Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
AVM சரவணன்: `6.20-க்கு ‘மகாபாரதம்’ சீரியல் போடுவாங்க; அதுவரை பேசிட்டு இருப்பார்!’ - V.C.குகநாதன்
சாதனையாளர் திரு.ஏவி. எம் சரவணன் அவர்கள், தந்தையார் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ஒற்றை மனிதனாய் கட்டி எழுப்பிய ஏவி.எம் ஸ்டுடியோவை திறம்பட நடத்தி தன் வாழ்நாள் முடியும் வரை காப்பாற்றியவர்.
ஏவி.எம் சரவணன் தனது இறுதி காலக்கட்டங்களில் ஒரு நல்ல குடும்பப் படத்தைத் தயாரித்து விட வேண்டும் என்று விரும்பினார்.
மற்ற சகோதரர்கள் தங்கள் பாகங்களைப் பிரித்துக்கொண்டு வேறு வேறு தொழில்களில் போய்விட்டபோதும், சரவணன் சார் மட்டும் படப்பிடிப்பு தளங்களையும், தயாரிப்பு கம்பெனியையும் கைவிடாமல் காப்பாற்றி வந்தார்.

ராதா கிருஷ்ணன் சாலையில் தங்கி இருந்த போது, அவர் பல தடவை என்னை அழைத்து கதைகள் பற்றி பேசினார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் பழைய ஆங்கில படங்கள், மராத்தி படங்கள், ஜப்பான் படங்கள் பற்றியெல்லாம் விவரமாகப் பேசுவார். அதில் இருக்கின்ற நல்ல காட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசுவார். சில வசனங்களைக்கூட அவர் நியாபகம் வைத்துக்கொண்டு என்னிடம் சொல்லி மகிழ்வார்.
கதை, திரைக்கதைப் பற்றி விவாதிப்பதிலும், சினிமாவுக்கு எதை செய்தால் சரியாக வரும் என முடிவெடுப்பதிலும் வல்லவர்.
சரவணன் சார் எதாவது ஒரு நல்ல படம் டிவியில் ஓடினால், உடனே எனக்கு கால் பண்ணி சொல்லுவார்.
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை ஆசையோடும் காதலோடும் தயாரித்தார். அந்தப் படம் ஜனாதிபதி பரிசு பெற்ற போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஏவி.எம்மின் ஐம்பதாவது ஆண்டு விழாவை மிக மிக விமர்சையாக கொண்டாடினார்.
ஐம்பதாவது ஆண்டில் 1997ல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மின்சாரக்கனவு படத்தை வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு கூட என்னை அவர்கள் ஸ்டுடியோவில் உள்ள கோயிலுக்கு வரச் சொல்லி 6 மணிவரை பேசுவார்.
6.20 க்கு அந்த ‘மகாபாரதம்’ சீரியல் போடுவார்கள். டிவியில் அதைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போய்விடுவார். அவர் சினிமாவை நேசித்தார். நேசித்தது மட்டுமல்ல சினிமாவைத் தவிர அவர் வேறு எந்தத் தொழிலை செய்யவில்லை.
அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் கடைசியாக ஒரு இரண்டு மாதத்திற்கு முன்னால் கூட நான் அவரைப் பார்த்து பேசினேன்.
அதன் பின்னால் அவரைப் பார்த்து பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரோடு இரண்டு உதவியாளர்கள் அவரைக் கவனிப்பதற்காக இருப்பார்கள். அவர்கள் என்னோடு தொடர்பில் இருப்பார்கள். அவர்கள் மூலமாக நான் சரவணன் சரைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
என்னுடைய பிறந்தநாள் ஜனவரி 16. நான் கடந்த ஜனவரி 15-ம் தேதி அந்த உதவியாளரிடம் பேசினேன். அவரிடம் என்ன சொன்னேன் என்றால் `நாளைக்கு என்னுடைய பிறந்தநாள். கிட்டத்தட்ட 55 வருஷமாக என்னுடைய பிறந்தநாள் என்றால் காலையில் 6 மணிக்கு ஒரு போன் அடிக்கும். சார் `என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்’ என்று தன்னுடைய வாழ்த்துகளை பல விதத்தில் தெரிவிப்பார். இந்த ஆண்டு 15ம் தேதி நான் அந்த உதவியாளரிடம் கேட்டபோது அவர் சொன்னார், நாங்கள் அவருடைய காலண்ட்ரைப் பார்த்தோம். நவம்பர் 16இல் ஒரு மார்க் பண்ணி அதில் பிறந்தநாள் வாழ்த்து குகநாதனுக்கு சொல்ல வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார் என்று சொன்னார்.
எதற்காக நான் இதைச் சொல்கிறேன் என்றால், எனக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது பெரிது என்பதைக் காட்டுவதற்காக நான் சொல்லவில்லை. நிறைய நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். எல்லா நண்பர்களுக்கும் இப்படி வாழ்த்து சொல்வது அவருடைய பழக்கம். இன்னும் ஒரு பழக்கம் அவருக்கு இருந்தது. வியாழக்கிழமைகளில் காலையில் 5 மணிக்கு ECRல இருக்கின்ற சாய்பாபா கோவிலுக்கு தவறாமல் போவார்.
அங்கு போவதற்கு முன்பு வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு போவார்.
நமக்கு வேண்டியவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவார்.
அடுத்ததாக இந்த ஸ்டுடியோவை எல்லாரும் பாகம் பிரித்து போனதுக்குப் பிறகு, அப்புச்சியோட பெயர், அதாவது ஏவிஎம் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக அவருடைய மகன் குகன் வேறு விதமாக இதனை நடத்தலாம் என்று சொன்னதற்கு, `நான் உயிரோடு இருக்கும் வரை இப்படியே இருக்கட்டும்’ என்று சொன்னார். அவர் மகன் அப்பா மீது பாசம் உள்ளவர் என்பதால் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டார்.
ஸ்டூடியோவில் சரவணன் சாரை கண்ணாடி பேளைக்குள் படுக்க வைத்திருந்தார்கள். நான் போகும்போது அதிர்ந்து போனேன். ஏனென்றால் அந்த மூன்றாவது ஃப்ளோர்தான் ஏவிஎம் செட்டியார் எந்தப் படம் எடுத்தாலும் பூஜை ஆரம்பிக்கும் இடம் அந்த இடம் தான். இடத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகப் போராடினவர் சரவணன் சார்.
அதோடு அவருடைய மகன் குகனும் பேத்திகளும் மறுபடியும் சினிமா எடுத்து, அந்த பேனரை நிலறுத்தி நடத்திக்கொண்டு இருக்காங்க. நிச்சயமாக நான் சொல்வேன். சரவணன் சாரின் ஆத்மா இந்த ஸ்டூடியோவை 100 வருடங்கள் நிச்சயமாக நடத்தும்.

அதுக்கு துணையாக குகன் சாரும் அவர் பேத்திகளும் இருப்பார்கள். இனியும் அவர்கள் நல்ல நல்ல படங்களை எடுப்பார்கள்.
திரைப்படத்துறையில் முதல் 100 ஆண்டு கொண்டாடிய ஸ்டூடியோ என புகழை பெறும்.
நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு நல்லவரை நல்ல இடத்துக்கு அனுப்பி வையுங்கள். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.!

















