`பைலட் பணி நேரம் குறைப்பு' - அரசின் புதிய விதி; 800 இண்டிகோ விமானங்கள் ரத்து - ...
ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.
குறிப்பாக பாலமுருகன் மீது தென்காசி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

அவரது சொந்த ஊரான கடையம் காவல் நிலையத்தில் மட்டும் பாலமுருகன் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதிகளவு திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகன் திருடுவதில் எவ்வளவு கை தேர்ந்தவரோ, அதே அளவுக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்புப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். அதன்படி கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வழக்கில் கைதான பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில் தமிழகத்தின் அருப்புக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக தமிழ்நாடு போலீசார் திருச்சூர் சிறையில் இருந்து பாலமுருகனை இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளனர்.
மீண்டும் அவரை திருச்சூர் சிறைக்கு கொண்டு சென்ற போது சிறையில் வைத்து பாலமுருகன் தப்பிச் சென்றார். கடந்த இரண்டு வாரங்களாக அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில் சொந்த ஊரான கடையம் ராமநதி அணை அருகே உள்ள சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள பொத்தையின் மேல் பதுங்கியிருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
சிறப்புப் படையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்றிரவு பாலமுருகனை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டித் தீர்த்த போதிலும், சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளுடன் போலீசார் தொடர்ந்து மலைப்பகுதியில் ஏறி தேடினர்.
இந்நிலையில், பாறையின் செங்குத்தான பகுதியில் ஏறிய ஐந்து காவலர்கள் மீண்டும் இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். பொத்தையின் நடுப்பகுதியில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததால் மீட்புப் பணியில் சுணக்கம் நீடித்தது.
உடனடியாக ஆலங்குளம் மற்றும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு இன்று அதிகாலை முதல் கட்டமாக 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் மற்ற இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதனிடையே மலை பகுதியில் சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக பதுங்கியுள்ள ரவுடி பாலமுருகனை தப்பிக்க விடாமல் பிடிப்பதற்கு மலையை சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ட்ரோன் கேமரா மற்றும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகள் உதவியுடனும் ரவுடி பாலமுருகனை தேடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பிடியில் தப்புவதில் வல்லவரான பாலமுருகன் தொடர்ந்து டிமிக்கு கொடுத்து வருவதால் அவனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.



















