சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ - இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க...
Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup; அசத்தும் அப்டேட்ஸ்
தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'அரசன்' முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது.
அதன் பின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிலம்பரசன் இணைகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமுத்திரகனி, கிஷோர் என 'வடசென்னை'க்கான முகங்களில் தேர்வானார்கள். முதன்முறையாக அனிருத்துடன் கைகோர்த்திருக்கிறார் வெற்றிமாறன்.

படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் 'அரசன்' கதை லைன் என்றும் சொல்கிறார்கள்.
முதல் ஷெட்யூலில் சிம்புவுடன், சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் இணைந்தார்கள்.
அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.
'அரசன்' படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை. அவர் இப்போது 'ஜெயிலர் 2', 'ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு', பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் எனப் பிசியாக இருக்கிறார். இதனால் அவரது கால்ஷீட்டிற்காகக் காத்திருந்தனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்த ஷெட்யூலில் சிலம்பரசன் விஜய்சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஹீரோயினாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் தவிர படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்கிறார்கள். அதாவது இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். மூன்றாவது ஷெட்யூலில் வேறொரு தோற்றத்திற்கு மாறுகிறார் சிலம்பரசன்.
இதற்கிடையே வரும் ஏப்ரலில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பிக்கும் ஐடியாவில் உள்ளார் சிலம்பரசன். 'அரசன்' படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும், முதல் ஷெட்யூலிலேயே வெற்றிமாறனின் குட்புக்கில் சிலம்பரசன் இடம்பிடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள்.
தவிர, ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்திலும் நடிக்கப் போகிறார் சிலம்பரசன். இது குறித்த விவரங்கள் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.!


















