Olympics 2028: "ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என்னுடைய ஆசை; ஆனால்" - மனம் திறக்க...
வேலூர்: CMC மருத்துவர் அறையில் அமெரிக்க போதைப்பொருள்; அமலாக்கத்துறை விசாரணையில் வெளியான தகவல் என்ன?
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவராக கேரளாவைச் சேர்ந்த பெல்கிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள சி.எம்.சி ஆண் மருத்துவர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி, மருத்துவர் பெல்கிங் தங்கியிருந்த அறையில் அமலாக்கத்துறையினர் அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அப்போது, 5 வகையான வெளிநாட்டு போதைப்பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்த அமலாக்கத்துறையினர், இதுபற்றி வேலூர் வடக்கு காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள மருத்துவர் பெல்கிங்கைத் தேடி வருகின்றனர்.

இது குறித்து, போலீஸார் கூறுகையில், ``அண்மையில் கோவா மாநிலத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
அவரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தபோது, வேலூர் சி.எம்.சி மருத்துவர் பெல்கிங் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.2 லட்சம் வரவு வந்துள்ளது. அதைத்தொடர்ந்தே, மருத்துவர் பெல்கிங் பற்றிய விசாரணையை அமலாக்கத்துறையினர் தொடங்கினர்.
பெல்கிங் அறையில் இருந்தவை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 5 விதமான போதைப்பொருள்கள் எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், கஞ்சா, போதை மாத்திரை பவுடர், போதை காளான் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டு போதைப்பொருள்கள் என்பதால், அவற்றின் மதிப்பு உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. மருத்துவர் பெல்கிங் கைது செய்யப்பட்டால்தான் மற்ற விவரங்கள் தெரியவரும்’’ என்றனர்.

















