'பாதமே நலமா? Season 3': சர்க்கரை நோயாளிகள் தினமும் பாதங்களைப் பரிசோதிக்க வேண்டிய...
AI: `மனித உயிர்களை கொன்றுவிடும்; தெரிந்தே.!' - அந்த்ரோபிக்கில் இருந்து வெளியேறியவர் சொன்ன `ஷாக்'
சிலிக்கான் வேலியில் தினமும் ஏதாவது ஒரு பரபரப்பான செய்தி வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு ராஜினாமா, டெக் உலகை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தையுமே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
யார் அவர்? என்ன நடந்தது?
ஜேக்கப் காக்சன், வெறும் 27 வயதான ஒரு ஏஐ (AI) ஆராய்ச்சியாளர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) போன்ற உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களில் பணியாற்றியவர். சமீபத்தில், தனது ஆந்த்ரோபிக் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், இது 'வேறு நல்ல வாய்ப்புக்காக செல்கிறேன்' என லிங்க்ட்இன்னில் (LinkedIn) போடும் சாதாரண ராஜினாமா இல்லை. தனது எக்ஸ் (X) பக்கத்தில் அவர் கொளுத்திப் போட்டிருக்கும் நெருப்பு, ஏஐ உலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

“நான் இன்று ஆந்த்ரோபிக்கில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளேன். இந்த இரண்டு நிறுவனங்களுமே பொறுப்புடன் செயல்படவில்லை. அவை சுய-முன்னேற்றம் அடையும் சூப்பர் இன்டெலிஜென்ஸை (self-improving superintelligence) நோக்கி கண்மூடித்தனமாகப் பாய்ந்து, நம்முடைய உயிர்களுடன் சூதாடுகின்றன,” என்று ஆரம்பித்தது அவரின் பதிவு.
பத்தாண்டுகளில் மனித இனத்திற்கு அழிவா?
அவர் அடுத்து சொன்ன விஷயம் தான் எல்லோரையும் உறைய வைத்திருக்கிறது. “ஏஐ-யை உருவாக்கும் நபர்களே, இன்னும் பத்தாண்டுகளில் இது நம் எல்லோரையும் கொன்றுவிடும் என்று உண்மையாக நம்புகிறார்கள். இதுவொன்றும் மார்க்கெட்டிங் ஸ்டன்ட் அல்ல. பல உயர் அதிகாரிகளும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசுவார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் பேசும்போது அவர்களும் இதே பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். மனிதர்களின் வேறு எந்தச் செயலும் இந்த அளவுக்குப் பேராபத்தை ஏற்படுத்தாது,” என்கிறார் ஜேக்கப். இது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது அல்லவா?
இந்தத் தொழில்நுட்பத்தின் சக்தியை சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள் என்கிறார் அவர். "இவை விரைவில் மனிதனை மிஞ்சிய சூப்பர்ஹியூமன் சிஸ்டங்களாக மாறும். எதையும் ஹேக் செய்ய முடியும், எந்தத் துறையையும் ஒரே இரவில் புரட்டிப் போட முடியும், உண்மையான அதிகாரத்தையும் வளங்களையும் கைப்பற்ற முடியும். இந்தத் துறைகளில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியை நாம் எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதன் வேகம் குறையவே இல்லை," என எச்சரிக்கிறார் ஜேக்கப்.

தெரிந்தே ஏன் இந்த ஆபத்தான பந்தயம்?
சரி, இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் இதை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு ஜேக்கப் அளிக்கும் பதில், ஏஐ பந்தயத்தின் மையத்தையே தாக்குகிறது.
“ஓபன்ஏஐ நிறுவனத்தில் உள்ள பலருக்கு, இந்த விஷயம் மனித நாகரிகத்திற்கே எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது இன்னும் முழுமையாக உறைக்கவில்லை. ஆனால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இந்த ஆபத்து நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த ரேஸில் முதலில் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வேறு யாரும் பொறுப்பாகச் செயல்பட மாட்டார்கள் என்பதால், தாங்களே இதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இதில் உள்ள ரிஸ்க்கை உணர்ந்தும் இதைச் செய்கிறார்கள்,” என்கிறார் அவர்.
இது ஒரு அகங்காரமான சூதாட்டம் என்றும், ஒரு தனியார் நிறுவனத்தின் ஸ்லாக் (Slack) உரையாடலில் இருந்து தொடங்கப்படக் கூடாத ஒன்று என்றும் அவர் கடுமையாக விமர்சிக்கிறார்.
உள்ளே இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஜேக்கப் வெறும் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லவில்லை. சிலிக்கான் வேலியின் ஏஐ லேப்களில் இன்னும் வேலை செய்துகொண்டிருக்கும் மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சவாலை விடுத்துள்ளார். “நீங்கள் ஒரு லேப் ஆராய்ச்சியாளராக இருந்தால், அடுத்த சில ஆண்டுகள் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு சூப்பர் இன்டெலிஜென்ட் சிஸ்டத்தின் மனதைப் பற்றி முழுமையாகப் புரியாமல், அதை இயக்க நீங்கள் தயாரா? ‘இது எப்படியும் நடக்கத்தான் போகிறது’ என்று நினைத்து உங்கள் வேலையை மட்டும் பார்க்கப் போகிறீர்களா? அல்லது, இதுதான் சரியான தருணம் என்று நினைத்து வேறு பாதுகாப்பான பாதைகளைக் கோரப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “ஒரு உலகளாவிய பந்தயத்தைத் தடுக்கும் பாதையில் நாம் இருக்கிறோம் என்று எனக்குத் தோன்றவில்லை. மாடல்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு தற்காலிகத் தடை விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படலாம்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிர்ச்சி பதில்!
ஜேக்கப்பின் பதிவுகளுக்குப் பதிலளித்த ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அலைன்மென்ட் சயின்ஸ் தலைவர் இவான் ஹபிங்கர், “ஜேக்கப் சொல்வது சரிதான். ஏஐ அனைத்து மனிதர்களையும் கொன்றுவிடும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்! அடுத்த பத்தாண்டுகளில் இதற்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். ஆந்த்ரோபிக் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது. ஆனால், சூப்பர் இன்டெலிஜென்ஸுக்கான தீர்வை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை,” என்று கூறியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளிருக்கும் ஒரு முக்கிய அதிகாரியே இதை ஒப்புக்கொள்வது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

எலான் மஸ்க்கின் யூ-டர்ன்
இந்தச் சூழலில், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் நீண்டகால விமர்சகரான எலான் மஸ்க், சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். ஒரு காலத்தில் ஆந்த்ரோபிக்கின் கிளாட் (Claude) மாடலை ‘மனித வெறுப்பு’ கொண்டது, ‘தீயது’ என்றெல்லாம் விமர்சித்த மஸ்க், ஜூலை மாதம், “ஆந்த்ரோபிக் பற்றி நான் தவறாக நினைத்துவிட்டேன். அவர்கள் தற்போது ஏஐ துறையில் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று பதிவிட்டிருந்தார். இந்த திடீர் மாற்றம், ஏஐ பந்தயம் எவ்வளவு சிக்கலானது என்பதைக் காட்டுகிறது.
ஜேக்கப்பின் ராஜினாமா மட்டுமே இந்த ஏஐ பந்தயத்தை நிறுத்திவிடாது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அதன் ஆபத்துகள் எல்லோரையும் விட நன்றாகத் தெரியும், தெரிந்தும் அவர்கள் அதை உருவாக்குகிறார்கள் என்ற எச்சரிக்கை மணி சத்தமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உள்ளிருந்து வந்திருக்கும் இந்தக் குரலுக்கு டெக் உலகம் செவிசாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



















