இன்ஸ்டாவில் உறவுக்காரப் பெண்ணை Follow செய்த நபர்; கொலையில் முடிந்த பேச்சுவார்த்த...
Anbe Diana:``'பெரம்பூர்' சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது" - நடிகர் சமுத்திரகனி
'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, ``ஒரு படைப்பில் அனைவரும் உண்மையான உழைப்பைக் கொடுத்திருந்தால், அது திரையில் அப்படியே பிரதிபலிக்கும் என்று என் குருநாதர் கே.பாலசந்தர் கூறுவார்.
'அன்பே டயானா'வின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது அந்த உண்மை தெரிகிறது. 'ஜமா' போன்ற படங்களை எடுப்பதற்குத் தனி தைரியம் வேண்டும். முன்பு 'அலைகள் ஓய்வதில்லை', 'கடலோரக் கவிதைகள்' மற்றும் வெற்றிமாறனின் 'ஆடுகளம்' படங்கள் பார்த்தபோது ஒரு பகுதியின் வாழ்வியல் உணர்வை நாம் ரசித்தோம்.
அதைப்போல, இந்தப் படத்திற்குப் பிறகு சென்னை 'பெரம்பூர்' ஒரு சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது.
யூடியூப் ஸ்டார் கோபியின் மிகப்பெரிய ரசிகன் நான். கோபியும் சுதாகரும் பண்ணும் வீடியோக்களைப் பார்த்து, மன அழுத்தமாக இருக்கும் நேரங்களில் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ரோஜா மேம் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளதையும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்திருந்தால் இந்தப் பிரபஞ்சம் நம்மைக் கைவிடாது, நம்மைத் தூக்கி நிறுத்தும். படக்குழுவுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டார்.

மெட்ராஸ் சென்ட்ரல் மற்றும் பரிதாபங்கள் யூடியூப் சேனல்கள் மூலம் தமக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள கோபி, இப்படத்தில் 'பெங்களூர் பாபா' என்ற என்டர்டெய்னிங்கான ஆங்கிலோ-இந்தியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேடையில் பேசிய கோபி, "இயக்குனர் பாரி ப்ரோவின் 'ஜமா' படத்தை நான் தியேட்டரில் பார்க்கவில்லை என்ற வருத்தம் எனக்குள் இருந்தது. அதனால், அவர் என்னிடம் 'அன்பே டயானா' கதையைக் கூற வந்தபோதே நடிக்க பிக்ஸ் ஆகிவிட்டேன். கதை கேட்டு முடித்து அவர் கிளம்பிய 10 நிமிடத்திலேயே போன் செய்து, 'ப்ரோ இந்த கேரக்டரை யாருக்கும் மாத்திடாதீங்க, நானே பண்றேன்' என்று கூறினேன்.
என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் ஷெல்லி ப்ரோவின் 'அருவி' பட விஷுவல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. இப்படத்தில் பெரம்பூர் நகரமே ஒரு கதாபாத்திரமாகச் சேர்ந்து நடித்துள்ளது எனலாம்.
பெரம்பூரில் என்னென்ன உணவகங்கள் உள்ளன, அங்குள்ள மக்களின் வாழ்வியல் என்ன என்பதைப் பற்றிய முழு விவரங்களையும் ஒரு டைரியில் குறித்து வைத்திருப்பது போல துல்லியமாகத் தெரிந்து வைத்து, இயக்குனர் பாரி ப்ரோ இப்படத்தைச் செதுக்கியுள்ளார்" என்றார்.







