ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அத...
என் மகன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை எதிர்த்து கோஷம் போட்டதை ஆதரிக்கிறேன் -மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.
நேற்று (7/12/25) மதுரை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கிளம்பியபோது விமானநிலையத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் உயநீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார் அல்லவா?
இந்த விவகாரம் குறித்து மார்க்கண்டேயனிடம் பேசினோம். முன்பு அதிமுகவில் இருந்த இவர் தற்போது திமுக எம்.எல்.ஏ. இவரின் மகன் அக்ஷய் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
மார்க்கண்டேயன் இந்த விவகாரம் குறித்து, ''டெல்லியில சட்டம் படிச்சிட்டிருக்கான் என் பையன். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தீர்ப்பளித்த அடுத்து சில தினங்களில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டிருக்கார் மாண்பமை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
அந்த நிகழ்ச்சியில் அரங்கத்தில் குத்துவிளக்கேற்றச் சொல்ல, 'மலையிலதான் ஏத்த முடியல, இங்கவாச்சும் ஏத்துவோம்' எனப் பேசியிருக்கிறார்.
இந்தப் பேச்சை செய்தித்தாள்களில் பார்த்துட்டு, 'ஒரு நீதிபதி இப்படி எப்படி பேசலாம்'னு எங்கிட்டயே கேட்டான். அவனை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருக்கு இந்தப் பேச்சு.

சி.எம். நிகழ்ச்சி அன்னைக்கு சென்னையில் இருந்து ஊருக்கு வர்றதாதான் சொன்னான். அதுக்குதான் ஏர்போர்ட் வந்தான். இதுக்கிடையில மதுரையில இந்த விவகாரம் தொடர்பான முதல்வரின் பேச்சும் அவனை ரொம்பவே ஈர்த்திருக்கு.
இந்தப் பின்னணியில முதல்வர் கிளம்பறதைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு கோஷம் எழுப்பியிருக்கான். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கல. பொதுவெளியில ஒரு நீதிபதியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உட்பட்டவைதானே. அதனால அவனுடைய இந்த செயலை நான் ஆதரிக்கறேன்' என்றார் இவர். அக்ஷயிடம் இதுகுறித்துப் பேசினோம்,
''நான் கோஷம் எழுப்பியது நிஜம்தான். அதுல இருந்து நான் பின் வாங்கப் போறதில்லை. இது தொடர்பா குரல் எழுப்பணும்னு தோணுச்சு. பண்ணினேன். போலீஸ் உடனே அவங்க கடமையைச் செய்தாங்க. நான் இன்னும் சட்டம் படிச்சு முடிக்கல.

ஆனா இந்த மாதிரி விஷயங்களை என்னால் ஏத்துக்க முடியல. கொலிஜியம் அமைப்பு நீதிபதிகளை நியமிக்கும்போது அவங்களுடைய பின்புலம் எல்லாம் தீர விசாரிச்சு நியமிக்கணும். அப்பதான் சரியான நீதி கிடைக்கும்'' என்கிற அக்சய் 'மீடியாங்கிற போர்வையில சிலர் வேண்டாததை செய்றாங்க. நான் கோஷம் எழுப்பியது நீதிபதிக்கு எதிராக. ஆனா முதல்வருக்கு எதிரா கோஷம் போட்டேன்னு கிளப்பிவிட்டுட்டாங்க இவங்க' என தன் வருத்தத்தையும் பதிவு செய்தார்.














