Jana Nayagan: 'தங்கமே தளபதி!' - 'ஜனநாயகன்' படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ...
”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துகள் இருந்தன. இதன் இன்றைய அரசு மதிப்பு சுமார் ரூ.800 கோடி என்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்து விட்டார். பிறகு, இவரது மனைவி முகமதா பேகம்(76) வசம் சொத்துகள் இருந்தன. இவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர், தங்களின் சொத்துகளை பராமரித்து, பாதுகாத்து தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்தி மோசடியாக பழகியுள்ளார். இதை நம்பி அவரிடம் முகமதா பேகம் சொத்தை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

பிறகு, ஸ்ரீவித்யா சுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க-வின் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்ட தலைவர் கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், முகமதா பேகத்திடம், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, போலியான பவர் ஆஃப் அட்டார்னி, விற்பனை பத்திரங்கள், உள்ளிட்ட ஆவணங்கள் தயார் செய்து, முகமதா பேகத்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
மேலும், செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் இடத்தினை, செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்யதுள்ளார். அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில், சிராஜூதீனுக்கு சொந்தமான இடத்தினையும், அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்துள்ளனர். மேலும், மூன்று வங்கிகளில் முகமதா பேகம் பெயரில், கணக்கு துவங்கி பணம் பரிவர்த்தனை செய்துள்ளார். கடந்த மாதம் பால்பண்ணையில் உள்ள சிராஜூதீனின் பெரிய வீட்டை இடித்து அங்கிருந்த ஆவணங்கள், நான்கு டூ வீலர்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள், பணம், நகை உள்ளிட்டவையும் திருடி சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த முகமதா பேகம், செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் சொல்லவில்லை, மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக சொல்கிறார்கள். வயது மூப்பு காரணமாக இதில் பயந்த முகமதா பேகம் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த தைரியத்தின் பேரில், போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தாக செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோர் மீது, தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் ஒன்பது பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு வழக்கில், அதிமுக பிரமுகர் கேபிள் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















