What to watch: `நாயகன்', `ஆரோமலே', `கிஸ்' - இந்த வாரம் வெளியாகியுள்ள சீரிஸ் மற்ற...
மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், 04.11.2025 அன்று காலை தூதனூர் காட்டுளவில் உள்ள கல் குவாரியில் சடலம் மிதப்பதாக அந்தப் பக்கம் சென்றவர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கல்குவாரியில் மிதந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது ஆடு மேய்க்கும் பெரியம்மா என்பது தெரிய வந்தது.

அதன் பின்னர் மூன்று மணி நேரம் கழித்து பாவாயின் உடல் மேலே மிதந்தது. அதனையும் மீட்டெடுத்தனர். இரு மூதாட்டியின் உடல்களையும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் முதல் கட்ட விசாரணையில் பெரியம்மா அணிந்திருந்த இரண்டு தோடு, மூக்குத்தி, வெள்ளி கால் காப்பு ஆகியவையும், பாவாயி அணிந்திருந்த தோடு, வெள்ளி கால் காப்பு ஆகியவையும் காணாமல் போயிருக்கின்றன. இதனையடுத்து கல் குவாரி அருகே குடிசை வீட்டில், சேலம் மாவட்டம் கருப்பூர், வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் குவாரி அருகே தங்கி உள்ளார்.
இவர் கடந்த 3 ஆம் தேதி இரவிலிருந்து காணவில்லை. அது மட்டுமல்லாமல் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அவர் மீது சந்தேகப்பட்டு மூதாட்டிகளின் நகைக்காக கொலை செய்யப்பட்டனரா என விசாரணை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு மூதாட்டிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அய்யனாரை சங்ககிரி அருகே ஒருக்காமலை பகுதியில் போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அய்யனார் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

















