`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விள...
மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?
மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.
ரயில் பயணிகள் அதிக அளவில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மும்பையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து 1063 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மும்பையில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இரு ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் இரும்புத் தடுப்பில் ஏறி சில பயணிகள் தண்டவாளத்தைக் கடக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைக்கு மேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய உக்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
மும்பையில் மேற்கு ரயில்வே நிர்வாகம் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த 60 கிலோமீட்டரிலும் தண்டவாளத்திற்குள் பொதுமக்கள் நுழையாமல் இருக்க இரும்பு தடுப்பு அல்லது சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு ரயில்வேயில் மும்பைக்கு உட்பட்ட பகுதியில் 29 ரயில் நிலையங்கள் இருக்கின்றன.

இந்த ரயில் நிலையங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களிடையே இருக்கும் இரும்பு அல்லது சிமெண்ட் தடுப்புகளில் கிரீஸ் தடவும் வேலையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ரயில் பயணிகள் தடுப்புகளில் ஏறிக் குதிக்க முடியாது.
தடுப்புகளில் ஏறினாலும் உடைகளில் கிரீஸ் பட்டுவிடும். இது போன்ற திட்டத்திற்குப் பயணிகள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் ரயில் தண்டவாளத்தைக் கடப்பது குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கிரீஸ் காய அதிக நாட்கள் பிடிக்கும் என்றும், அப்படிக் காயும் போது ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் மீண்டும் கிரீஸ் தடவுவார்கள் என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு மத்திய ரயில்வேயும் இது போன்று கிரீஸ் தடவி சோதனை செய்து பார்த்தது.

















