செய்திகள் :

ஸ்டாலின் Vs விஜய்... பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம் | ‘வாவ்’ வியூகம் 10

post image

வாக்காளர்கள் எதிர்பார்த்த ஜனநாயகத் திருவிழா தேதி அறிவிக்கப்படாகிவிட்டது. ஏப்.23-ல் தமிழகம் தேர்தலை சந்தித்துவிடும். தேர்தலும் பெண் வாக்காளர்களின் பலமும் தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பிரித்துப் பார்க்க முடியாததுதானே!

அதுவும் தமிழகம் இந்த சட்டப்பேரவைத் தேர்தலை 4 முனைப் போட்டியாக எதிர்கொள்ளவிருக்கும் சூழலில் மற்றவர்களை பின் தள்ளிவிட்டு ஊடக, வெகுஜனப் பார்வையில் ஸ்டாலினும், விஜய்யும் தனித்து நிற்கின்றனர். இதற்கு புதிதாக கட்சி ஆரம்பித்தாலும், நாள் ஒன்று முதலே, இது எனக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர் என்று விஜய் சாதுர்யமாகப் பேசி தன்னை திமுக ஆட்சியை அகற்ற வந்தவர் என்று நிறுவ மேற்கொள்ளும் முயற்சிகள்!

களம் இப்படியாக இருக்க, இந்தத் தேர்தலில் பெண் சக்தி யார் பக்கம் என்று அலசினால், பல்வேறு கோணங்கள் நம் முன் விரிகின்றன.

விஜய், ஸ்டாலின்

இதை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் மறைவிலிருந்துதான்.

ஜெயலலிதா தனது கடைசி ஆட்சிக் காலத்தை முழுமையாக முடிக்காமல் உயிரிழந்த நிலையில், அதிமுக உட்கட்சிப் பூசல்களால் சலசலத்துக் கொண்டிருக்க, அடுத்து ஆட்சியைப் பிடித்தார் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வரும் முன்னரே வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி ‘மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000. அது, 2021 தேர்தலில் வெகு சிறப்பாகவே ஒர்க் அவுட் ஆனது எனலாம்.

சாணக்கிய நகர்வு

தேர்தல் வாக்குறுதிகளில் அது புதுமாதிரி, முன்மாதிரி. அதன்பின்னர் கர்நாடகா க்ருஹலக்‌ஷமி திட்டம் எனக் கொண்டுவர, கடைசியாக பிஹார் தேர்தலில் மகளிர்க்கு ரூ.10,000 வழங்கப்பட்டது வரை பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

திமுக வாக்குறுதியாக சொன்னது மகளிர்க்கு ரூ.1000, ஆனால், இப்போது, தகுதியுள்ள குடும்பத் தலைவியருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதன் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் இன்றளவும் தொடரும் நிலையில், திமுக ஆட்சி தொடர்ந்தால் அது ரூ.2,000 ஆக அதிகரிக்கப்படும் என்பதோடு, சமீபத்தில் சிறப்பு நிதி ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. பெண் வாக்காளர்களை மையப்படுத்திய தேர்தல் வியூகங்களில் இது ஆர்ப்பாட்டம் இல்லாத சாணக்கிய நகர்வு என்று சொல்லலாம்.

அதன் பின்னர், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்ய ‘புதுமைப்பெண்’ திட்டம் ஆகியனவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய ஸ்டாலின் ‘விடியல் பயணம்’ திட்டத்தைக் கொண்டு வந்தார்.

மகளிருக்கு ரூ.5000
மகளிருக்கு ரூ.5000

நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது ஸ்டாலின் ஆட்சியில்தான்.

திமுக அரசு 9 மாத பேறுகால விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்கியுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஓராண்டுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் உள்ளன. அதில், மேயர் பதவிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்டு, 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கி, கல்வி பயிலும், வேலை செய்யும் பெண்களுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய தோழி விடுதிகள் உள்பட இன்னும் பல திட்டங்கள் ஸ்டாலின் ஆட்சியோடு சேர்த்துப் பட்டியலிடலாம்.

மகளிர் உரிமைத் தொகை தொடங்கி ‘சிறப்பு நிதி’ வரை, தமிழகத்தில் பெண் வாக்காளர்களை மையப்படுத்தி ஸ்டாலின் சக்சஸ்ஃபுல்லாக அரங்கேற்றிய ஃபார்முலாவின் தாக்கம் பிஹார் வரை எதிரொலித்திருப்பது கவனிக்கத்தக்கது.

விஜய் வியூகங்கள்

பெண்களைக் கவர வேண்டுமானால் பரிசுப் பொருட்கள் கொடுத்தால் போதும். அல்லது, குடும்பத் தலைவரின் அரசியல் சார்பு தான் வீட்டில் உள்ள பெண்களில் அரசியல் விருப்பமாகவும் இருக்கும் என்பதே தேர்தல் அரசியல் களத்தில் நிலவும் மேலோட்டப் புரிதலாக இருந்தது. இது ஒரு காலக்கட்டம் வரை சரியாகவே இருந்திருந்தாலும் கூட காலப்போக்கில் அந்த ட்ரெண்ட் வழக்கொழிந்து வருகிறது என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.

உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜய், சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தேர்தல் அரசியலில் தீவிரம் காட்ட, அவர் இதுவரை வசப்படுத்தி வந்த பெண் ரசிகர்கர்களின் கூட்டமும் தவெக கூட்டங்களில் கவனம் ஈர்க்கத் தொடங்கின.

எங்கும், எப்போதும் எளிதில் பார்த்துவிட முடியாத விஜய் எல்லா ஊர்களுக்கும் வருகிறார். தனக்கு பிரியமான ஸ்டாரைக் காணும் இன்பம் அலாதி என அவரது ரசிகர்கள் குவிவதைக் காண முடிகிறது. அதுவும் குறிப்பாக ஜென்ஸீ தலைமுறையினர் அதிகமாகவே ஈர்க்கப்பட்டுள்ளனர்.

தங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களிலேயே வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் என்று பெண்களுக்கு இடமளித்துள்ள விஜய் எல்லா மேடைகளிலும் பெண்களை தாய்க்குலம், அக்கா, தங்கை என்றும் எம்ஜிஆர் ஸ்டைலில் விளித்து ஈர்த்து வைத்துள்ளார். அவரைப் போலவே ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’, ‘ஊழலுக்கு மாற்று’ என்று பேசுகிறார்.

விஜய்

மிக முக்கியமாக எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாத அவர்களுடைய ஃபன் லேங்குவேஜில், கேர் ஃப்ரீ பாடி லேங்குவேஜுடன் பேசுகிறார். விஜய் மீது பெண் வாக்காளர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்க இரண்டே காரணங்கள்தான். ஒன்று அவர் திரையில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு, இன்னொன்று எப்போதும் திமுக, அதிமுக என்று பழக்கப்பட்ட வாக்காளர்களுக்கு புதியதொரு ‘நான் தான் மாற்று’ என்று அவரே நம்பவைக்கும் விதம்.

விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடித் தீர்த்த பெண்களை 5-ம் வகுப்பு சிறுமி முதல் 40-களின் ஆரம்பத்தில் இருக்கும் பெண்கள் வரை பிரிக்க முடியும். இவர்கள் அனைவரும் விஜய்க்காக ஒருமித்த குரலில் ஒலித்துக் கொண்டிருந்தனர். ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு விவகாரம் தாக்கம் தருமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரிய வரக்கூடும்.

அதேவேளையில், பெண்களுக்காக விஜய் வெளியிட்ட வாக்குறுதிப் பட்டியலும் கவனிக்கத்தக்கது. 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும், ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். அண்ணன் சீர் திட்டம் மூலம் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலையும் அளிக்கப்படும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அரசுப் போக்குவரத்து கழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் உள்ளிட்ட வாக்குறுதிகள் எல்லாம் பெண் வாக்காளர்களை ஈர்க்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

(வாவ் வியூகம் தொடரும்)

இரு முறை அமைச்சர்; ஒரு முறை தோல்வி - ஜோலார்பேட்டையில் மீண்டும் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் வலம் வரும் கே... மேலும் பார்க்க

தவெக: 234 வேட்பாளர்களையும் இறுதி செய்த விஜய்; நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று இறுதி செய்யவிருக்கிறார். இதைத் தொடர்ந்து தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நாளை நடத்தவிருக்கின்றனர்.TVK Vijay | விஜ... மேலும் பார்க்க

அப்செட், கடுப்பு, அதிர்ஷ்டம்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு லாபம்? நஷ்டம் யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைத்த விஷயத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளில் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என நேற்று பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி விவகாரத்தைய... மேலும் பார்க்க

`தாலிக்கு தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அறுக்கிறார்கள்' - சீமான் ஆவேசம்

`தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், இதில் என்ன பெருமை உள்ளது?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை" - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தீயாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனமும், ஆளும் கட்சியின் பதிலும் எனச் சூடுபறக்கும் தமிழ்நாட்டு அரசியலில, திமுக கூட்டணிக் கட்சிகள் அவமானப்பட... மேலும் பார்க்க

அமைச்சர் சக்கரபாணியின் அண்டர் கிரவுண்ட் டீலிங்; தொகுதியை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கு மெகா பிளான்!

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருப்பவர் சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கண்டோரேலில... மேலும் பார்க்க