அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த...
வேலூர்: கடந்த ஓராண்டில் 184 குட்கா வழக்குகள் - 220 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வேலூர் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது மாவட்டக் காவல்துறை. அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 12-ம் தேதியான நேற்று முன்தினம் வரை சட்டவிரோதமாக `குட்கா’ விற்பனைச் செய்யப்பட்டது தொடர்பாக மட்டுமே மாவட்டத்தில் 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 4,654 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த 8,67,857 ரூபாய்க்கான பரிவர்த்தனையும் முடக்கப்பட்டிருக்கிறது.

மேலும், குட்கா விற்பனை தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, 12 கார்கள் மற்றும் 30 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர் நடவடிக்கையாக, நேற்றைய தினமும் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதிலும், 3 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். `இதுபோன்ற போதைப்பொருள் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.


















