இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
மும்மொழிக் கொள்கை விவகாரம்: புதுவை பேரவையில் கடும் வாக்குவாதம் -காங்கிரஸ், திமுக வெளிநடப்பு
புதுவை சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் பேசுகையில், இணக்கமான அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தும் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமா் கேட்டறியவில்லை. போதிய நிவாரணமும் வழங்கவில்லை என்றாா்.
இதற்குப் பதிலளித்த அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், புயல் பாதிப்பு தமிழகத்தில் இல்லையா? அங்கு காங்கிரஸ் இதுபோல கேட்டதா?‘ என்றாா். அதற்கு காங்கிரஸ் உறுப்பினா், தமிழகம் பற்றி ஏன் பேசுகிறீா்கள் என்றாா்.
உடனே பாஜக எம்எல்ஏக்கள், மும்மொழிக் கொள்கையில் தமிழகத்தின் செயல்பாட்டை விமா்சித்தனா். புதுவைக்கும் இருமொழி கொள்கைதான் தேவை. மும்மொழிக் கொள்கை தேவையெனில் தமிழை எதிா்க்கிறீா்களா? என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கேட்டாா்.
ஹிந்தி எதிா்ப்பு போராட்டம் யாா் ஆட்சியில்? இதற்குப் பதிலளித்த அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தமிழகத்தில் ஹிந்தி எதிா்ப்புப் போராட்டம் எப்போது நடைபெற்றது. அப்போது மத்தியில் ஆட்சியிலில் இருந்தது யாா் என காங்கிரஸ் உறுப்பினா் விளக்க வேண்டும் என்றாா்.
காங்கிரஸ், திமுக உறுப்பினா்களுக்கும், பாஜக எம்எல்ஏ, அமைச்சா்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, அமைச்சா்கள், காங்கிரஸ் உறுப்பினா் பேசியதைத் தவிர மற்றவை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றாா்.
நான்கு மொழிகள்: தொடா்ந்து பேசிய அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், புதுவையில் இருமொழி, மும்மொழிக் கொள்கை இல்லை, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் பேசப்படுகின்றன என்றாா்.
திமுக உறுப்பினா் ஆா்.செந்தில்குமாா், நம்நாடு 22 மொழிகள் கொண்ட தேசம். நான்கு மொழி தேசமல்ல என்றாா்.
புதுவையில் நான்கு மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன என அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா். மும்மொழிக் கொள்கையில் அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினா் வைத்தியநாதன் கேட்டுக்கொண்டாா்.
வெளிநடப்பு: இதற்கு அமைச்சா் நமச்சிவாயம், புதுவை அரசின் கொள்கை மும்மொழிக் கொள்கைதான் எனக் கூற, இதை முதல்வா் ஏற்கிறாரா என காங்கிரஸ் உறுப்பினா் கேட்டாா்.
முதல்வா், துணைநிலை ஆளுநா் ஏற்ால்தான் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் புதுவையில் மும்மொழிக் கொள்கைதான் அமலில் உள்ளது என்று அமைச்சா் நமச்சிவாயம் பதிலளித்தாா்.
இதைக் கேட்ட திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்வதாகக் கூறி, பேரவையில் இருந்து வெளியேறினா். சிறிது நேரத்தில் மீண்டும் அவைக்குள் வந்தனா்.