Anaswara Rajan: "அல்லு அர்ஜுனை மலையாள நடிகர் என நினைத்துக் கொண்டிருந்தேன்" - அனஸ...
BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்
விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது.
‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ என்று வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் சொன்னார் விசே. ஆனால் விசாரணையின் போது விசேவின் தலையைச் சுற்ற வைத்து இரண்டு கிலோ அல்வாவைத் தந்து விட்டார் சான்ட்ரா. விசே அவரை விசாரித்த முறையும் வலிக்காத மாதிரியே இருந்தது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 76
சான்ட்ராவின் பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும்?
பலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், அதிகமாக பிரயாணம் செய்கிறவர்கள், சக மனிதர்களுடன் உடனே ஒத்துப் போகும் தன்மையை வளர்த்திருப்பார்கள். பயணங்களில் நிகழும் நல்ல, கெட்ட அனுபவங்கள், சக மனிதர்களுடன் பழகக்கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும். அதனால்தான் ‘ஆன்மீகம்’ என்கிற போர்வையில் நிறைய பயணங்களைச் செய்ய வேண்டிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் உள்ளவர்கள், பயணத்தில் எதிர் இருக்கையில் உள்ளவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்கு கூட உடனே வெறுப்பார்கள். இவர்கள் எழுந்து போய்த் தொலைக்கக் கூடாதா என்று மனமார எண்ணுவார்கள். ஒருவகையில் சான்ட்ரா அப்படிப்பட்டவரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. அதிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில், சான்ட்ராவின் தூக்கத்தை கெடுக்காமல் அனைவரும் அமைதியாக உண்டு, உறங்கி எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைத்தனமானது.

‘சான்ட்ரா மாதிரியே அனைவரும் இருந்தால் பிக் பாஸ் ஷோ எப்படியிருக்கும்?’
ஒரு வாதத்திற்காக இப்படி யோசித்துப் பார்ப்போம். சான்ட்ராவைப் போலவே மற்ற போட்டியாளர்களும் சரியான நேரத்தில் தூங்கி மற்ற நேரங்களில் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து, அழுக்கு சட்டையுடன் அடிக்கடி மூக்கைச் சிந்தி அழுது கொண்டேயிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் காட்சிகளையே தினம் பார்க்க நேர்ந்தால், பார்வையாளர்கள் மட்டும் அல்ல, பிக் பாஸ் டீமின் ஆட்களே தெறித்து ஓடி விடுவார்கள்.
இந்த எளிமையான உண்மை சான்ட்ராவிற்கு ஏன் புரியவில்லை? பிரஜின் கூட இருந்த போதும் வீட்டில் இதே மாதிரியான சத்தங்கள்தான் வந்திருக்கும். அப்போதெல்லாம் சான்ட்ரா இம்மாதிரியான புகார்களை சொன்னதாக தெரியவில்லை. “பிரஜின் போன பிறகு எனக்கு மென்ட்டலி ரொம்ப டிஸ்டர்ப்பிங்கா இருக்கு” என்று சான்ட்ராவே சொல்கிறார். எனில் பிரச்சினை அவரிடம்தானே இருக்கிறது?!
தன்னிடம்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை உண்மையிலேயே மனமார சான்ட்ரா உணர்ந்திருந்தால் என்ன செய்திருக்கலாம்? மற்றவர்களிடம் அணுக்கமாக பேசிப் பழகி “பிரஜின் போனதுல இருந்து நான் டல்லா இருக்கேன். எனக்கே நல்லா தெரியுது. நீங்க பேசுங்க. தப்பில்லை. ஆனா என்னால தூங்க முடியலைப்பா.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ண முடியுமா?” என்று தன்மையாக வேண்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் சக போட்டியாளர்கள் ஒத்துழைத்திருப்பார்கள்.

சான்ட்ரா வில்லங்கமானவரா? அனுதாபத்துக்குரியவரா?
ஆனால் சான்ட்ரா வீட்டில் உள்ள பலரையும் கற்பனை எதிரியாக கருதிக் கொள்கிறார். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு வெளியேறுகிறார். ‘என்ன ஆச்சு?’ என்று விசாரிக்க வருபவர்களின் மீதே கொலைவெறியுடன் பாய்கிறார். ஒரு கேள்வியில் ஆரம்பித்து சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழம்ப வைக்கிறார். மீறி பேசினால் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். ‘இது என்னடா வம்பு?’ என்று மற்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
மற்றவர்கள் உழைத்துக் கொண்டிருக்கும் போது ‘உடல்நலத்தை’ காரணம் காட்டி பகல் பூராவும் நன்றாகத் தூங்குகிறார் சான்ட்ரா. உணவு முதற்கொண்டு மற்றவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கிற விஷயங்களை குற்றவுணர்ச்சியின்றி அனுபவிக்கிறார் சான்ட்ரா.
ஆனால் இரவிலும் தான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக “இந்த நேரத்துலயா வேலை செய்வாங்க?” என்று ஆட்சேபிப்பதெல்லாம் வேலையாட்களை முதலாளி அதட்டுவது போலவே இருக்கிறது.
“நான் யார் பிரச்சினைக்காவது போறேனா.. நான் பாட்டுக்குத்தானே இருக்கேன” என்பது சான்ட்ரா அடிக்கடி சொல்லும் வசனம். ஆனால் அவர் உண்மையிலேயே மனமார அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தான் நெருப்பில் விழுந்த புழு போல தத்தளிப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறார். தன் மீது அனைவரும் அனுதாபம் செலுத்த வேண்டும், மகாராணி போல கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் இதெல்லாம் நடக்குமா? அவரவர்கள் அவர்களின் கேமை ஆடுவார்களா, சான்ட்ராவை செல்லம் கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருப்பார்களா?

‘யோவ் பிக் பாஸ்.. பாட்டு போடாத.. நான் தூங்கணும்’ - சொல்வாரா சான்ட்ரா?
இத்தனைக்கும் சான்ட்ராவின் அழுகைக்கு பயந்து பெரும்பாலோனோர் அடங்கித்தான் போகிறார்கள். அப்படி இருந்தும் சான்ட்ராவிற்கு குறையும் புகார்களும் அழுகையும் தீரவில்லை. இத்தனை சோகத்தில் இருக்கிற சான்ட்ரா, வேக்அப் பாடலுக்கு மட்டும் முழுதான ஒப்பனையுடன் உற்சாகமாக ஆடுகிறார்.. “யோவ் பிக் பாஸ்.. எனக்கு தலை வலிக்குது. தூங்கணும்.. பாட்டை நிறுத்தி தொலை” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவாரா? மாட்டார். அதிகாரத்தின் முன்பாக பம்மி நிற்கும் சான்ட்ராவிற்கு எங்கே தன் கோபம் செல்லுபடியாகும் என்கிற தந்திரம் நன்றாக தெரிந்திருக்கிறது.
‘சத்தமாக இருக்கிறது. இரவில் தூங்க முடியவில்லை’ என்று சொல்லும் சான்ட்ரா, அதே இரவு நேரத்தில் ‘கடந்த வந்த பாதையை’ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மற்றவர்களிடம் சொல்லி படுத்தியிருக்கிறார்.
டான்ஸ் டாஸ்க் முடிந்து அனைவரும் சோர்வாக இருப்பார்களே.. பகலில் சொல்வோம்’ என்று நினைக்கவில்லை. அதாவது தன் சௌகரியத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது அநியாயமானது.
அது மட்டுமல்லாமல் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழப்பும் தந்திரமும் தன்னிச்சையாக படிந்திருக்கிறது. “இரண்டு மணி நேரமா நிக்கறேன்.. பதில் சொல்லுங்க. முடிச்சுக்கலாம்” என்று விசே கதறியும் கூட கல்லுளிமங்கன் போல நின்று கொண்டிருந்தார் சான்ட்ரா.

சான்ட்ரா விக்டிம் கார்ட் கேம் ஆடுகிறாரா?
‘திவ்யாவின் தலைவலி’ டிராமா பற்றிய பிரச்சினையில் ‘எனக்கு தலைவலில்லாம் ஒண்ணும் கிடையாது. கனி ஜெயிலுக்குப் போகலை. அதனால எனக்கும் போக விருப்பமில்லை. அதனால்தான் பண்றேன்’ என்று திவ்யா தன்னிடம் சொன்னதாக சான்ட்ரா தெளிவாகவே வாக்குமூலம் தந்தார். ஆனால் விசாரணையின் போது ‘நான் அப்படிச் சொல்லலை. திவ்யா மாத்திரை போடாததால அப்படி நெனச்சிட்டேன்” என்று பல்டியத்து விட்டார்.
கனி ஜெயிலுக்குப் போகாத எரிச்சலில் திவ்யா செய்த டிராமா பற்றியோ, விசாரணையின் போது ‘சொல்லாத.. சொல்லாத’ என்று திவ்யா கையைப்பிடித்து சொன்னதைக் கேட்டு சான்ட்ரா அதை மறைத்தது பற்றியோ, இந்த எபிசோடில் விசே விசாரிக்கவேயில்லை. திவ்யாவின் தலைவலி உண்மையா பொய்யா என்பதை மட்டுமே கேட்டு விட்டு விட்டார்.
அடிப்படையிலேயே மனச்சிக்கல் கொண்டிருக்கும் சான்ட்ரா ஒருவகையில் அனுதாபத்திற்கு உரியவர். பிக் பாஸ் போன்ற வீட்டிற்கு பொருந்தாதவர். ‘இந்த கேம் தனக்கு செட் ஆகாது’ என்பதை முன்பே அவர் உணர்ந்திருக்க வேண்டும். மாறாக ‘பார்த்துக்கலாம்’ என்று கேமிற்கு வீம்பாக வந்து விட்டு ‘நான் வெளியே போறேன்’ என்று மற்றவர்களின் மீது பழி சுமத்தி விக்டிக் கார்டு எடுத்து நாள் பூராவும் அழுது தொலைப்பதெல்லாம் பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தரும்.

விசேவின் விசாரணையில் பாரபட்சம் இருக்கிறதா?
போட்டியாளர்கள் மட்டுமல்ல, இந்த எபிசோடின் விசாரணை நாளிலேயே சான்ட்ராவை எதிர்கொள்வதற்கு விசே நொந்து போனார். ‘ஒண்ணுமே புரியலை. ஒரு சிறிய இடைவேளை’ என்று ஜாலியாக சலித்துக் கொண்டே போகும் அளவிற்கு மண்டையைக் குழப்பி விட்டார் சான்ட்ரா.
எஃப்ஜே, வினோத், பாரு போன்றவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கக்கூடியவர் விசே. ஏன், பிள்ளைப் பூச்சியான அமித்தைக் கூட அடிப்பவர். ஆனால் இந்த எபிசோடில் சான்ட்ராவிடம் அவர் சரியான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க முயன்றார். அதில் மறுப்பில்லை. ஆனால் அவரது வழக்கமான கறார்த்தனமோ, கடுமையோ சான்ட்ராவின் விசாணையின் போது வெளிப்படவில்லை. எனில் போட்டியாளர்களைப் போலவே ‘எங்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ?’ என்று விசேவும் உள்ளுக்குள் அஞ்சுகிறாரா?!
சான்ட்ராவின் இந்த அழுகை டிராமா நீடித்துக் கொண்டே போவது பார்வையாளர்களுக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை. ‘அய்யோ.. இவங்களை வெளியே அனுப்பித் தொலைங்களேன்” என்று சமூகவலைத்தளமே அலறுகிறது. மக்களின் வாக்குகள்படிதான் தீர்ப்பு அமையும் என்று சொல்லிக் கொள்கிற பிக் பாஸ் டீம், சான்ட்ராவை அத்தனை எளிதில் வெளியே அனுப்பாது.
அவரின் மூலம் கிடைக்கக்கூடிய அழுகை, பாச சென்ட்டிமென்ட் இந்த நிகழச்சிக்குத் தேவை. சான்ட்ராவால் ஒட்டுமொத்த வீடும் டென்ஷன் ஆவது அவர்களுக்கு ஒரு கன்டென்ட்தான். அதிலும் ஃபேமிலி டாஸ்க் நடக்கும் போது சான்ட்ரா செய்யப் போகிற ‘பாச மலர்’ டிராமாவிற்காக ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே ஆவலாக காத்துக் கொண்டிருக்கும். அவர்களுக்கு மக்களின் மனவோட்டம் முக்கியமில்லை. பாரு செய்யும் அலப்பறைகளைப் போல சான்ட்ரா செய்யும் அலப்பறைகளும் இந்த நிகழ்ச்சியின் அவசியமான கச்சாப்பொருள்.

சின்ன விஷயத்திற்கு வினோத்தை அடித்து துவைத்த விசே
இந்த எபிசோடில் மூன்றே தலைப்புகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. ஒன்று சான்ட்ரா பற்றியது. அதில் விசேவே பின்பாங்கி சோர்ந்து ஓடி விட்டார். பல விஷயங்கள் ஆழமாக விசாரிக்கப்படவில்லை.
அடுத்தது, ஆதிரையின் ஒப்பனை தொடர்பான விஷயம். இதில் வினோத்தின் பக்கம் தவறு இருந்தது. டிரிம்மருக்கும் எபிலேட்டருக்குமான வித்தியாசம் வினோத்திற்கு தெரியவில்லை. “ஆம்பளங்க செய்யறத மட்டும் குத்தம் சொன்னியே.. இப்ப நீ பண்றதுக்கு பெயர் என்ன?” என்று பாய்ந்து விட்டார் வினோத்.
‘பாப்பா பாட்டு’ தொடர்பாக சான்ட்ரா சொன்ன அபாண்டமான புகார், நள்ளிரவில் நாய் குலைத்த சமாச்சாரம் என்று விசாரிப்பதற்கு எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இந்த விஷயத்தை வைத்து வினோத்தை அடித்து துவைத்து மிச்ச நேரத்தை ஓட்டி விட்டார் விசே.
‘யார் யாரை பயன்படுத்தி முந்திச் செல்கிறார்?’ என்கிற டாஸ்க். அவ்வளவுதான் எபிசோட் முடிந்து விட்டது.
பாருவும் சான்ட்ராவும் வேலை செய்யாமல் டபாய்த்தார்கள் என்பதற்கு அதிகம் மெனக்கெடவே தேவையில்லை. ஒரு குறும்படமே போதும். முதலில் இதை மறுத்த பாரு, சாட்சியங்கள் அதிகமான பிறகு “இனிமே கவனமா இருக்கேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார்.

இந்த சீரியஸாக விஷயங்களின் இடையில் “கம்மு.. நைட்டு நீங்க எங்க இருந்தீங்க?” என்று காமெடியாக கேட்பதின் மூலம் அந்த விஷயத்தையும் ஜாலியாக கடந்து விட்டார் விசே. (வில்லங்கம் கருதி அவ்வளவுதான் விசாரிக்க முடியும் போல!)
விட்டுப் போன விஷயங்களை அடுத்த எபிசோடிலாவது விசே விசாரிப்பாரா? “என் மீது அபாண்டமா பழி சுமத்திய சான்ட்ராவை, கேக்க வேண்டிய இடத்துல மன்னிப்பு கேக்க வைப்பேன்” என்று சபதம் போட்ட கனி, ஏன் சும்மா இருந்தார்? அந்த விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் டீம் எடிட்டிங்கில் தூக்கி வி்ட்டதா, இந்த வாரமாவது எவிக்ஷன் நியாயமாக நடக்குமா என்பதற்கான விடைகளுக்கு காத்திருப்போம்.




















