Abraham Accord: ஈரான் போர்; மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் வைக்கும் செக்; 'நோ' சொன்ன...
"மொத 'நம்ம சேர்ந்து டைரக்ட் பண்ணுவோம்'னுதான் RJ Balaji சொன்னார்" - 'கருப்பு' ரைட்டர் சரவணன் பேட்டி
'கருப்பு' படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள். படம் வெளியாகி இரண்டாவது வாரத்திலும் 'ஹவுஸ்ஃபுல்'-ஆகக் காட்சிகள் நிறைந்திருக்கின்றன.
'கருப்பு' திரைப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அதற்கு முன்பே இப்படத்திற்கான ரைட்டிங் வேலைகளை ஆர்.ஜே. பாலாஜி & டீம் தொடங்கிவிட்டனர். இந்த டீமில் இருக்கும் என்.ஜே. சரவணன், ஆர்.ஜே. பாலாஜியின் நம்பிக்கைக்குரியவர்.

'எல்.கே.ஜி' படத்தில் தொடங்கிய இவர்களுடைய பயணம் இப்போது 'கருப்பு' வரை தொடர்ந்திருக்கிறது.
முக்கியமாக, 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' என இரண்டு படங்களையும் ஆர்.ஜே. பாலாஜியுடன் சேர்ந்து இயக்கியவர் என்.ஜே. சரவணன். 'கருப்பு' படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பேட்டி கண்டேன்.
நம்மிடையே பேசியவர், "படத்திற்குக் கிடைச்சிருக்கிற ரெஸ்பான்ஸ் செமையா இருக்குங்க. நானும் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் தியேட்டர் விசிட் போயிட்டு வர்றேன். மக்கள் நல்லாவே படத்தைக் கொண்டாடிட்டு இருக்காங்க.
படம் நல்லபடியாக வரும், தியேட்டர்ல ஹிட் ஆகும்னு நாங்க எதிர்பார்த்தோம். அதுவே இப்போ நடந்திருக்கு. 'மூக்குத்தி அம்மன்', 'வீட்டுல விசேஷம்' போன்ற படங்கள்ல ஆர்.ஜே. பாலாஜியோட சேர்ந்து நானும் படத்தை இயக்கினேன். அந்த இரண்டு படங்கள், இப்போ 'கருப்பு'னு மூன்று படங்களிலும் நான் ரைட்டராக இருந்திருக்கேன்.
எந்தவொரு படத்திற்கும் இது பெரிய படம், பயங்கரமாக வரணும்னு நினைச்சு நாங்க எழுத மாட்டோம். ரைட்டிங்ல ரொம்பவே நேர்மையாக இருப்போம். 'மூக்குத்தி அம்மன்'ல பெண் கடவுள்ங்கிற கதாபாத்திரத்தை நாங்க எழுதினோம்.
அதன் பிறகு நயன்தாரா மேம் வந்தது பெரிய சர்ப்ரைஸ். அதே மேஜிக்தான் இப்போ 'கருப்பு' படத்துக்கும் நடந்திருக்கு. முதல்ல 'கருப்பு' படத்தின் கதையையும் ஒரு பெண் கடவுள் முதன்மை கதாபாத்திரத்துல இருக்கிற வெர்ஷனைத்தான் எழுதினோம்.
அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஒரு பெரிய வாய்ப்பும் வந்துச்சு. அப்புறம், சூர்யா சாருக்கு இந்தக் கதை சொல்லப்பட்டது. பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து எழுதிய கதையை ஒரு பெரிய மாஸ் கமர்ஷியல் ஹீரோவுக்கு மாத்துறது ரொம்பவே கஷ்டம்.
பிறகு ரைட்டிங்ல முழுமையாக ஈடுபட்டோம். அதற்கான ரிசல்ட் இப்போ கிடைச்சிருக்கு. முக்கியமா, இந்தக் கதையை எழுதுவதே கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது.
ஒரு பெரிய ஹீரோ படத்தை நாம் ஒரு ரசிகராக இருந்து பார்க்கும்போது, முதல் பத்து நிமிடத்திற்குள்ள அந்த ஹீரோவின் என்ட்ரி வரலைனா நமக்கே கோபம் வரும்.
கடவுள்ங்கிற கதாபாத்திரம் என்பதால உடனடியாக தொடக்கத்திலேயே ஹீரோ கதாபாத்திரத்தைக் கொண்டு வந்துவிட முடியாது.
எல்லா சீன்-லையும் அந்தக் கேரக்டரை அமைத்திடவும் முடியாது. அந்தக் கதாபாத்திரம் வர்றதுக்கான களத்தை கதையில அமைக்கணும். 'மூக்குத்தி அம்மன்' படத்துல நடந்த மாதிரிதான் இதிலும் நடந்தது. முதல் அரை மணி நேரத்தில ஹீரோ கேரக்டரை எங்களால கொண்டு வரவே முடியல.
பிறகு இந்த இடங்கள்ல ஹீரோ கேரக்டர் வந்தா நல்லாயிருக்கும்னு முடிவு பண்ணி எழுதினோம்." என்றவர், "'வீட்ல விசேஷம்' திரைப்படம் பண்ணும்போதே, நாங்க ரெண்டு பேரும் தனித்தனியாகப் படத்தை டைரக்ட் பண்ணுவோம்னு முடிவு பண்ணினோம்.
'வீட்ல விசேஷம்' முடிச்ச பிறகு அவர் நடிக்கப் போயிட்டார். நானும் மற்ற ரைட்டிங் வேலைகள்ல இருந்தேன். பிறகு, 'கருப்பு' படத்தை கமிட் செய்த பிறகு ஆர்.ஜே. பாலாஜியும் 'நம்ம எப்போதும்போல, இந்தப் படத்தையும் சேர்ந்து எடுப்போம்'னுதான் சொன்னார்.
நான்தான் 'இல்ல, இதை நீங்க தனியாகப் பண்ணனும். நாங்க கூடவே இருப்போம்'னு சொன்னேன். அதனாலதான் இந்த முறை நாங்க சேர்ந்து டைரக்ட் பண்ணல" என்றார்.
தொடர்ந்து பேசியவர், "'கருப்பு' படத்திற்கான திரைக்கதையை நாங்க ரொம்ப மாதங்கள் எழுதினோம். ஏன்னா, 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்'னு மூன்று படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான்.
ஆனா, அது மாஸ் படங்கள் கிடையாது. எங்களுக்கு மாஸ் கமர்ஷியல் படத்திற்கு திரைக்கதை எழுதுவதுதான் கொஞ்சம் சவாலாக இருந்தது. புதுசாகவும் இருந்தது.
இப்படியான கமர்சியல் விஷயங்கள் நம்ம படத்துல இருக்கலாமானு எங்களுக்குள்ள சில சீன்கள் பத்தி டிஸ்கஷன் வரும். ஆனா, அதை எப்படி வேறு வழியில செய்யலாம்னு முடிவு பண்ணி திரைக்கதைக்குள் அமைத்தோம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா, எங்க ரைட்டர்ஸ் டீம் எல்லோருமே நாங்க சொல்கிற விஷயத்துல பிடிவாதமாக இருப்போம்.
எங்க எழுத்தாளர் குழுவுல இருக்கிற அஷ்வின், ராகுல்னு எல்லோரும் அவங்க சொல்ற விஷயத்துல ரொம்ப பிடிவாதமாக இருப்பாங்க. இது ரைட்டிங்ல ரொம்ப ஆரோக்கியமான விஷயமாக இருந்துச்சு. எல்லோருமே கமர்ஷியல் கதை எழுதுவது ரொம்ப சுலபம்னு சொல்வாங்க.
ஆனா, அதுதான் எங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்துச்சு. இந்தப் படம் உருவாக மூன்று வருஷம் ஆகியிருக்கு. அதுல ரெண்டு வருஷம் நாங்க எழுதுறதுக்கு நேரம் எடுத்துகிட்டோம்" என்றவர் ஆர்.ஜே. பாலாஜியுடனான அறிமுகம் பற்றி, "'எல்.கே.ஜி' படத்துல நானும் ஆர்.ஜே. பாலாஜியும் கோ டைரக்டராக வேலை பார்த்தோம்.
அவர் நடிச்சிருந்தார். அந்தப் படத்தை கே.ஆர். பிரபு இயக்கியிருந்தார். அப்போ, டிஸ்கஷன்ல எனக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் எல்லா விஷயங்களும் ஒத்துப்போச்சு. நான் யோசிக்கிற விஷயங்களை அவரும் யோசிப்பாரு. அவர் யோசிக்கிற விஷயங்களையே நானும் சொல்வேன்.
இப்படி 'எல்.கே.ஜி' படத்தின் சமயத்துல எங்களுக்குள்ள நல்லா செட் ஆகிடுச்சு. அந்தப் புரிதலுக்கான இடம் எங்க ரெண்டு பேருக்கு இடையில இருந்துச்சு. அதுதான் எங்களை அடுத்தடுத்து தொடர்ந்து பயணிக்க வச்சிருக்கு.
'எல்.கே.ஜி' படத்தின் இயக்குநர் என்னுடைய சீனியர். அவர் மூலமாக நான் அந்தப் படத்துல வேலை பார்த்தேன். அப்போ எனக்கு ஆர்.ஜே. பாலாஜியை நடிகராகத்தான் தெரியும். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்த அறிமுகமும் கிடையாது. பிறகு நாங்க ரெண்டு பேரும்தான் பயங்கர நட்பாகிட்டோம்.
பிறகு, 'எல்.கே.ஜி' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள்ல இருக்கும்போது ஆர்.ஜே. பாலாஜி 'நீங்களும் நானும் சேர்ந்து அடுத்த படத்தை டைரக்ட் பண்ணுவோம்'னு சொன்னாரு. எப்போதுமே எல்லா படத்திலும் கோ டைரக்டர்கிட்ட ஆர்டிஸ்ட் இப்படித்தான் சொல்வாங்க. அதுபோலதான் இதுவும்னு நான் நினைச்சேன்.

ஆனா, எனக்கே தெரியாம ஐசரி கணேஷ் சார்கிட்ட ஆர்.ஜே. பாலாஜி 'நானும் சரவணனும் அடுத்த படத்தைச் சேர்ந்து டைரக்ட் பண்றோம்'னு சொல்லியிருக்கார்.
'எல்.கே.ஜி' படத்தின் சக்சஸ் பார்டியில எனக்கே தெரியாமல்தான், ஆர்.ஜே. பாலாஜி அடுத்த படத்தை நானும் அவரும் சேர்ந்து இயக்கப்போகிறோம்னு அறிவிச்சார்" என்றதும், "சமீபத்திய நேர்காணலில் சில பெரிய இயக்குநர்கள் பெயரைச் சொல்லி இந்த லிஸ்டில் சரவணனும் முக்கியமானவர் எனக் ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டுப் பேசியிருந்தாரே. அதைப் பார்த்தீர்களா?" எனக் கேட்டோம். அவர், "இதுமட்டுமில்லைங்க, எப்போதுமே டீம்ல என்னை விட்டுக் கொடுக்காமல்தான் அவர் பேசுவார்.
எனக்கே சில சமயங்கள்ல கூச்சமாக இருக்கும். ஆனா, எப்போதும் என்னை அவர் முழுமையாகவும் நம்புவார்" என்றார்.
மேலும் பேசியவர், "சூர்யா சார் எங்க டீமை எப்போதுமே பாராட்டுவார். நல்லா கடினமாக உழைக்கிறீங்கனு எங்க டீமை பத்தி சொல்லுவார். 'கருப்பு' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அவரை மீட் பண்ணும்போது, 'சார் என்ன நடக்குது ஒண்ணுமே புரியல'னு மகிழ்ச்சியாக என்கிட்ட சொன்னார்.
எங்க டீமை அவருக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா பெரிய ஆர்டிஸ்டுகளுக்கும் இருக்கும் நற்குணங்கள் அவர்கிட்டயும் இருக்கும். படப்பிடிப்பு தளத்துல மற்ற நடிகர்களுக்கு சஜஷன் ஷாட் (Suggestion Shot) எடுக்கும்போதும் அவர் ஷாட்ல நிற்பாரு.

ஆக்ஷன் சீன்ல டூப் வச்சு போகலாம்னு பேசினாலும், 'நானே பண்ணிடுறேன்'னு சொல்லி அதைச் செய்து முடிப்பார்.
பிறகு, சூர்யா சாருக்கு சில காட்சிகள் பற்றி சந்தேகங்கள் இருக்கும்போது, என்கிட்ட பர்சனலாக 'இதை ஓகேவா? இந்த சீன்ல இப்படி பண்ணலாமா'னு கேட்பார். இப்படி என்மேல அவர் பெரிய நம்பிக்கை வச்சிருந்தார்" எனப் பேசினார்.



















