Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன?
மும்பை: "ஆண் குழந்தை இல்லை" - 6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் சிக்கியது எப்படி?
மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் கலம்பொலி என்ற இடத்தில் வசிப்பவர் சுனந்தா(30). இவரது கணவர் சாப்ட்வேர் பொறியியலாளராக இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
அச்சிறுமிக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியாகப் பேச வராது. இந்நிலையில், வீட்டில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரது தந்தை சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மருத்துவமனையில் டாக்டர்கள் சோதித்துப் பார்த்தபோது சிறுமி இறந்திருந்தது தெரிய வந்தது.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சிறுமியின் தாயார் தெரிவித்தார். டாக்டர்களுக்கு சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. மருத்துவ காரணத்தால்தான் தனது மகள் இறந்தார் என்று சுனந்தா தெரிவித்துக்கொண்டிருந்தார்.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அச்சிறுமியின் தாயார் சுனந்தாவை அழைத்துச்சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த தீவிர விசாரணையில் மகளைக் கொலை செய்ததை சுனந்தா ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் தனது மகள் சரியாக மராத்தி பேசவில்லை என்பதற்காக கொலை செய்தேன் என்று தெரிவித்தார்.
ஆனால் அது உண்மையான காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி போலீஸார் மேலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சுனந்தா தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.
அதோடு மகளும் சரியாகப் பேச முடியாமல் இருந்ததால் அவரைக் கொலை செய்திருந்தார். அதோடு மன நலப் பிரச்னைக்காக ஏற்கனவே சிகிச்சை எடுத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுனந்தாவை போலீஸார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


















