விஜய் குறித்த மோசமான கேள்வி; "ஊடகச் சந்திப்புகள் நாகரிகமான முறையிலும் இருக்கணும்...
"விஜய் மீது எனக்கு பொறாமையா? அப்படித் தரம் கெட்ட ஆள் நான் கிடையாது" - ரஜினிகாந்த் பளீச் பேச்சு
ரஜினிகாந்த் தற்போது, 'ஜெயிலர் 2' படத்தை முடித்துவிட்டார். அடுத்தடுத்தாக அவர் ராஜ்கமல் நிறுவனத்தில் கமிட் செய்திருக்கும் படத்தில் நடிப்பதற்குத் தயராகிக் கொண்டிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ஆதரவு கிடைத்து முதல்வர் ஆகியிருக்கிறார் விஜய்.
விஜய்க்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவுக்கு திமுக ஆதரவளித்து ஆட்சியமைக்க முயன்றதாக தகவல்கள் இணையத்தில் பேசப்பட்டன.
இதற்கான பேச்சுவார்த்தைகளை நடிகர் ரஜினிகாந்த்தான் தொடங்கி வைத்தார் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில், அப்படியான தகவல்கள் உண்மை கிடையாது என இன்று காலை போயஸ் கார்டனிலுள்ள அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
''என்னைப் பற்றி சமூக வலைத்தளப் பக்கங்கள்ல சில விமர்சனங்கள் போயிட்டு இருக்கு. அதுக்கு நான் விடை கொடுக்கலைனா, அது உண்மை ஆகிடும். நான் பெங்களூரு போகும்போது, நீங்க கேள்வி கேட்பீங்க.
அதுக்கு விடை கொடுத்திடலாம்னு இருந்தேன். 18-ம் தேதி விடை கொடுத்திடலாம்னு இருந்தேன். ஆனால், அதை தள்ளிப்போடக்கூடாதுனு இன்னைக்கு பேசுறேன். தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் ஸ்டாலின் சாரை போய் பார்த்தேன். அது விமர்சனத்திற்கு உள்ளானது.
ஸ்டாலின் சார் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர். ஜனநாயகத்துல தோல்வி, வெற்றி சகஜம். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில தோல்வியைச் சந்திதது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால நான் நட்பின் அடிப்படையில் அவரைப் போய் சந்திச்சேன்.
விஜய் முதலமைச்சர் ஆகக்கூடாது. அதைத் தடுப்பதற்காக ரஜினி அங்கே போயிருக்கார், அதனால ரெண்டு பெரிய கட்சிகளைச் சேர்க்க முயற்சி செய்தார்னு தகவல்கள் பேசப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் நான் அப்படி பேச முடியுமா. அப்படி பேசக்கூடிய தரம்கெட்ட ஆள் ரஜினிகாந்த் கிடையாது.
அதனை தெளிவுப்படுத்திக்கிறேன். நான் விஜய்க்கு செய்தியாளர்கள் முன்னிலையில வாழ்த்துச் சொல்லலனு சொன்னாங்க. அவர் ஜெயிச்சதும் எக்ஸ் பக்கத்தின் மூலமாக அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னேன். 2016-ல நான் அரசியலுக்கு வர்றேன்னு சொன்னப் பிறகு, நான் ஏர்போர்ட்டிற்கு வரும்போது மீடியா ஆட்கள் அங்கிருப்பார்களா என விசாரிப்பேன்.
அதுபோல, பெங்களூருவுக்குச் செல்லும்போது மீடியா ஆட்கள் இல்லைனு சொன்னாங்க. ஆனா, போகும்போது ஒருவர் போன் வச்சுகிட்டு கேள்வி கேட்டார். அவர் மீடியா நபர் மாதிரி தெரியலைனு நானும் அவருக்குப் பதில் சொல்லல.
அதுக்கு நான் வாழ்த்துகள் சொல்லலைனு விமர்சனம் செய்றாங்க. விஜய் மீது எனக்கு பொறாமைனு சொல்றாங்க. நான் அரசியல்ல இல்லை. அதுல நான் இல்லைனு நான் விலகிட்டேன். பிறகு ஏன் எனக்கு பொறாமை வரப் போகிறது.
ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால், எனக்கு பொறாமை வந்திருக்குமோ தெரியாது (சிரித்துக் கொண்டே...) எனக்கும் விஜய்க்கும் ஒரு ஜெனரேஷன் இடைவேளை இருக்கு. விஜய்கூட என்னை கம்பேர் பண்ணி பேசினால் எனக்கு நல்லது இல்லை. அதே மாதிரி அவர் கம்பேர் பண்ணினால், அவருக்கும் நல்லது இல்ல. சின்ன வயசுல இருந்து அவரைப் பார்த்துட்டு இருக்கேன்.
அவர் முதலமைச்சர் ஆனதுல எனக்கு என்ன பொறாமை? எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்த சாதனையை விஜய் செய்திருக்கார். இங்க இருக்கிற ரெண்டு பெரிய கட்சிகளை ஜெயிச்சிருக்கார். எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான் அதுல.

அவர் மீது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. நான் ஏன் அரசியலுக்கு வரலைனு முழுமையாக நான் அறிக்கை விட்டிருக்கேன். என் ரசிகர்களுக்கு அந்த ஆதங்கம் இருக்கதான் செய்யும். அரசியல் என்பது பெரிய பொறுப்பு. அவ்வளவு சுலபமானது கிடையாது அது" என்றவர், "விஜய்யை ரெண்டு வருஷத்துக்கு நம்ம விட்டுவிட வேண்டும். அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.
அதே சமயம், அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும். அவங்க என்ன தப்பு பண்ணினாலும், அது விஜய்யைத்தான் நேரடியாகப் பாதிக்கும்னு நினைக்கணும் அவங்க.
விஜய்க்கு 100 சதவீதம் சினிமா புகழ் உதவியிருக்கு. இளைஞர்கள், பெண்கள், சோசியல் மீடியாவுக்கும் ஒரு காரணம். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் நான் வெற்றி பெற்றிருப்பேன். அதுல சந்தேகமே இல்ல." என்றார்.


















