், தாளத்திற்கேற்ப இதனை எழுதியதும் மகிழ்ச்சி!
என்னுடைய பாடல்களில் கவித்துவமும் நிறைந்திருக்க வேண்டும் என எண்ணுவேன். அப்போதுதான் அது காலத்தாலும் அழியாத பாடலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை." என இடைவெளி தந்தவர், "கண்ணதாசன் எழுதிய 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' பாடலின் எமோஷன் இதிலும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.
முதலில் ரஹ்மான் சார் இந்தப் பாடலின் டியூனைத் தரும்போது, இதனுடைய டெம்போ வேறொன்றாக இருந்தது. இப்போது இந்தப் பாடலில் இருக்கும் வேகம் முதலில் கொடுக்கப்பட்ட டியூனில் இல்லை. அதனால் மிகவும் மெதுவாக நகரும் அந்த டியூனுக்கேற்ப நான் முதலில் சோகமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வரிகளை எழுதியிருந்தேன்.
பிறகு மணி சார், 'இது கவ்வாலி பாடலாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது' எனச் சொன்னார். இதைக் கேட்டதும் உடனே ரஹ்மான் சாரும் 'நீங்கள் சொல்வது சரிதான்' எனச் சொல்லிவிட்டு டியூனை மாற்றினார். அந்தப் புதிய டியூனே முத்தமழை என்ற வார்த்தையை ஒலிப்பது போலத் தெரிந்தது.

அந்த ஒலியையே பாடலின் தொடக்கமாகவும் கொண்டு வந்துவிட்டேன். இந்தப் பாடலை முழுமையாகவும் சந்தோஷமான உணர்விலேயே கொண்டு போய்விட முடியாது. ஒரு பெண்ணின் சோகப் பார்வையும் இதிலிருக்க வேண்டும் என நினைத்தேன். அப்படியான தருணத்தில் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடல்தான் என்னிடத்தில் சிறந்த ரெஃபரென்ஸாக இருந்தது. அட்டகாசமான பாடலது! காலத்தால் அழியாத ஒன்று அது. அந்தப் பாடலை எனக்குள் நினைத்துக் கொண்டுதான் இந்த 'முத்தமழை' பாடலை எழுதினேன். அதனையடுத்து, இசைக்கேற்ப அனைத்து வார்த்தைகள் வந்துவிட்டன." எனப் புன்னகைத்தார்.
"இந்தப் பாடல் வந்த பிறகு என்னை பலரும் பாடலெழுதுவதற்கு அழைக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் அமைதியாக நான் முழு நேரப் பாடலாசிரியர் இல்லை என்பதைச் சொல்லிவிடுவேன். மற்றவர்களுக்குப் பாடலெழுதினால், அவர்கள் சொல்லும் சூழலுக்குப் பாடல் எழுத வேண்டியதாக இருக்கும். ஆனால், இப்பாடல் எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திற்காக எழுதினேன். எங்களுடைய படமென்பதால், எழுத வேண்டிய நேரம் வரும்போது எழுதிவிடுகிறேன்.

இந்தப் பாடல் பெண் பார்வையைப் பிரதிபலிக்கிறது. நான் இப்பாடலுக்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'அலைக்கடல்' பாடலில் ஒரு பெண்ணின் பார்வையை கொண்டு வந்திருந்தேன். அதனால், 'முத்தமழை' பாடலும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
தமிழில் பெண்ணின் பார்வையிலிருந்து பல அருமையான பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதியாரும் பெண்ணின் பார்வையைக் கொண்டு வந்து எழுதியிருக்கிறார். அவருடைய 'கண்ணன் என் காதலன்' தொகுப்பில் பெண்ணின் பார்வையிலிருந்துதான் பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு ஆண், பெண் பார்வையில் பாடல் எழுதுவது சகஜம்தான்.
ஜானகி அம்மா பாடியிருக்கும் 'இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்' பாடல் போல, அவர் பாடிய பல பாடல்கள் ஓர் ஆண் பாடலாசிரியர் எழுதிய பாடலாகத்தான் இருக்கும். ஆனால், அதில் அழகான பெண்மை வெளிப்பட்டிருக்கும். 'முத்தமழை' பாடலுக்கு பல பெண்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். 'எங்கள் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்' எனவும் பல பெண்கள் சொன்னார்கள். இதைத்தான் இந்தப் பாடலுக்குக் கிடைத்த முழு வெற்றியாகப் பார்க்கிறேன்." என்றார்.

"சமீபத்தில், ட்விட்டரில் ஒரு காணொளியைப் பார்த்திருந்தேன். இரண்டு பார்வைச் சவால் கொண்ட குழந்தைகள் 'முத்தமழை' பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். அந்தக் காணொளி என்னை நெகிழ வைத்தது. அதுபோல, சில பள்ளிக் குழந்தைகள் பள்ளியில் ஒருசேர இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் காணொளியையும் பார்த்திருந்தேன். இப்படியான பல விஷயங்களைத்தான் இந்தப் பாடலுக்குக் கிடைத்த உரிய பாராட்டாகவும் பார்க்கிறேன்." எனச் சிரித்தவாறே முடித்துக் கொண்டார்.

















