திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக...
CJP: ‘நாங்க கரப்பான்பூச்சி தான்’ - தெறிக்கவிடும் இளைஞர்கள்; ஆளும் கட்சியை அலறவிடும் புதுவித அரசியல்
‘இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்!’ என்ற ஒற்றை முழக்கத்துடன், வெறும் நான்கு நாட்களில், உலகின் மிகப்பெரிய கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆளும் பா.ஜ.க-வையே இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் பின்னுக்குத் தள்ளி இணையத்தில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP).
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒரு கருத்துக்கு எதிராக, கேலியும் கிண்டலுமாகத் தொடங்கப்பட்ட இந்த இணைய வழி இயக்கம், இன்று இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுவித அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் புள்ளிவிவரங்கள் ஒரு அரசியல் ஆயுதமாக மாறிவிட்ட காலத்தில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் இந்த வளர்ச்சி ஆளும் தரப்பை அலற விட்டிருக்கிறது. மே 21 காலை 8.36 மணி நிலவரப்படி, பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 8.7 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் பக்கத்தை 10.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
இது குறித்து அதன் நிறுவனர் அபிஜீத் டிப்கே, "இதற்கு வெறும் நான்கு நாட்கள்தான் ஆனது. இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்!" என்று பதிவிட்டு, "உலகின் மிகப்பெரிய கட்சி என்றார்களே..." என பா.ஜ.க-வை சீண்டியுள்ளார். வெறும் 56 பதிவுகளை மட்டுமே கொண்ட ஒரு பக்கம், 18,000-க்கும் மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட பா.ஜ.க பக்கத்தை முந்தியது, இந்த இயக்கத்தின் வேகத்தை காட்டுகிறது.
யார் இந்த அபிஜீத் டிப்கே?
இந்த டிஜிட்டல் புரட்சியின் பின்னணியில் இருப்பவர், 30 வயதான அபிஜீத் டிப்கே. அரசியல் தகவல் தொடர்பு வகுப்பாளரான இவர், தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். புனேவில் இதழியல் படித்த இவர், 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சியின் வெற்றிக்காக, இளைஞர்களைக் கவரும் வகையில் மீம்ஸ்களை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் பிரச்சாரங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

‘கரப்பான்பூச்சி’ என்ற பெயர் ஏன்?
இந்த இயக்கம் உருவாகக் காரணம், மே 15 அன்று நடந்த ஒரு நீதிமன்ற விசாரணையின் போது, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், வேலையில்லாத சில இளைஞர்கள் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என தங்களை அழைத்துக்கொண்டு அனைவரையும் தாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டபோது, அவர்களை "கரப்பான்பூச்சிகள்" என ஒப்பிட்டதாக வெளியான செய்திதான். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
பின்னர், தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த கருத்து இணையத்தில் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "இந்திய ஜனநாயகம் போன்ற ஒரு நாட்டில், அரசியலமைப்பின் பாதுகாவலராக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே, இளைஞர்களின் விமர்சனங்களை இப்படி இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அபிஜீத் டிப்கே கூறியுள்ளார்.
‘சோம்பேறிகள் மற்றும் வேலையற்றவர்களின் குரல்’
‘சோம்பேறிகள் மற்றும் வேலையற்றவர்களின் குரல்’ என்பதைத் தங்களது தாரக மந்திரமாகக் கொண்டுள்ள இந்த கட்சி, "அரசியல் அமைப்பு யாரை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள மறந்ததோ, அவர்களுக்கான பிரதிநிதிகள் நாங்கள்" என்று தங்களது இணையதளத்தில் பிரகடனப்படுத்தியுள்ளது. "நாங்கள் PM CARES போன்ற நிதிகளை உருவாக்கவோ, மக்களின் வரிப்பணத்தில் வெளிநாடுகளில் விடுமுறையைக் கழிக்கவோ, அல்லது ஊழலுக்கு ‘வியூகச் செலவு’ என்று பெயர் சூட்டவோ வரவில்லை. எங்கள் பணம் எங்கே போனது என்று உரக்கக் கேட்க வந்துள்ளோம்," என்று ஆளும் வர்க்கத்தை நேரடியாகத் தாக்கிப் பேசுகிறது இவர்களின் இணையதளம்.
இவர்களின் ஐந்து அம்சக் கொள்கை அறிக்கை, ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அமைச்சரவையில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சி தாவும் எம்.எல்.ஏ, எம்.பி-க்களுக்கு 20 ஆண்டுகள் தடை, ‘கோடி மீடியா’ என்று அவர்கள் குறிப்பிடும் ஊடக நெறியாளர்களின் வங்கிக் கணக்குகளை விசாரிக்க வேண்டும், முறையான வாக்குகள் நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையர் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு ராஜ்யசபா பதவிகளை ஏற்கத் தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற அதிரடி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த இயக்கம் எதிர்க்கட்சித் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத், "நான் காக்ரோச் ஜனதா கட்சியில் சேர விரும்புகிறேன். என்ன தகுதிகள் தேவை?" என்று எக்ஸ் தளத்தில் கேட்க, அதற்கு, "1983 உலகக் கோப்பையை வென்றதே ஒரு நல்ல தகுதிதான்" என்று கட்சி பதிலளித்துள்ளது.
மற்றொரு திரிணாமுல் தலைவர் மஹுவா மொய்த்ராவும் இதில் சேர விருப்பம் தெரிவித்தபோது, "ஜனநாயகத்திற்குத் தேவையான போராளி" என கட்சி அவரை வரவேற்றுள்ளது. அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வெறும் கேலி, கிண்டலாகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இன்று இந்திய இளைஞர்களின் விரக்தியையும், கோபத்தையும் பிரதிபலிக்கும் ஒரு சக்திவாய்ந்த டிஜிட்டல் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.











