மதுரை: மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் பி.எம்.மன்னன் அதிமுக-வில் இணைந்தார்!
ரூ.60 கோடி சொத்து; வாரிசு இல்லாமல் விட்டுச்சென்ற பெண் டாக்டர் - உரிமை கோரி முட்டி மோதும் உறவுகள்
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் டாக்டர் ஹேமலதா(81). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த டாக்டர் ஹேமலதா இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் விட்டுச்சென்ற சொத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
டாக்டர் ஹேமலதா கடந்த சில நாட்களாகவே படுத்த படுக்கையாக இருந்தார். கடைசியாக ஹேமலதா, டாக்டர் தம்பதி சுமித் மற்றும் பிராச்சி முன்னிலையில் 81வது பிறந்தநாள் கொண்டாடினார். அதன் பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
அந்த பிறந்தநாளையொட்டித்தான் டாக்டர் ஹேமலதாவிடமிருந்து அவரது சொத்தை எழுதி வாங்க அவரிடம் டாக்டர் சுமித் கையெழுத்து வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஹேமலதாவிடம் அவரது சொத்தை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக்கொண்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் குற்றம் சாட்டி இருந்தது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஹேமலதாவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தபோது, அவர் தான் சுமித்திற்கு சொத்தை எழுதிக்கொடுக்கவில்லை என்றும், சுமித்திடம் இருக்கும் ஆவணங்கள் போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஹேமலதாவை மத அமைப்பு ஒன்று கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றதாகவும், இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அவருக்கு எதையோ தேவையில்லாத மருந்தை கொடுத்துவிட்டதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். சொத்து விவகாரத்தில் ஹேமலதா சுயநினைவோடு இருக்கும் போது தனது மாமனார் மற்றும் மகன் நினைவாக மருத்துவமனை கட்ட 11 ஆயிரம் சதுர அடி நிலத்தை எங்களுக்கு தானமாக எழுதிக்கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூ.60 கோடி நிலம்
டாக்டர் ஹேமலதா இறந்தவுடன் சொத்து பிரச்னை பெரிதாகும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இறுதிசடங்கை முன்னின்று நடத்தியது. ஹேமலதாவிற்கு ஜபல்பூரின் மத்திய பகுதியில் 11 ஆயிரம் சதுர அடி நிலம் இருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.60 கோடியாகும். டாக்டர் ஹேமலதா உயிரோடு இருந்தபோது அந்த சொத்தை யாருக்கும் எழுதிக்கொடுக்கவில்லை. அவர் அந்த சொத்தை காயத்ரி மந்திர் டிரஸ்டிற்கு கொடுக்க விரும்பியதாக அந்த டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இதற்கு ஹேமலதாவின் இளைய சகோதரி கனக லதா ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம் ஹேமலதாவின் உடலை அவரது மற்றொரு சகோதரியான சாந்தி மிஸ்ராவிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்து இருக்கிறது.
அவரும் சொத்துக்கு உரிமை கோரி இருக்கிறார். இந்த பிரச்னை குறித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராகேவேந்திர சிங் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட சொத்து மாநகராட்சியால் குத்தகைக்கு விடப்பட்டது ஆகும். எனவே அதனை யாரும் தானமாக எழுதிக்கொடுக்க முடியாது. ஹேமலதாவும் தானமாக கொடுக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இப்பிரச்னை மாவட்ட நீதிமன்றத்திடம் விடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அனைவரும் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கவேண்டும். அதன் அடிப்படையில் சொத்து யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கோர்ட் முடிவு எடுக்கும்''என்று தெரிவித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு ஹேமலதாவின் மகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹேமலதாவின் கணவரும் இறந்துவிட்டார். இரண்டு பேரும் இறந்ததால் அவரிடம் இருந்த சொத்து மீது அனைவரது கண்ணும் விழுந்தது. அவர்களது நிலத்தின் மதிப்பும் கடுமையாக அதிகரித்துவிட்டது. இப்போது அவரின் ரூ.60 கோடி மதிப்பு நிலம் மற்றும் அவர் வாழ்ந்த வீடு போன்றவற்றிற்கு இரண்டு சகோதரிகள், கோயில் டிரஸ்ட், டாக்டர் சுமித் உட்பட பலரும் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

















