செய்திகள் :

Book Fair: சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெறும் அம்பேத்கர் நூல்கள்! - ஒரு பார்வை

post image

நந்தனத்தில் நடந்து வரும் சென்னை 49-வது புத்தகத் திருவிழாவில் அம்பேத்கரை பற்றிய புத்தகங்கள் இளம் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக வெளிவந்த அம்பேத்கரைப் பற்றிய புத்தகங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

அம்பேத்கரைப் பற்றி இந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான புத்தகமாக வாழும் அம்பேத்கர் குறிப்பிடத்தக்கது. அம்பேத்கரைப் பற்றி ஆழமாக அறிந்த ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து, எம். பி. ரவிக்குமார் இந்த நூலை தொகுத்துள்ளார்.

எஸ்.டி. கபூர், அருண் பி. முகர்ஜி, சங்தேவ் கயர்மொடே, அரவிந்த் சர்மா, ஞான. அலாய்சியஸ், சங்கரன் கிருஷ்ணா, பரம்ஜித் சிங் ஜட்ஜ், கோபால் குரு, சஞ்சய் கஜ்பியே, அனுராக் பாஸ்கர், எலனோர் ஸெல்லியத், நானக்சந்த் ரட்டு, ஏ. ஜி. நாராணி ஆகியோரின் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் மணற்கேணி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஆய்வு நோக்கில் அறிஞர் அம்பேத்கர் எம்.பி. ரவிக்குமார் தொகுத்துள்ள இந்த நூல், அம்பேத்கரின் சாதி குறித்த ஆய்வுகள், அவரது மதமாற்ற அறிவிப்பு, பௌத்தம் குறித்த சிந்தனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

இக்கட்டுரைகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் தலைவர்களின் சிந்தனைகளோடு அம்பேத்கரின் கருத்துகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் தன்மையைக் கொண்டவை. அம்பேத்கரை ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்லாமல், சமூக ஆய்வாளராகவும் புரிந்துகொள்ள உதவும் இந்நூல் மணற்கேணி வெளியீடாக வெளிவந்துள்ளது.

நீலம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள கெயில் ஓம்வெத் எழுதிய சாதியைப் புரிந்துகொள்ளல்: புத்தர் முதல் அம்பேத்கர் வரையிலும் அப்பாலும் (தமிழில் மொழிபெயர்ப்பு: த. ராஜன்) நூல், சாதி அமைப்பையும் சாதி எதிர்ப்பு இயக்கங்களையும் ஆழமாக ஆராயும் முக்கியமான படைப்பு.

பௌத்தம் மற்றும் பக்தி இயக்கங்களிலிருந்து தொடங்கி, புலே, அம்பேத்கர், பெரியார், ரமாபாய், தாராபாய் வரை சாதிக்கு எதிராக எழுந்த சிந்தனைகளையும் போராட்டங்களையும் இந்நூல் வரலாற்று தொடர்ச்சியோடு பதிவு செய்கிறது.

மேலும், நீலம் பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடாக இந்தியாவில் சாதிகள் என்ற அம்பேத்கரின் கட்டுரையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் கட்டுரைகளை, அவர் பேசியவற்றையும் தொகுத்து, தமிழ்நாடு அரசும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து 100 தொகுதிகளாக வெளியிடுகின்றனர். இதை ஏற்கனவே மத்திய அரசு செய்து வந்திருந்தாலும் தற்போது அவர்கள் நிறுத்திவிட்டனர். அதில் முதற்கட்டமாக 27 தொகுதிகள் வெளியாகி உள்ளன. இவை ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டவை. மலிவு விலையாக மக்களுக்கு ஒரு புத்தகம் 100 ரூபாய் என்று 27 புத்தகங்களையும் 2700 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அடுத்த இரண்டு மாதங்களில் இன்னும் 22 தொகுதிகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் பிரசுரத்தின் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகம், அம்பேத்கர் எனும் மகத்தான ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூலாக உள்ளது. தமிழகத்தில் இருக்கும் அம்பேத்கர் சிந்தனையாளர்கள் தொடங்கி சர்வதேச அளவில் அம்பேத்கரின் அரசியலை ஆய்வு செய்பவர்கள் வரை பங்களித்திருப்பது இந்த நூலின் சிறப்பு. தமிழ் வாசகர்கள் மத்தியில் அம்பேத்கர் பற்றிய உன்னதமான ஓர் உரையாடலைத் தோற்றுவிக்கும் நூலாக இது வரவேற்பு பெற்று வருகிறது.

`முதலீட்டில் அவசரம் கூடாது' - ஆனந்த் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கும் முதலீடு சார்ந்த புத்தகங்கள்!

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், பங்குச் சந்தை தொடர்பான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை கணிசமான அளவு ஈர்க்கின்றன.முதலீடு குறித்து அடிப்படை புரிதல் பெற விரும்பும் மாணவர்... மேலும் பார்க்க

"அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன" - ஷாலின் மரியா

வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இன்று காலச்சுவடு பதிப்பக அ... மேலும் பார்க்க