"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்: பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் தலம்!
நரசிம்மர் தலங்கள் அனைத்துமே விசேஷமானவை. நரசிம்ம அவதாரத்துக்குப் பின் முனிவர்கள் அந்த அவதாரக் கோலத்தைத் தாங்கள் தரிசிக்கவில்லையே என்று வருந்தினர். அவர்களுக்காக பகவான் பல்வேறு தலங்களில் நரசிம்ம அவதாரமாகக் காட்சி கொடுத்தார். அப்படி அவர் அருளிய தலங்களில் ஒன்று பூவரசன் குப்பம்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். புராணக் காலத்தில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள அகோபிலத்தில், இரண்யனை வதம் செய்த நரசிம்மர், தமிழகத்தில், 'தென் அகோபிலம்' என அழைக்கப்படும் பூவரசங்குப்பம் உள்ளிட்ட 8 தலங்களில் ரிஷிகளுக்கும், முனிகளுக்கும் காட்சி தந்தருளினார்.
அதிலும் மிக விசேஷமாக, சப்த ரிஷிகளுக்குத் தாயாருடன் சாந்த ரூபமாகக் காட்சி கொடுத்த தலமாகப் பூவரசங்குப்பம் திகழ்கிறது.
கோபக்கனலில் இருந்த நரசிம்மரைத் தரிசிக்க முடியாமல் சப்த ரிஷிகள் வருந்திய சமயத்தில், நரசிம்மரின் உக்கிரத்தினைக் குறைக்கும் பொருட்டு, அமிர்தவல்லி தாயார் நரசிம்மரின் மடியில் அமர்ந்தபடி, ஒரு கண்ணால் நரசிம்மரையும், மறுகண்ணால் ரிஷிகளையும் பார்ப்பது போலக் காட்சியளித்தார்.
அதே கோலத்தில், இத்தலத்திலும் இறைவன் தாயாருடன் வீற்றிருந்து சாந்த ரூபமாக பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகின்றார். கி.பி.7-ம் நூற்றாண்டில், பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய இந்தக் கோயில்.
அதற்கு முன்பு இத்தலத்தில் நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியவர் என்பதால் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்து இந்த ஆலயத்தை எழுப்பினர்.

இங்கு தாயாருடன் நரசிம்மப் பெருமாள் அருள்பாலிக்கும் அழகோ அழகு. நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார்.
பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது.
இந்த ஆலிங்க பாவனை தரிசித்த மாத்திரத்திலேயே நமக்கு அருள்பாலிப்பது. எனவே இத்தலத்துக்கு வந்துபோனாலே பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்று சேர்வர். சண்டை சச்சரவுகள் நீங்கி இல்லறம் நல்லறமாகும்.
மேலும் நரசிம்மப் பெருமானிடம் நாளை என்பதே இல்லை. கேட்ட வரங்களைக் கேட்டவுடன் அருள்வார் என்பார்கள். அப்படிப்பட்ட நரசிம்ம மூர்த்தியை சனிக்கிழமை, சுவாதி நட்சத்திர நாளில் சென்று தரிசனம் செய்வது சிறப்பு.
இங்குள்ள தாயார் 'அமிர்ந்தவல்லி' என்னும் தன் திருநாமத்துக்கு அமிர்தத்திற்கு இணையான பலனைக் கொடுக்க வல்லவள். அதனால்தான் 'அமிர்தபலவல்லி' என அழைக்கப்பட்டு பின் அமிர்தவல்லி என்று அழைக்கப்பட்டாள் என்கிறார்கள்.

தாயாரை வேண்டிக்கொண்டால் திருமணயோகம் தேடிவரும். குழந்தைபாக்கியம் வேண்டுவோர் தாயாரின் திருமஞ்சனத்துக்கு மஞ்சள் வாங்கி சமர்ப்பித்தால் விரைவில் பிள்ளைவரம் கிடைக்கும். மேலும் இங்குள்ள நரசிம்மரை வேண்டிக்கொள்ள நம் கஷ்டங்கள் நொடிப்பொழுதில் அகலும் என்கிறார்கள்.
இங்குள்ள ஆண்டாள் சந்நிதியும் விசேஷமானது. இங்குள்ள அன்னை ஆண்டாளைத் தொழுதுகொண்டால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மேலும் நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.
இப்படிப்பட்ட அற்புதமான தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை நலமாகும்; வளமாகும்.





















