ஜெர்மனியுடன் தோல்வி; சென்னையில் சோகத்துடன் வெளியேறிய இந்திய ஹாக்கி அணி | Photo A...
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி
அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.

இதுசம்பந்தமாக விகடன் தளத்தில் நேற்று (07.12.25) கராத்தே தியாகராஜனின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில், அம்பத்தூர் திமுக சேர்மன் மூர்த்தி, மண்டல அதிகாரி பிரபாகரன், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் LTUC தலைவர் பாரதி ஆகியோர்தான் கூட்டு சேர்ந்து கமிஷன் அடிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
விகடன் தளத்தில் அந்தப் பேட்டி வெளியாகியிருந்த நிலையில் கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டிய LTUC தலைவர் நம்மை தொடர்புகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 'திமுக சேர்மன் மூர்த்தி பணியில் இல்லாத 450 தூய்மைப் பணியாளர்களை பணியில் இருப்பதாகக் கணக்கு காட்டி மாதம் 1 கோடி வரை கொள்ளையடிப்பதாகவும், அதில் நானும் கமிஷன் பார்ப்பதாகவும் கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மூர்த்தி தரப்பிலிருந்து எனக்கு ஒரு ரூபாய் வழங்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் கூட நானே தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைத்துவிட்டு செல்கிறேன். தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணிக்காக 100 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். அம்பத்தூரில் இப்போதும் 4 தூய்மைப் பணியாளர்கள் 20 நாட்களுக்கு மேலாக உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கிறார்கள். அம்பத்தூரிலிருந்துதான் எங்களின் போராட்டத்தையே தொடங்கினோம்.
வலுவாக நடந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை உடைக்க வேண்டும் என்றுதான் அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கராத்தே தியாகராஜன், பாஜகவின் தொழிற்சங்கமான பிஎம்எஸ்ஸின் புருஷோத்தமன் ஆகிய மூவரும் கூட்டு. இவர்கள் ராம்கி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள்.

முதல்வரிடம் தேநீர் அருந்த தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் சென்றதே அந்த புருஷோத்தமன்தான். நாங்கள் சவால் விடுகிறோம். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கராத்தே தியாகராஜன் ஆகியோரோடு பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க நாங்கள் தயார். யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை பார்த்துவிடுவோம்.' என்றார் கொதிப்போடு.















