`முன்னுரிமை அடிப்படையில் குற்றங்களை கட்டுப்படுத்த..!'- புதிய டிஜிபி மகேஷ் குமார்...
மோசடி அழைப்புகளுக்கு செக்! வருகிறது கூகுளின் 'Fake Call Detection' - இது எப்படி வேலை செய்யும்?
யோசித்துப் பாருங்கள்... உங்கள் அம்மாவிடமிருந்து ஒரு போன் கால் வருகிறது. உங்கள் போன் திரையில் அவருடைய பெயர் தெரிகிறது. போனை எடுத்தால், மறுமுனையில் பேசுவது அச்சு அசலாக உங்கள் அம்மாவின் குரல். அவர் மிகவும் பதட்டத்துடன், அவசரமாகப் பணம் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அது உண்மையிலேயே உங்கள் அம்மாவாக இல்லையென்றால் என்ன செய்வீர்கள்?
இந்த பயமுறுத்தும் காட்சி சமீபகாலமாக மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குரல்களை அப்படியே நகலெடுத்து, நமக்கு நம்பிக்கையானவர்கள் போலப் பேசி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இந்த ஏமாற்று வேலைக்கு முடிவு கட்டும் விதமாக, ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ இழக்கும் முன், இந்த மோசடியைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

புதிய 'Fake Call Detection' அம்சம்!
ஏஐ மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்காக "ஃபேக் கால் டிடெக்ஷன்" (Fake Call Detection) என்ற புதிய பாதுகாப்பு கருவியை கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் போல் நடித்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைக் கண்டறிந்து எச்சரிப்பதே இதன் வேலை. இந்த அம்சம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்குப் பிந்தைய வெர்ஷன்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த மாதம் முதல் உலகளவில் வெளியிடப்படுகிறது. முதற்கட்டமாக, கூகுளின் பிக்சல் (Pixel) ஸ்மார்ட்போன்களில் 'Phone by Google' ஆப் மூலம் இது கிடைக்கும்.
சரி, இது எப்படி வேலை செய்கிறது?
இந்தத் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று கேட்டால், அதை 'டிஜிட்டல் கைக்குலுக்கல்' (digital handshake) என்று கூகுள் விவரிக்கிறது. அதாவது, உங்கள் கான்டாக்ட்டில் இருக்கும் ஒருவர் உண்மையாகவே அவருடைய போனிலிருந்துதான் அழைக்கிறாரா என்பதை இது சரிபார்க்கும். நம்பிக்கையான கான்டாக்ட்டில் இருந்து அழைப்பு வரும்போது, அவர்களுடைய டிவைஸ் ஒரு ரகசிய சரிபார்ப்பு சிக்னலை (silent verification signal) அனுப்பும்.
ஒருவேளை அந்த சிக்னல் வரவில்லை என்றால், ஆண்ட்ராய்டு சிஸ்டம் உடனடியாக உண்மையான டிவைஸுடன் சரிபார்த்து, "இந்த அழைப்பு போலியானதாக இருக்கலாம்" என்று திரையில் ஒரு எச்சரிக்கையைக் காட்டும்.
குற்றவாளிகள் தற்போது போன் நம்பர் ஸ்பூஃபிங் (அதாவது, உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து கால் வருவது போலச் செய்வது) மற்றும் ஏஐ வாய்ஸ் குளோனிங் (குரலை நகலெடுப்பது) ஆகிய இரண்டு சக்திவாய்ந்த தந்திரங்களை ஒன்றாகப் பயன்படுத்துவதால், இத்தகைய பாதுகாப்பு அம்சம் மிகவும் அவசியமாகிறது.
முன்பெல்லாம் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை நாம் தவிர்த்துவிடுவோம். ஆனால் இப்போது, நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது முதலாளியின் எண்ணில் இருந்தே அழைப்பு வருவது போலவும், அவர்களுடைய குரலிலேயே பேசவும் மோசடி கும்பலால் முடிகிறது. உலகளவில் ஆன்லைன் குற்றங்களில், இது போன்ற ஆள்மாறாட்ட மோசடிகள் மிக வேகமாக வளர்ந்து வருவதாக கூகுள் கவலை தெரிவித்துள்ளது.

பிரைவசி பற்றி கவலைப்பட வேண்டுமா?
நிச்சயமாக இல்லை. பயனர்களின் பிரைவசி குறித்த கவலைகளுக்கும் கூகுள் பதிலளித்துள்ளது. இந்த சரிபார்ப்பு செயல்முறை முழுவதும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (RCS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பின்னணியில் தானாகவே செயல்படும். இதனால், உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் எதுவும் கண்காணிக்கப்படாது. ஒருவேளை இந்த அம்சம் உங்களுக்கு வேண்டாம் என்று நினைத்தால், செட்டிங்ஸில் எளிதாக ஆஃப் செய்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சில கட்டுப்பாடுகளும் உண்டு
இந்த அம்சத்தில் சில வரம்புகளும் இருக்கின்றன. அழைப்பைச் செய்பவர் மற்றும் பெறுபவர் என இருவருமே 'Phone by Google' செயலியைப் பயன்படுத்த வேண்டும். மேலும், இருவரின் ஆண்ட்ராய்டு டிவைஸ்களும் இணக்கமானவையாகவும், RCS சேவை இயக்கப்பட்டும் இருக்க வேண்டும். இருப்பினும், இந்த தொழில்நுட்பம் ஒரு ஓப்பன் ஸ்டாண்டர்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மற்ற செயலிகளும், மொபைல் தயாரிப்பாளர்களும் இதைத் தங்கள் டிவைஸ்களில் கொண்டு வர வாய்ப்புள்ளது.
ஏஐ மூலம் உருவாக்கப்படும் மோசடிகள், நம்பகத்தன்மையுடன் மாறிவரும் சூழலில், ஒரு போலியான குரலைக் கண்டுபிடிப்பதை விட, உண்மையான குரலை நம்புவதே பெரிய சவாலாக மாறக்கூடும். அந்த இக்கட்டான சூழலில், ஒரு பரிச்சயமான குரல் நம்முடைய பணத்தை இழக்க வைக்கும் ஒரு பெரிய தப்பாக மாறுவதற்கு முன், கூகுளின் இந்த புதிய எச்சரிக்கை அமைப்பு ஒரு கூடுதல் பாதுகாப்புக் கவசமாக இருக்கும் என நம்பலாம்.


















