``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜ...
'150 ரூபாய் டிக்கெட்டை 25000 ரூபாய்க்கு வாங்கிருந்தாங்க' - கிரிக்கானந்தாவின் உலகக்கோப்பை அனுபவம்
முதல் முறையாக ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி. எல்லா பக்கமிருந்தும் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு ஆச்சர்யப்பட வைக்கிறது.

இறுதிப்போட்டி நடந்த டி.ஒய்.பாட்டீல் மைதானம் முழுமையாக ஹவுஸ்புல் ஆகி வெளியே 'Sold Out' போர்டெல்லாம் போடப்பட்டிருந்தது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேச வந்தார். தொகுப்பாளர் அவரிடம் கேள்வி கேட்க, தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஹர்மனின் காதுகளில் விழவே இல்லை. அந்தளவுக்கு ரசிகர்களின் ஆராவராம் இருந்தது. இந்த மாதிரியான விஷயமெல்லாம் தோனிக்கு நடந்து பார்த்திருக்கிறோம். அதே அளவுக்கான வரவேற்பும் ஆர்ப்பரிப்பும் பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் கிடைப்பதை பார்க்கையில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது
அந்த இறுதிப்போட்டியை ரசிகர்களின் ஆராவாரத்தோடு நேரில் கண்டுகளித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர் கிரிக்கானந்தாவை தொடர்புகொண்டு அவரின் அனுபவம் குறித்து கேட்டோம்.

'ரெண்டு நாளாச்சு. ஆனா, இன்னமுமே ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கு ப்ரோ...' என மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். 'செமி பைனல் மேட்ச்சுக்கெல்லாம் முன்னாடியை பைனல் மேட்ச்சுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். நான் டிக்கெட் புக் பண்றப்போ டிக்கெட் ரேட் 150 ரூபாய்தான். ஆனா, இந்தியா பைனல்ஸூக்கு போன பிறகு டிக்கெட் ரேட்லாம் அதிகமாகியிருக்கு. நிறைய பேர் ப்ளாக்ல டிக்கெட் வித்துருக்காங்க. நிறைய பேர் 10000 ரூபாய் கொடுத்துலாம் டிக்கெட் வாங்கிருக்காங்க.
சிலர் அதுவும் கிடைக்காம 25000 ரூபாய் வரை கொடுத்துருக்காங்க. இதுல என்ன ஆச்சர்யம்னா உள்ள Seating Capacity யை விட அதிக ரசிகர்கள் இருந்தாங்க. நம்ம ஊர்லலாம் பெரிய ஹீரோஸ் படத்துக்கு கணக்குல அடங்காம டிக்கெட் கொடுத்து உள்ள திணிப்பாங்கள்ல அந்த மாதிரி கூட்டத்தை க்ரவுண்டுக்குள்ள பார்த்தேன். எத்தனையோ வுமன்ஸ் மேட்ச் நேர்ல பார்த்திருக்கேன். அங்கெல்லாம் இவ்ளோ கூட்டம் இருந்ததே இல்லை. கூட்டத்தைத் தாண்டி அந்தக் கூட்டம் மொத்தமும் கேம் மேல அவ்வளவு ஈடுபாட்டோட இருந்தாங்க. மழை பெஞ்சும் எங்கயும் நகராம மழை நிக்கிறதுக்காக பாட்டு பாடுனாங்க.

ஆண்களுக்கான கிரிக்கெட்ல தோனி பேன்ஸ் கோலி பேன்ஸூன்னு பிரிஞ்சு நிப்பாங்க. ஆனா, இங்க கிரவுண்ட்ல நின்ன 11 பேரையும் அந்தந்த மொமண்ட்ஸல அவங்க பேர கத்தி ஆர்ப்பரிச்சு கொண்டாடுனாங்க. இந்தக் கூட்டமும் ஆர்ப்பரிப்புமே இந்த டீமுக்கு பெரிய அளவுல ஜெயிக்க உதவியிருக்கும். ஏன்னா இதுக்கு முன்னாடி 2020 ல மெல்பர்ன்ல நடந்த டி20 வேர்ல்ட் கப் பைனல்ல ஆஸ்திரேலியா கூட இந்த இந்தியன் டீம் தோத்திருப்பாங்க.
அப்போ மெல்பர்ன்ல 85,000 ரசிகர்கள் இருந்தாங்க. அந்தக் கூட்டமே இந்தியன் ப்ளேயர்ஸை மிரட்சியடைய வச்சுச்சு. பெரிய கூட்டம் கூடுனா இந்தியன் டீமுக்கு பிரஷர் ஆகிடும்னு பேசுனாங்க. ஆனா, அதுக்கு பிறகு இந்தியாவுல WPL தொடங்குனாங்க. எல்லா மேட்ச்சுக்கும் நல்ல கூட்டம் கூட ஆரம்பிச்சுது. அது இந்தியன் ப்ளேயர்ஸூக்கு நல்ல ப்ராக்டீஸா இருந்துச்சு. இப்போ இந்தியன் ப்ளேயர்ஸ் கூட்டத்தை அனுபவிச்சு ஆட பழகிட்டாங்க.

இந்த ரசிகர்கள் கொடுக்குற அன்பு அவங்களுக்கு பெரிய உத்வேகத்தை கொடுக்குது. செமி பைனல்லயும் சரி, பைனல்லயும் சரி இந்திய அணி நிறைய தவறுகள் பண்ணாங்க. ஆனாலும் அதுல இருந்து மீண்டு வந்து ஜெயிச்சாங்க. அதுக்கு இந்த கூட்டமும் அவங்களோட ஆர்ப்பரிப்பும்தான் காரணம். மேட்ச் முடியுறதுக்கு நடுராத்திரிக்கு மணிக்கு மேல ஆகிருச்சு. டி.ஒய்.பாட்டீல் க்ரவுண்ட் அவுட்டர்ல இருக்கு. இங்க இருந்து அந்த நேரத்துல ட்ரெயினும் கிடைக்காது. ஆனாலும் பெரும்பாலான கூட்டம் ஹர்மன்ப்ரீத் பேசி முடிச்சு கப் வாங்குற வரைக்கும் நின்னு பார்த்துட்டு போனாங்க. ரிட்டர்ன் போறதுக்கு வண்டி எதுவும் கிடைக்காம வீட்டுக்கு நிறைய பேர் நடந்தே போனதையெல்லாம் பார்த்தேன். இந்த அளவுக்கு வுமன்ஸ் கிரிக்கெட்டுக்கு அன்பு கிடைக்குங்றத எதிர்பார்க்கல.' என்றார்.
இந்த வெற்றி இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் என்ன மாற்றத்தை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? என்றேன். அதற்கு, 'இதற்கு முந்தைய உலகக்கோப்பைகளில் இந்தியா தோற்கும் போது மைதானத்திலேயே, 'இவளுகெல்லாம் எதுக்கு கிரிக்கெட் ஆட வராளுகன்னு...' கொச்சையா பேசுன ரசிகர்களை பார்த்திருக்கேன்.

இந்த டீம் பெரிய வெற்றியை பெறாம இருந்துச்சு. இப்போ பெருசா ஒரு கோப்பையை ஜெயிச்சிருக்காங்க. ரசிகர்களும் அதை மனசார பாராட்டுறாங்க. இது நிறைய பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். நிறைய பேர் கிரிக்கெட்டை நோக்கி, விளையாட்டை நோக்கி வருவாங்க. இந்த வெற்றி ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையா பெண்கள் கிரிக்கெட்டையும் மாத்தும்ணு நம்புறேன்.' என்றார்.




















