செய்திகள் :

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

post image

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்தார்கள். அனுமதி கிடைக்காததால் தேதி தள்ளிப்போய் நாளை நடத்தவிருக்கிறார்கள்.

TVK Vijay
TVK Vijay

புதுச்சேரியில் காவல்துறை பல முறை அனுமதி மறுத்த பிறகும், முதல்வர் வரை சந்தித்து கடுமையாக முயன்றுதான் விஜய்யின் கூட்டத்துக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். தவெகவின் பிரதான களம் தமிழ்நாடு. தவெகவின் பிரதான எதிரி திமுக. புதுச்சேரியில் மேடை போட்டு திமுக vs தவெக என பேச முடியாது. அப்படியிருக்க, ஏன் புதுச்சேரியில் கூட்டம் நடத்த இவ்வளவு தீவிரமாக தவெக முயன்றது? பின்னணி என்ன?

கரூர் சம்பவத்துக்கு பிறகு பொதுவெளியில் விஜய் இன்னமும் எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ளரங்க கூட்டத்தை நடத்தியிருந்தார். அதே பாணியில் வேறு சில மாவட்டங்களிலும் உள்ளரங்க கூட்டத்தை நடத்த நினைத்தனர். அதற்காக சில மாவட்டங்களில் கல்லூரிகள், தனியார் மண்டபங்களிலும் பேசிப் பார்த்தனர். ஆனால், பல மாவட்டங்களில் இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. மேலும், காஞ்சிபுர உள்ளரங்க கூட்டமும் விஜய் தரப்பு நினைத்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நிறைய விமர்சனங்கள் வேறு வந்திருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் அடுத்த கூட்டத்தை புதுச்சேரியில் ரோடு ஷோவோடு பொதுக்கூட்டத்தை நடத்தலாம் எனும் முடிவுக்கு பனையூர் தரப்பு வந்தது.

TVK Vijay
TVK Vijay

புதுச்சேரியை டிக் அடித்ததற்கு பின்னால் நிறைய அரசியல் கணக்குகளும் இருக்கிறது. புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி விஜய்க்கும் புஸ்ஸி ஆனந்த்துக்கும் நல்ல நண்பர். விஜய் பலமுறை ரங்கசாமியை சந்தித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு புஸ்ஸி ஆனந்த்தின் பிறந்தநாளுக்கு புதுச்சேரியில் உள்ள அவரின் வீட்டிற்கே நேரில் வந்து வாழ்த்தினார் ரங்கசாமி. இதையெல்லாம் மனதில் வைத்துதான் புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு அனுமதி வேண்டுமென காவல்துறையிடம் மனு கொடுத்தனர்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு மீண்டும் பஸ்ஸை கிளப்பிக் கொண்டு ரோடு ஷோவுக்கு செல்லும் மனநிலையில் விஜய்யே இல்லை. மாவட்டம் மாவட்டமாக பொதுக்கூட்டம் என்பதுதான் தவெகவின் ஐடியா. ஆனால், இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். புதுச்சேரி காவல்துறை ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுத்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கும்பட்சத்தில் அதையே திமுக அரசின் மீது திருப்பி, 'புதுச்சேரியில் கூட எந்த பிரச்னையும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக அரசின் காவல்துறைதான் பிரச்னை கொடுக்கிறது.' என்று அரசியல் செய்ய தவெகவின் வியூக தரப்பு திட்டமிட்டு வந்ததாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

TVK Vijay
TVK Vijay

இன்னொரு பக்கம் கரூர் சம்பவத்துக்கு பிறகு கட்சிக்குள் தனது அதிகாரத்தையும் ஆளுகையையும் நிரூபித்துக் காட்ட வேண்டிய நெருக்கடியில் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாகவும் பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள். 'முன்ன மாதிரி நம்ம கன்ட்ரோல் இல்லப்பா...' என தனக்கு நெருக்கமானவர்களிடமே ஆனந்த் புலம்பி வருவதாகவும் சொல்கிறார்கள். அதனால் தனது சொந்த ஊரில் நடக்கும் விஜய்யின் நிகழ்ச்சியை தடபுடலாக நடத்திக் காட்டிவிட வேண்டும் என்கிற உறுதியோடு இருந்திருக்கிறார்.

ஆனால், வியூக தரப்பின் திட்டம், புஸ்ஸி ஆனந்தின் ஈகோ என எல்லாவற்றுக்கும் சேர்த்து விபூதி அடித்து ட்விஸ்ட் கொடுத்துவிட்டார் ரங்கசாமி. ஆனந்த் தரப்பு நான்கு முறை புதுச்சேரி காவல்துறையிடம் நேரில் மனு கொடுத்தும் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. மச்சான் வழி பஞ்சாயத்தால் ஆதவ்வும் ஆரம்பத்திலிருந்தே புதுவையின் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

ஆதவ், புஸ்ஸி ஆனந்த் இருவரும் சேர்ந்து ரோடு ஷோவுக்கு அனுமதி வேண்டி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்தனர். ஆனந்த் இன்னொரு முறை தனியாகவும் சந்தித்தார். அப்போதும் வேலை ஆகவில்லை. புதுச்சேரியின் டிஜிபி உட்பட முக்கிய காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு ரோடு ஷோவுக்கு அனுமதி கிடையாது என மறுத்தார் ரங்கசாமி. புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலிருந்தும் விஜய்யை பார்க்க கூட்டம் கூடும். அப்படி கூடும் கூட்டத்தை புதுச்சேரி காவல்துறையை மட்டும் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாதென காரணம் கூறி வேண்டுமானால் பொதுக்கூட்டத்தை மட்டும் நடத்திக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனர்.

பொதுக்கூட்டத்துக்கும் எக்கச்சக்க கட்டுப்பாடுகள். விஜய்யை வைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்தி வெயிட் காட்டலாம் என நினைத்த ஆனந்தும் அப்செட். ரோடு ஷோவை நடத்தி தமிழகத்தில் திமுக அரசின் மீது நெருக்கடி உண்டாக்கலாம் என நினைத்த வியூக தரப்பும் அப்செட்.

கூடவே இப்போது இன்னொரு தலைவலியும் சேர்ந்திருக்கிறது. வழக்கமாக தமிழ்நாட்டில் நடக்கும் கூட்டங்களில் ரெண்டே பேருக்கு இடையிலதான் போட்டியே ஒன்னு திமுக இன்னொன்னு தவெக என்பார். அதிமுகவை தொடவே மாட்டார். அதிகாரத்தில் இருக்கும் கட்சியைத்தானே எதிர்க்க முடியும் என்பது தான் தவெக தரப்பு சொல்லும் லாஜிக்.

TVK Vijay
TVK Vijay

இதே லாஜிக்கை விஜய்யால் புதுச்சேரியில் சொல்ல முடியாது. ஏனெனில், அங்கே திமுக ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேநேரத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்காவிடிலும் ரங்கசாமி விஜய்யின் நண்பர்தான். ரங்கசாமிக்கும் தவெகவுடன் கூட்டணி சேரும் எண்ணம் இருக்கிறது.

சமீபத்தில் பாஜகவின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ரங்கசாமியை சந்தித்து 2026 தேர்தல் சம்பந்தமாக ஆலோசித்திருக்கிறார். அவரிடம் சீட் ஒதுக்கீடு பற்றியெல்லாம் ஜனவரிக்கு மேல் பார்க்கலாம் என பிடிகொடுக்காமல் பேசி அனுப்பியிருக்கிறாராம் ரங்கசாமி.

அப்படியிருக்க விஜய் ரங்கசாமியின் ஆட்சியை எதிர்த்து பேசுவாரா என்பது கேள்விக்குறியே. ஆனால், ரங்கசாமி பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறார். ஆக, அதைப் பற்றி தொடாமல் போனாலும் விஜய் மீது விமர்சனங்கள் பாயும். அதனால் எந்தப் பிரச்னையை தொட்டு யாரை பிரதானமாக எதிர்த்து பேச வேண்டும் என்பதில் தவெக முகாம் குழம்பியிருக்கிறது.

TVK Vijay
TVK Vijay | த.வெ.க - விஜய்

திரிசங்கு நிலையில் இருப்பதால் புதுச்சேரிக்கு சம்பந்தமான பொது விஷயங்களை மட்டும் தொட்டுச் செல்லும் மனநிலையில் இருக்கிறதாம் விஜய்யின் வியூகத் தரப்பு.

துணை நிலை ஆளுநர்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்துக்கு ஏற்படும் சிக்கல்கள், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை, நிலையான ஆட்சி போன்றவற்றை சுட்டிக்காட்டியபடி விஜய்யின் உரை இருக்கலாம் என்கின்றனர்.

எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்து முதலில் புதுச்சேரியில்தான் ஆட்சியைப் பிடித்தார். அந்த சென்டிமென்டையும் தன்னோடு ஒப்பிட்டு விஜய் பேசக்கூடும். மொத்தத்தில் புதுச்சேரி கூட்டத்தின் வழி தவெக முகாம் போட்ட கணக்கு ஒன்று, ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கிறது என்கிறார்கள் சிலர்.!

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நாமே தகர்க்கிறோமா? - மருவும் மக்களாட்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க