AI: `மனித உயிர்களை கொன்றுவிடும்; தெரிந்தே.!' - அந்த்ரோபிக்கில் இருந்து வெளியேறிய...
Orangutans: ஒடிசாவில் கைவிடப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்; கடத்தல் கும்பல்களின் கொடூரப் பின்னணி
இரக்கமற்ற கடத்தல் சம்பவங்களில் ஒடிசாவைச் சேர்ந்த வனவிலங்கு கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. யானை தந்தங்கள், எறும்பு தின்னிகளின் செதில்கள் புலி, சிறுத்தை தோல்கள், அரிய வகை ஆமைகள் மற்றும் ஒடிசாவின் அரிய வனவிலங்குகளை கடல் மார்க்கமாக வங்கதேசம் மற்றும் மியான்மர் வழியாக சீனாவுக்குக் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
கிழக்கு இந்தியாவில் வனவிலங்குக் கடத்தலுக்கான ஒரு முக்கிய போக்குவரத்து மையமாகவும் கடத்தல் வழித்தடமாகவும் ஒடிசா உருவெடுத்து வருவதை தரவுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளையில் இந்திய வனவிலங்குகளை வெளிநாடுகளுக்கு கடத்துவது மட்டுமின்றி, இந்தோனேசியா, மலேசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து ஒராங்குட்டான்கள், கிப்பன்கள் போன்ற அரிய விலங்குகளை இந்திய பணக்காரர்களின் வீடுகளில் வளர்ப்பதற்காக இந்தியாவுக்குள்ளும் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுமார் 50 லட்சம் ரூபாய் வரை சட்டவிரோத கருப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒராங்குட்டான் மற்றும் கிப்பன் குட்டிகளுக்காக அவற்றின் தாயைக் கொடூரமாகக் சுட்டுக் கொன்று குட்டிகளைத் தானியாகப் பிரித்துக் கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில்தான், இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளின் வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழக்கூடிய ஒராங்குட்டான்களின் 5 குட்டிகளைக் கடத்தி வந்த ஒடிசா கடத்தல் கும்பல், ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்ட வனப்பகுதியில் அந்த 5 குட்டிகளையும் யாருக்கும் தெரியாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
உள்ளுர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அந்த 5 ஒராங்குட்டான் குட்டிகளையும் மீட்டுள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன 1 முதல் 1.5 அடி உயரமுள்ள 3 ஆண், 2 பெண் குட்டிகளையும் மீட்டு பராமரித்து வருகின்றனர். ஒன்றிரண்டு குட்டிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஒடிசா வனத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பின்னணி குறித்து தெரிவித்துள்ள ஒடிசா வனத்துறை அதிகாரிகள், "சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் ஆய்வுகளின் மிகவும் ஆபத்தான நிலையில் அழிந்து வரும் இனமாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் இவற்றை இந்தோனேசியாவிலிருந்து கடத்தி வந்துள்ளனர். கடத்தல் முயற்சி தோல்வியடைந்ததால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கடத்தல்காரர்கள் இவற்றைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, இந்த 5 குட்டிகளும் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளன. இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக மத்திய அரசின் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ஒடிசா வனத்துறை உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.




















